Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

கேஷவ் மஹராஜ்... இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் போட்டோ எடுக்கப் போராடியவன் இன்று தென்னாப்பிரிக்க வீரர்! #HBDKeshav

1992-93 ம் ஆண்டு, இனவெறி முடிவுக்கு வந்ததை நினைவுபடுத்தும்விதமாக தென்னாப்பிரிக்காவுடன் நடந்த கிரிக்கெட் போட்டியின்போது எடுக்கப்பட்ட படம் அது. சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட அந்த வெளிறிய புகைப்படத்தை கிரண் மூரே தன்னுடைய செல்போனில் இன்றும் வைத்துள்ளார். அவருடைய கோட், தோளில் தொங்கிக்கொண்டிருக்க, வெறும் கால்களோடு நீல நிறச் சட்டையும் குட்டி டிரவுசரும் அணிந்திருந்த ஒரு குட்டிப்பையனோடு எடுக்கப்பட்ட புகைப்படம் அது. அந்தச் சிறுவன் இன்று தென்னாப்பிரிக்க அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர்!

கேஷவ் மஹராஜ்

27 வயதில் சர்வதேச கிரிக்கெட் ஆட்டக்காரராக வளர்ந்துள்ள கேஷவ் மஹராஜ், இன்று தென்னாப்பிரிக்காவின் ஒரே இடதுகை சுழற்பந்து வீச்சாளர். இந்திய அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் அவர் எடுத்த 35 ரன், அந்த அணி முன்னிலை பெறுவதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தது. இந்திய அணியுடனான மிக முக்கியத் தொடருக்குத் தேர்வானதே மிகப்பெரிய விஷயம். ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் அவர் எடுத்த ஐந்து விக்கெட்டுகளே, இந்திய அணிக்கு எதிரான பிளேயிங் லெவனில் இவரை எடுப்பதற்கு முக்கியமான காரணம். 

அந்தப் புகைப்படத்தை வாங்கியவர், கேஷவின் தந்தை ஆத்மானந்த். ஒப்பந்தத் தொழிலாளரான தன்னுடைய கொள்ளுப்பாட்டன் பிறந்த மண்ணான இந்தியாவின் கிரிக்கெட் வீரர்களோடு தன் மகன் விளையாடியதை எண்ணி பூரிப்படைந்துள்ளார். அந்த மஞ்சள் நிறமேறிய புகைப்படத்துக்குப் பின்னால், கிரிக்கெட் மீது தீராத விருப்பம்கொண்ட ஓர் அப்பாவும், அவர் மேற்கொண்ட தியாகங்களும், தன் மகனுக்குள் விதைத்த கனவுகளும்தான் பசுமையாகத் தெரிகின்றன.

அந்தப் புகைப்படம் எடுத்தபோதே மஹராஜின் கைகளைத் தொட்டு, ``இவன் மிகப்பெரிய கிரிக்கெட் வீரன் ஆவான்" என்று சொல்லியிருக்கிறார் மூரே. ``கேஷவ் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2016-ம் ஆண்டில் களமிறங்கியபோது அவர் இந்தப் புகைப்படத்தை எனக்கு அனுப்பி அந்த நிகழ்வை நினைவுகூர்ந்தார். நெடுநாள்களாக நாங்கள் மற்றொருவருடைய குடும்பத்தாரோடு நல்லுறவு பாராட்டி வருகிறோம்” என்றார் மூரே.

கேஷவ் மஹராஜ்

இந்த முப்பது வருட நட்புறவு என்பது, அவர்களுக்கு அவ்வளவு எளிதாக இல்லை. தற்செயலாக நடந்த பல நிகழ்வுகள், விதி என்று எல்லாம் ஒன்றிணைந்துதான் இவர்களுக்கு இந்த நட்பை அளித்திருக்கிறது. அதன் பிறகுதான் அவர் குழந்தை கேஷவ்வின் உள்ளங்கைகளைப் பார்த்து ஆருடம் கூறியது நடந்தேறியிருக்கிறது. பன்மைத்துவத்தைப் புதிதாக அங்கீகரித்து அதைக் கொண்டாடிய தென்னாப்பிரிக்கா, கடைசியாக சர்வதேசப் போட்டிகளைச் சொந்தநாட்டில் கண்டுகளிக்க முடியும் என உற்சாகம்கொண்டது. பலகட்ட அங்கீகாரங்களுக்குப் பிறகு, அன்று இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் விளையாட முடிந்தது. 

``விமான நிலையத்திலிருந்து எங்களுக்கு பலமான வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த கார்களில் நாங்கள் நின்றுகொண்டே வந்தோம். எங்களைத் தொட்டுப்பார்த்தால் போதும் என எண்ணுபவர்கள்கூட இருந்தார்கள். எங்கு சென்றாலும் எங்களுக்கு மக்கள் நன்றி கூறினார்கள்” என நினைவுகூர்கிறார் மூரே. இந்தியாவிலிருந்து வந்திருந்த விருந்தினர்களோடு நேரம் ஒதுக்க வேண்டும், கிரிக்கெட் பற்றி உரையாட வேண்டும் என எண்ணியிருந்தார் ஆத்மானந்த். அவர் மட்டுமல்ல, இந்தியர்கள் அதிகம் வாழும் டர்பன் நகரமும் அதை எதிர்பார்த்துக் காத்திருந்தது. ஆனால், அவர்களுக்கு விதி வேறு சில திட்டங்களை வைத்துக்காத்திருந்தது. 

