பிரகாஷ் படுகோனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!- ஆனந்தக் கண்ணீரில் பத்மாவத்' நாயகி | Deepika in tears as father Prakash Padukone receives BAI award

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (02/02/2018)

கடைசி தொடர்பு:18:20 (02/02/2018)

பிரகாஷ் படுகோனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!- ஆனந்தக் கண்ணீரில் பத்மாவத்' நாயகி

தீபிகா படுகோன் அளவுக்கு பிரகாஷ் படுகோனைப் பற்றி அதிகம் தெரிந்திருக்க மாட்டோம். இந்தியாவில் பேட்மின்டன் விளையாட்டு அவ்வளவாகப் பிரபலமாகாத காலத்தில், புகழின் உச்சத்தில் இருந்தவர் பிரகாஷ். இவரின் மகள்தான், 'பத்மாவத்' நாயகி தீபிகா படுகோன். பேட்மின்டன் விளையாட்டில் கௌரவம் மிக்க போட்டியாகக் கருதப்படும் ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தொடரில், 1980-ம் ஆண்டு சாம்பியனாகிச் சாதித்தவர், பிரகாஷ் படுகோன். ஆல் இங்கிலாந்து தொடரில் சாம்பியனான முதல் இந்தியர் இவர்தான். பின்னர், கோபிச்சந்தும் இந்த கௌரவத்தை எட்டினார். 

பிரகாஷ் படுகோனுக்கு விருது

அகில இந்திய பேட்மின்டன் சங்கம் சார்பாக, முதன்முறையாக 'வாழ்நாள் சாதனையாளர் விருது' அளிக்க முடிவுசெய்யப்பட்டிருந்தது. இந்த விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்டிருந்த  பிரகாஷ் படுகோனுக்கு டெல்லியில் நடந்த விழாவில், குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு விருதை வழங்கினார். விருது வழங்கும் விழாவில் பிரகாஷ் படுகோன் குடும்பத்தினர் பங்கேற்றனர். தந்தைக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும்போது, தீபிகாவின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது. 

பிரகாஷ் படுகோனுக்கு விருது

விழாவில் பேசிய பிரகாஷ் படுகோன், ''கிரிக்கெட்டுக்கு அடுத்ததாக பேட்மின்டன் இந்தியாவில் பிரபலமான விளையாட்டாக மாற வேண்டுமென்பது என் ஆசை. பேட்மின்டனில் இப்போது நிறைய மாற்றங்களைப் பார்க்கமுடிகிறது. புதிய வீரர், வீராங்கனைகள் உருவாகிக்கொண்டிருக்கின்றனர். நிறையத் தொடர்கள் நடக்கின்றன. ஸ்பான்ஸர்ஷிப் வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. பேட்மின்டன் மீதுள்ள காதலும் ஆர்வமும்தான் என்னை இந்த விளையாட்டில் ஈடுபட வைத்தது. பணம், விருதுகுறித்து நான் கவலைப்பட்டதில்லை. நான் விளையாடிய காலத்தில் கிடைத்த வசதிகளைக்கொண்டு, என்னால் முடிந்தவரை சாதித்தேன். பேட்மின்டன் விளையாடும்போது, எனக்கு ஆத்மதிருப்தி கிடைத்தது. எதிர்பார்த்ததைவிட அதிகம் சாதித்துவிட்டதாகவே உணர்கிறேன்'' என்றார். 
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க