வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (08/02/2018)

கடைசி தொடர்பு:16:56 (08/02/2018)

`பவுண்டரிகள் இல்லாமல் 100 ரன்கள்!’ - விராட் கோலியின் புது சாதனை

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான 3 வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட் கோலி 160 ரன்கள் உதவியுடன் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 

Photo Credit: Twitter/ICC


இந்தப் போட்டியில் தனது 34 வது சதத்தைப் பூர்த்தி செய்த விராட் கோலி, பல்வேறு சாதனைகளைப் படைத்தார். சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலிக்கு இது 12 வது சதமாகும். இதன்மூலம் 11 சதங்கள் அடித்திருந்த சவுரவ் கங்குலியின் சாதனையை அவர் முறியடித்தார். அதேபோல், கேப்டவுன் போட்டியில் 160 ரன்கள் குவித்திருந்த விராட் கோலி, 12 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் விளாசினார். இதில், சரியாக 100 ரன்களை அவர் ஓடியே எடுத்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டியில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களைப் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் உதவியில்லாமல் எடுத்த முதல் இந்தியர் மற்றும் சர்வதேச அளவில் 5 வது வீரர் என்ற பெருமையை அவர் இதன்மூலம் பெற்றார். இதற்கு முன்னதாக, 1999-ம் ஆண்டு நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் 130 ரன்கள் எடுத்த கங்குலி, அதில் 98 ரன்களைப் பவுண்டரிகள் உதவியில்லாமல் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. 

இந்தப் பட்டியலில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் கேரி கிறிஸ்டன் முதலிடத்தில் இருக்கிறார். 1996-ம் ஆண்டில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 118 ரன்கள் குவித்த கிறிஸ்டன், அதில் 112 ரன்களைப் பவுண்டரிகள் இல்லாமல் எடுத்திருந்தார். இரண்டாவது இடத்தில், தென்னாப்பிரிக்க அணியின் இந்நாள் கேப்டன், டுபிளசி (2017-ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 103 ரன்கள்), ஆடம் கில்கிறிஸ்ட் (2004-ல் ஜிம்பாப்வே அணிக்கெதிராக 102 ரன்கள்) மற்றும் மார்டின் கப்தில் (2013-ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 101 ரன்கள்).