வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (02/02/2018)

கடைசி தொடர்பு:12:15 (02/02/2018)

’’வாழ்நாள் தடை நீங்குமா?’’ - பி.சி.சி.ஐ-க்கு எதிரான ஸ்ரீசாந்தின் மனு விசாரணைக்கு ஏற்பு!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது. 

கடந்த 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்துக்கு வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான வழக்கிலிருந்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் ஸ்ரீசாந்தை விடுவித்தது. இதையடுத்து, தனக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கக் கோரி கேரள உயர்  நீதிமன்றத்தில் ஸ்ரீசாந்த் வழக்குத் தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்ற தனி நீதிபதி கொண்ட அமர்வு, ஸ்ரீசாந்த் மீதான வாழ்நாள் தடையை நீக்கி கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக பி.சி.சி.ஐ. தரப்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து கேரள உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட்டது. 

இதை எதிர்த்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசௌத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக ஸ்ரீசாந்த் தரப்பில் முறையிடப்பட்டது. ஸ்ரீசாந்தின் முறையீட்டை அடுத்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், மேல்முறையீட்டு மனுவை வரும் 5-ம் தேதி விசாரிக்கவும் ஒப்புக்கொண்டது. சுழற்சி முறையில் நீதிபதிகளுக்கு வழக்குகள் ஒதுக்கப்படுவதால், ஸ்ரீசாந்த் வழக்கை எந்த அமர்வு விசாரிக்கும் என்பது விரைவில் தெரியவரும்.