வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (07/02/2018)

கடைசி தொடர்பு:09:34 (07/02/2018)

’’குல்தீப், சஹால் இருவரில் இவர் பந்துவீச்சை சந்திப்பது கடினம்!’’ - ஷிகர் தவான் சொல்லும் காரணம்

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 3-வது ஒருநாள் போட்டி, கேப்டவும் நியூலேண்ட்ஸ் மைதானத்தில் இன்று (7.2.2108) நடக்கிறது.

6 போட்டிகள்கொண்ட ஒருநாள் தொடரில், ஏற்கெனவே 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள இந்திய அணி, 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருக்கிறது. முன்னணி வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் மற்றும் சுழற்பந்துவீச்சை சமாளிப்பதில் தடுமாற்றம் ஆகிய காரணங்களால், தென்னாப்பிரிக்க அணி நடப்பு ஒருநாள் தொடரில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 

இந்த நிலையில், போட்டிக்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானிடம், குல்திப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இருவரில் யார் பந்துவீச்சைக் கணிப்பது கடினம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த தவான், ‘என்னைப் பொறுத்தவரை சைனா மேல் குல்தீப் யாதவின் பந்துவீச்சைக் கணிப்பது எப்போதுமே கடினமான ஒன்று. அதேநேரம், சஹாலின் கூக்ளி பந்துவீச்சைக் கணிக்க முடியாத வீரர்களும் இருக்கின்றனர். எனக்கு குல்தீப் யாதவின் பந்துவீச்சை சரியாகக் கணிப்பது கடினம் என்றே தோன்றுகிறது.

ரிஸ்ட் ஸ்பின்னர்களின் பந்துவீச்சை எதிர்த்து ஆடுவது கடினம். ஏனென்றால், எல்லா ஆடுகளங்களிலும் அவர்களால் பந்தை சுழலவைக்க முடியும். குறிப்பாக, வெளிநாட்டு வீரர்கள். பொதுவாகவே, அவர்கள் சுழற்பந்துவீச்சாளர்களை அதிகம் எதிர்கொண்டதில்லை. எனவே, ரிஸ்ட் ஸ்பின்னர்கள், பேட்ஸ்மேனின் மனதில் பந்துவரும் திசைகுறித்து சந்தேகங்களை எழுப்பலாம். அதைச் சாதகமாகப் பயன்படுத்தி அவர்களால் விக்கெட் எடுக்க முடிகிறது. பந்து வரும் திசைகுறித்து உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், அது உங்கள் பேட்டிங்கில் எதிரொலிக்கும்’ என்றார்.