என்மீது வெளிச்சம் வேண்டாம்... இது அனைவரின் உழைப்புக்குமான வெற்றி, நெகிழும் டிராவிட் #U19CWC | Dravid Praised U19 indian Cricket Team

வெளியிடப்பட்ட நேரம்: 16:08 (03/02/2018)

கடைசி தொடர்பு:16:08 (03/02/2018)

என்மீது வெளிச்சம் வேண்டாம்... இது அனைவரின் உழைப்புக்குமான வெற்றி, நெகிழும் டிராவிட் #U19CWC

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. 


இந்தியக் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்து வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர் ராகுல் டிராவிட். அணிக்குக் கிடைத்த வெற்றிக்குப்பின் டிராவிட் பேசுகையில், “அணி வீரர்களை நினைத்து நான் பெருமிதப்படுகிறேன். அவர்கள் காட்டிய தீவிர முயற்சிக்கு இந்தப் பலன் கிடைத்துள்ளது. அவர்களின் வாழ்வில் இது முக்கியமான தருணம். இதுவே முக்கியமானதல்ல. இதைவிட பல முக்கியமான தருணங்களை அவர்கள் சந்திக்க நேரிடும். அனைவரின் வெளிச்சமும் என்மீது படுவதை நான் விரும்பவில்லை. நான் மட்டுமே அணிக்காக உழைக்கவில்லை. பயிற்சிக்குழுவில் என்னோடு இணைந்து ஏழெட்டுப் பேர் கடுமையாக உழைத்துள்ளனர். இது அனைவரின் உழைப்புக்குமான வெற்றி” என்றார்.

DRAVID


கிரிக்கெட்டின் சுவர் என்று அழைக்கப்படும் டிராவிட் இந்திய அணிக்காக விளையாடி பல சாதனைகள் செய்தவர். ஒருகாலத்தில் டிராவிட், சச்சின், கங்குலி மூவரும் இந்திய அணியின் மும்மூர்த்திகளாக இருந்தனர். ஓய்வுக்குப் பின்னர் சச்சின் மற்றும் கங்குலி இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியப் பொறுப்புகளுக்குச் செல்ல டிராவிட் இளைஞர்களைத் தயார்படுத்தும் பணியைத் தேர்வு செய்தார். அவருடைய பயிற்சியின்கீழ் இந்திய இளையோர் அணி ஒரு தோல்விகூட அடையாமல் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது.