வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (05/02/2018)

கடைசி தொடர்பு:21:40 (05/02/2018)

முகத்தில் காயத்துடன் களமிறங்கிய உன்முக்த் சந்த் சதம் அடித்து அசத்தல்..!

காயம்பட்ட தாடையில் பேன்டேஜுடன் களமிறங்கிய டெல்லி கிரிக்கெட் அணியின் உன்முக்த் சந்த் 116 ரன்களைக் குவித்தார். 

உள்ளூர் கிரிக்கெட் அணிகளுக்கான விஜய் ஹசாரே கோப்பைக்கான தொடர் நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. இன்று உத்தரப் பிரதேசம் மற்றும் டெல்லி அணிகள் போட்டியிட்டன. முதலில் பேட் செய்த டெல்லி அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய உத்தரப்பிரதேச அணி 45 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 252 ரன்களை மட்டுமே எடுத்தது. இதையடுத்து, டெல்லி அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக, டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் உன்முக்த் சந்த் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருக்கும்போது, அவர் தாடையில் அடிபட்டது. அதனால், தாடைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர், காயமடைந்தநிலையிலும் பேன்டேஜ் அணிந்துகொண்டு தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கினார். அதிரடியாக ஆடிய அவர், 125 பந்துகளில் 116 ரன்கள் எடுத்தார். காயம்பட்ட நிலையிலும் களமிறங்கிய உன்முக்த்துக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில்கும்ளே, 2002-ம் ஆண்டு முகத்தில் பேன்டேஜுடன் களமிறங்கியது ரசிகர்களிடையே பெரும் பாராட்டைக் பெற்றுக் கொடுத்தது.