இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க தென்னாப்பிரிக்காவின் மாஸ்டர் பிளான்!

இந்திய வீரர்களின் சுழற்பந்துவீச்சை சமாளிக்க, தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் 5 சுழற்பந்துவீச்சாளர்களுடன் பயிற்சி மேற்கொண்டனர். 

Photo: Twitter/OfficialCSA

இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்ற தென்னாப்பிரிக்கா, ஒருநாள் தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியிருக்கிறது. இதனால், கேப்டவுனில் நடைபெறும் இன்றைய போட்டியில் வெற்றிப்பாதைக்குத் திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் குல்தீப் யாதவ் மற்றும் யுஷ்வேந்திர சஹால் இணையின் பந்துவீச்சு தென்னாப்பிரிக்க பேட்டிங் ஆர்டரை சீர்குலைத்தது. முதல் இரண்டு போட்டிகளில் 13 விக்கெட்டுகளை அவர்கள் கைப்பற்றினர். ரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் போதிய அனுபவம் இன்மையே இதற்குக் காரணம் என்று தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. அதேபோல், டிவிலியர்ஸ், கேப்டன் டு பிளசி மற்றும் விக்கெட் கீப்பர் டிகாக் ஆகியோர் காயம் காரணமாக விளையாடாததும், தென்னாப்பிரிக்க அணிக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.      

இந்த நிலையில், மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக வலைப்பயிற்சியில் ஈடுபட்ட தென்னாப்பிரிக்க அணியின் பேட்ஸ்மேன்களுக்குப் பந்துவீசுவதற்காக 5 சுழற்பந்துவீச்சாளர்களை அந்த அணி நிர்வாகம் அழைத்துள்ளது. சுழற்பந்துவீச்சை எதிர்க்கொள்வது குறித்து சீனியர் வீரர்களான ஹஷிம் அம்லா, இம்ரான் தாஹீர் உள்ளிட்டோரும் இளம் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர். 

மூன்றாவது ஒருநாள் போட்டி குறித்துப் பேசிய தென்னாப்பிரிக்க அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா, ``முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் எங்கள் அணியின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது. அணியில் சில மாற்றங்களை ஏற்படுத்திவிடுவதன் மூலம் வெற்றி பெற்றுவிட முடியாது. சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பின்னர், வெற்றிப்பாதைக்குத் திரும்புவதில் பின்னடைவைச் சந்தித்து வருகிறோம். விரைவில் வெற்றிப்பாதைக்குத் திரும்புவோம். இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது’’ என்றார். 3-வது ஒருநாள் போட்டி நடைபெறும் கேப்டவுன் மைதானத்தில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியுள்ள 33 ஒருநாள் போட்டிகளில், 5 போட்டிகளில் மட்டுமே தோற்றிருக்கிறது.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!