''செஞ்சூரியனில் பட்டையைக் கிளப்பிய குல்தீப் - சஹால் ஜோடி!'' - 118 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா | south africa sets 119 runs target to india on 2nd ODI

வெளியிடப்பட்ட நேரம்: 16:02 (04/02/2018)

கடைசி தொடர்பு:16:10 (04/02/2018)

''செஞ்சூரியனில் பட்டையைக் கிளப்பிய குல்தீப் - சஹால் ஜோடி!'' - 118 ரன்களில் சுருண்டது தென்னாப்பிரிக்கா

இந்திய அணிக்கெதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 118 ரன்களில் ஆட்டமிழந்தது. 

Photo: Twitter/ICC

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 6 போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடுகிறது. அண்மையில் முடிந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் தொடங்கியது. டர்பன் கிங்ஸ்மெட் மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி செஞ்சூரியன் சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஃபீல்டிங் தேர்வு செய்தார். முதல் போட்டியில் களம் கண்ட அதே வீரர்களுடன் இந்திய அணி களம் கண்டது. தென்னாப்பிரிக்கா அணியில் காயம் காரணமாக கேப்டன் டுபிளஸி விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக இளம் வீரர் மார்க்ரம் கேப்டனாகச் செயல்பட்டார். முதலில் பேட் செய்ய களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான் கிடைத்தது. 51 ரன்கள் எடுப்பதற்குள் அந்த அணி முக்கியமான 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணியின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தென்னாப்பிரிக்கா வீரர்கள் அடுத்ததுது ஆட்டமிழந்து வெளியேறினர். ஒரு கட்டத்தில் 99 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் என்ற சூழலில் விளையாடிக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்க அணி 32.2 ஓவர்களில் 118 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய சஹால் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளையும், குலதீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் சஹால் எடுக்கும் முதல் 5 விக்கெட்டுகள் இதுவாகும். அதேபோல், தென்னாப்பிரிக்க அணி, தனது சொந்த மண்ணில் எடுத்த குறைவான ஸ்கோர் இதுவே.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க