“சர்தார்ஜி வேஷமிட்டேன்!”- மனம்திறக்கும் கங்குலி | Cricketer Sourav Ganguly Became a Sardaarji to attend Durga Puja

வெளியிடப்பட்ட நேரம்: 18:40 (02/02/2018)

கடைசி தொடர்பு:18:40 (02/02/2018)

“சர்தார்ஜி வேஷமிட்டேன்!”- மனம்திறக்கும் கங்குலி

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி, துர்கா பூஜை பார்ப்பதற்காக சர்தார்ஜி வேடமிட்டதாக, தான் எழுதிய புத்தகத்தில் கூறியுள்ளார்.


சௌரவ் கங்குலி 'ஒரு நூற்றாண்டு போதாது' என்ற தலைப்பில் தன் வாழ்வில் நடந்த சம்பவங்களைக்கொண்டு ஒரு நூல் எழுதியுள்ளார். இம்மாத இறுதியில் இந்த நூல் வெளியாக இருக்கிறது.  அதில், தன் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.  அதில், அவர் துர்கா பூஜை பார்க்க சர்தார்ஜி வேஷம் போட்டதும் ஒன்று.
கங்குலிக்கு கூட்டத்தோடு கூட்டமாக துர்கா பூஜை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற அலாதி விருப்பம். ஆனால், அவர் அனைவரும் அறிந்த முகமாக இருப்பதால், அது இயலாத காரியமாக இருந்தது. கங்குலி, இந்தியக் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த சமயம் அது. மாறுவேடம் போட்டுக்கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக பூஜையில் கலந்துகொள்ள முடிவெடுத்து, அதற்காக சர்தார்ஜி வேடம்  போட தீர்மானித்துள்ளார். கங்குலிக்கு சர்தார்ஜி வேடம்போட அவருடைய மனைவி டோனா கங்குலி ஒரு ஒப்பனைக் கலைஞரை ஏற்பாடுசெய்துள்ளார். ஆனால், அது அவ்வளவு  பொருத்தமாக இல்லை.

அப்போதே கங்குலியின் உறவினர்கள், 'உங்களை கூட்டம் அடையாளம் கண்டுகொள்ளும்' என்று கங்குலியிடம் கூறியிருக்கிறார்கள். எனினும், அதை கங்குலி ஒரு சவாலாக எடுத்துக்கொண்டார். உறவினர்கள் சொன்னதுபோலவே, போலீஸார் கங்குலியை அடையாளம் கண்டுகொண்டனர். அவரை டிரக்கில் செல்ல அனுமதிக்கவில்லை. காரில் சென்றே பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றார். காரில் இருந்தபோதும் போலீஸ்காரர் ஒருவர் கங்குலியை அடையாளம் கண்டுகொண்டார். அவரிடம், வேறு யாரிடமும் இதைச் சொல்ல வேண்டாம் என்று கங்குலி கேட்டுக்கொண்டாராம். அதன்பிறகு பூஜை நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.

இவ்வாறு தான் மாறுவேடமிட்ட கதையை கங்குலி அந்தப் புத்தககத்தில் கூறியுள்ளார். மேலும், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறும் முடிவெடுக்கக் காரணம், கடைசி டெஸ்ட் தொடர், கடைசி இன்னிங்ஸ், கடைசி டெஸ்டில் அணியை வழிநடத்த அப்போதைய கேப்டன் டோனி தன்னிடம் கேட்டுக்கொண்டது உள்ளிட்டவைகுறித்தும் கங்குலி அந்தப் புத்தகத்தில் விவரித்துள்ளார்.