``என்னுடைய நண்பர் அஜய் குப்தா, ஒரு மாலுமி. அவருடைய தாத்தா, இந்தியாவுக்காகக் கிரிக்கெட் விளையாடியவர். அவர் அவ்வப்போது டர்பன் வந்து செல்வார். அதிர்ஷ்டவசமாக, இந்திய கிரிக்கெட் வீரர்கள் இங்கு வந்தபோது அவர் என் வீட்டில் இருந்தார். அவருக்குத் தெரிந்தவர்கள் யாராவது அணியில் இருக்கிறார்களா என்றும், அவர்களை நான் சந்திக்கலாமா என்றும் நான் அவரைக் கேட்டேன். அவர் பிரவீன் ஆம்ரேவைக் குறிப்பிட்டுச் சொன்னார். அவர்கள் இருவரும் ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் என நான் நினைக்கின்றேன். ஒருவேளை நான் ஆம்ரேவைச் சந்தித்தேன் என்றால், நான் அவருடைய பெயரைக் குறிப்பிட வேண்டும் என்று அவர் கூறினார்” என்கிறார் ஆத்மானந்த்.

கேஷவ் மஹராஜ்

ஆனால், இவருக்கு ஆம்ரேவை அணுகுவது அவ்வளவு எளிதான காரியமாக இல்லை. அப்போதுதான் ஆத்மானந்துக்கு இரண்டாவது முறையாக அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது. ஆத்மானந்தின் `பெரிய புள்ளி’ உறவினர் ஒருவர், அந்தத் தொடரின் ஸ்பான்சரான நியூ ரிபப்ளிக் வங்கியின் முக்கிய வாடிக்கையாளரில் ஒருவராக இருந்திருக்கிறார். டெஸ்ட் தொடருக்கு முன்பாக, ஸ்பான்சர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். ஆத்மானந்தின் உறவினரும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், மீண்டும் `அதிர்ஷ்டவசமாக’ அவருக்குத் தவிர்க்க முடியாத வேலை வந்துசேர்ந்தது. 

``அவரால் செல்ல முடியவில்லை. நான் கிரிக்கெட் விளையாடுவேன் என்பதால், விருந்துக்கு அவர் எனக்கு அழைப்புவிடுத்தார். நான் மிகவும் மகிழ்ச்சியாக அதற்குச் சம்மதித்தேன். சென்றவுடன் நான் முதலில் செய்த காரியம், ஆம்ரேயிடம் சென்று அஜய் குப்தாவைப் பற்றிக் கூறி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். தொடர்புகள் சற்று இலகுவாகின. நான் அப்போதுதான் கிரணையும் முதன்முதலாகச் சந்தித்தேன். சச்சின் டெண்டுல்கரோடு சிறிது நேரம் உரையாடிவிட்டு, அவரோடு ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். இன்றும் அதை நான் பத்திரமாக வைத்துள்ளேன்” என்று கூறும் அவர், அப்போது ஏழு வயது நிரம்பிய தன்னுடைய மகள், முகம்மது அஸாருதீனுடன் எடுத்த புகைப்படத்தையும் பத்திரமாக வைத்துள்ளார். 

கேஷவ் மஹராஜ்

அதன் தொடர்ச்சியாக, அவர் வேறு சில நிகழ்வுகளுக்கும் அழைக்கப்பட்டார். அப்போதுதான் அவர் மூரேவைச் சந்தித்து வீட்டுக்கு அழைப்புவிடுத்துள்ளார். 1992-ம் ஆண்டின் கோடையில் நடந்த பல்வேறு முக்கியமான நிகழ்வுகள் கேஷவின் எதிர்காலத்தை வடிவமைத்தது என்று கூறுகிறார் அவர். ``எங்கள் குடும்பம் அப்போது மிகப்பெரிய மனிதர்களுடன் தொடர்பில் இருந்தது. எனக்கு அது விதியா என்று தெரியவில்லை. ஆனால், கேஷவுக்கு வழி திறந்துவிட்டது” என்கிறார் அவர். 

நன்றாக உடை அணிந்த கிரிக்கெட் வீரரோடு வெறுங்காலுடன் நிற்கும் ஒரு குட்டிப்பையனின் புகைப்படம், கூறுவதற்கு ஆயிரம் ஆயிரம் கதைகளை வைத்திருக்கும். ஆனால், அந்தப் புகைப்படங்கள் பூட்டிய பெட்டிக்குள் நினைவுகளாக முடங்கிக்கிடக்கும். கேஷவ் மஹராஜ் - இதற்கு விதிவிலக்கு. தான் பார்க்க நினைத்தவர்கள் இருந்த இடத்துக்கு, தானும் முன்னேறிவிட்டார். இந்த முன்னேற்றம் அசாத்தியமானதல்ல என்றாலும், அனைவருக்கும் சாத்தியமானதும் அல்ல. கனவுகளை உயிர்ப்பிக்க காலத்தோடு போட்டியிடுபவனால் மட்டுமே முடியும். கேஷவ் அப்படிப்பட்டவன்!

ஹேப்பி பர்த்டே கேஷவ் மஹராஜ்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
Advertisement