'இறுதிப்போட்டியில் கலக்கிய பஞ்சாப் வீரர்கள்!' - ஜூனியர் உலகக்கோப்பை ஹைலைட்ஸ்

நியூசிலாந்தில் பே ஓவல் மைதானத்தில் நேற்று (3.2.2018) நடந்த ஜூனியர் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி நான்காவது முறையாக இளம் இந்திய அணி கோப்பையை வென்று அசத்தியது. 

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலகக் கோப்பை தொடரில் டிராவிட் பயிற்சியின் கீழ் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸிடம் கோப்பையை நழுவவிட்டது. கடந்த முறை செய்த தவறுகளை சரி செய்த டிராவிட் தலைமையிலான இந்திய அணி, இந்த முறை கோப்பை வென்று சரித்திரம் படைத்தது. இந்த தொடரில் பங்கேற்ற அனைத்துப் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தநிலையில், உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் விளையாடியுள்ளனர். அதில், 2 வீரர்கள் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஆம், ஆஸ்திரேலிய அணி கேப்டனாக செயல்பட்ட ஜேசன் சங்கா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். பஞ்சாப் மாநிலம் படிண்டா தான் இவருக்கு பூர்விகம். 1980-களில் இவரது தந்தை குலதீப் சங்கா ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர, தற்போது அங்கேயே செட்டிலாகிவிட்டனர். இவரைப்போலவே, ஆஸ்திரேலிய அணியின் மற்றோர் வீரர் பரம் உப்பலும் பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்தவர் ஆவார். இவர்களை தவிர இந்திய அணியில் இடம்பெற்றிருந்த சுப்மன் கில், அபிஷேக் சர்மா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!