வெளியிடப்பட்ட நேரம்: 00:45 (02/02/2018)

கடைசி தொடர்பு:10:57 (02/02/2018)

கோலி - ரஹானே அசத்தல் பார்ட்னர்ஷிப்... முதல் ஒரு நாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா!

ந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே டர்பன் நகரில் நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா அணி

Photo Courtesy: twitter.com/BCCI

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் கேப்டன் டூப்ளஸிஸ் அதிரடியாக ஆடி 112 பந்துகளில் 120 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கிறிஸ் மோரிஸ் 37 ரன்களும், டி காக் 34 ரன்களும் எடுத்தனர். இந்தியத் தரப்பில் இரண்டு ஸ்பின்னர்களும் விக்கெட் வேட்டையில் இறங்கினர். குல்தீப் யாதவ் வீசிய பத்து ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களைச் சாய்த்தார். சஹால் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். 50 ஓவர்கள் முடிவில், தென்னாப்பிரிக்கா அணி 8 விக்கெட்களை இழந்து 269 ரன்கள் குவித்தது.

கோலி - ரஹானே அசத்தல் பார்ட்னர்ஷிப்

Photo Courtesy: twitter.com/BCCI

270 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி 33 ரன்களைக் கடந்தபோது முக்கிய விக்கெட்டான ரோஹித் ஷர்மாவை இழந்தது. மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தவான் 35 ரன்களில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். ஆனால், அதன்பின் கேப்டன் விராட் கோலி மற்றும் ரஹானே இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இரவு நேரத்தில் விளக்குகளின் நடுவே, விக்கெட்டை இழந்துவிடாமல், முதலில் பொறுமை காத்து, பின்னர் அதிரடி காட்டி அசத்தினர். சிறப்பாக ஆடிய கோலி ஒரு நாள் போட்டிகளில் தனது 33-வது சதத்தைப் பதிவு செய்தார். சேஸிங்கில் அவர் அடிக்கும் 20-வது சதம் இது! அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரஹானே அதைப் பூர்த்தி செய்யும் விதமாக 79 ரன்கள் குவித்தார். இதில் இரண்டு இமாலய சிக்ஸர்களும் அடங்கும்.

45.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து வெற்றி இலக்கான 270 ரன்களை இந்தியா எட்டியது. ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றி மூலம், தென் ஆப்பிரிக்கா தன் சொந்த மண்ணில் தொடர்ந்து 17 வெற்றிகள் பெற்று அசைக்க முடியாத நிலையில் இருந்ததை இந்தியா மாற்றியுள்ளது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க