வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (07/02/2018)

கடைசி தொடர்பு:13:30 (07/02/2018)

``பாகிஸ்தானில் சதமடிப்பது எளிதானதல்ல!’’ - விராட் கோலிக்கு சவால்விட்ட பாக். பயிற்சியாளர்

இந்தியக் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாகிஸ்தான் மண்ணில் சதமடிப்பது கடினம் என்று அந்த அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கருத்து தெரிவித்துள்ளார். 

சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோலி புகழப்படுகிறார். தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் ஒரு நாள் போட்டியில் சதமடித்த கோலி, அதன்மூலம் தான் விளையாடிய 9 நாடுகளிலும் சதமடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். பாகிஸ்தானில் அவர் விளையாடவில்லை என்பதால், மற்ற 9 நாடுகளில் சதமடித்தவர் என்கிற பெருமையை அவர் பெற்றார்.

இந்தநிலையில், விராட் கோலியின் பேட்டிங் திறமை குறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ‘‘சிறந்த பேட்ஸ்மேன்களுள் ஒருவரான விராட் கோலி பேட்டிங் செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கும். மற்ற அணிகளுக்கு எதிராக அவரது பேட்டிங்கை நான் ரசித்ததுண்டு. ஆனால், பாகிஸ்தான் மண்ணில் அவர் சதமடிப்பதை எங்கள் வீரர்கள் தடுத்து விடுவார்கள். எங்கள் பந்துவீச்சாளர்கள் அவர் ரன்குவிப்பதைக் கடினமாக்கிவிடுவார்கள். பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவரால் இயல்பாக ரன்குவிக்க முடியாது. அதேபோல், பாகிஸ்தான் மண்ணில் அவர் சதமடிப்பது கடினம்’’ என்று கூறியுள்ளார். மிக்கி ஆர்தரின் இந்த விமர்சனம் கிரிக்கெட் உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.