டுபிளசி அதிரடி சதம்! இந்திய அணிக்கு 270 ரன்கள் இலக்கு | South Africa Sets 270 runs target to India

வெளியிடப்பட்ட நேரம்: 20:34 (01/02/2018)

கடைசி தொடர்பு:20:46 (01/02/2018)

டுபிளசி அதிரடி சதம்! இந்திய அணிக்கு 270 ரன்கள் இலக்கு

CRICKET

Photo Credit: BCCI

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரை 1-2 என்றக் கணக்கில் இந்திய அணி இழந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டி டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில்  இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் டுபிளசி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். கோலி தலைமையிலான இந்திய அணி குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. 

தென்னாப்பிரிக்க அணியில் துவக்க வீரர்களாக டீ காக், அம்லா களமிறங்கினார்கள். இருவரும் நிதானமாக ஆடினார்கள். ஸ்கோர் 30 ஆக உயர்ந்தபோது பும்ரா பந்துவீச்சில் அம்லா எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவர் 16 ரன்கள் எடுத்தார். அடுத்து கேப்டன் டுபிளசி களமிறங்கினார். டீ காக் 34 ரன்களில் (49 பந்து, 4 பவுண்டரி) அவுட்டானார். அதன்பிறகு தென்னாப்பிரிக்க அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. நடுவரிசை வீரர்கள் சொதப்பினார்கள். மார்க்ரம் (9 ரன்), டுமினி 12 (ரன்), மில்லர் (7 ரன்) அடுத்தடுத்து அவுட்டானார்கள். இதனால் 134 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா தடுமாறியது. அந்த அணி குறைந்த ரன்னில் கட்டுப்படுத்தப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

CRICKET

Photo Credit: BCCI
 

ஆனால் அடுத்து களமிறங்கிய மோரிஸ் அதற்கு முட்டுக்கட்டை போட்டார். டுபிளசியுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அணியின் ஸ்கோர் 200 ரன்களைக் கடந்தது. ஸ்கோர் 208 ரன்னாக உயர்ந்தபோது மோரிஸ், குல்தீப் யாதவ் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 43 பந்துகளைச் சந்தித்த மோரிஸ் 4 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 37 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு அதிரடி காட்டிய கேப்டன் டுபிளசி சதத்தைக் கடந்தார். கடைசி ஓவரில் புவனேஷ்வர் பந்துவீச்சில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்த டுபிளசி 120 ரன்கள் சேர்த்தார். 112 பந்துகளைச் சந்தித்த அவர் 11 பவுண்டரி, 2 சிக்ஸருடன் இந்த ரன்னை எடுத்தார். 50 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் சேர்த்தது. பெலுக்வாயோ 27 ரன்னுடனும் (33 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்ஸர்), மோர்னே மோர்கல் ரன் எதுவும் எடுக்காமலும் களத்திலிருந்தனர். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும், சஹால் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். புவனேஷ்வர் குமார், பும்ரா தலா 1 விக்கெட் கைப்பற்றினர். இந்திய அணி 270 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.