ஜூனியர் வேர்ல்ட் சாம்பியன்களைத் தயார் செய்தது எப்படி...? மனம் திறந்த டிராவிட்! | Dravid speaks about how he prepares the under 19 team for the world cup

வெளியிடப்பட்ட நேரம்: 13:25 (09/02/2018)

கடைசி தொடர்பு:13:25 (09/02/2018)

ஜூனியர் வேர்ல்ட் சாம்பியன்களைத் தயார் செய்தது எப்படி...? மனம் திறந்த டிராவிட்!

இந்தியாவின் ‘சுவர்’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட், ஒரு குருவாக மெய்சிலிர்த்த தருணம் அது. 19 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நான்காவது முறையாக சாம்பியனாகி விட்டது. மறக்கமுடியாத இத்தருணத்தில், கடந்த 18 மாதங்களாக அவர்கள் கடந்துவந்த பாதையை விவரிக்கிறார் டிராவிட்...

டிராவிட் - ப்ரித்வி ஷா

``இளம் வீரர்களின் தனித்தன்மையை மேம்படுத்தும் விதமாகப் பயிற்சி அளித்தீர்களா, அல்லது குறிப்பிட்ட பயிற்சி முறையை அனைவருக்கும் அளித்தீர்களா? 

``என்னுடைய ஐடியாக்களை அவர்கள்மீது திணிப்பதைவிட, நான் அவர்களோடு ஒன்றிணைந்து பணியாற்றுவதையே விரும்புகின்றேன். ஒரு சில நேரங்களில், நாங்கள் கூறும் குறிப்பிட்ட பயிற்சிகளை அவர்கள் மேற்கொண்டுதான் ஆகவேண்டும். அதைத்தவிர்த்த மற்ற நேரங்களில், அவர்கள் விரும்பும்படியான பயிற்சியை அவர்கள் மேற்கொள்கிறார்கள். 

எடுத்துக்காட்டாக. இரண்டு வீரர்களுக்கு ஆட்டம் முழுவதும் நின்று பேட்டிங் செய்வதைவிட, சில பந்துகளில் அதிரடியாக ஆடுவது பிடித்திருந்தது. தற்போதுள்ள வீரர்கள், தங்கள் அன்றாட அட்டவணை என்ன, அவர்களுக்கு எது உகந்தது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, அவர்களிடம் அவசியமானதை எடுத்துக்கூறவேண்டிய தேவையில்லை. நாம் அப்படிச் செய்தால், அவர்களுடைய பலம், பலவீனங்ககளை அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்காது.

உதாரணமாக, போட்டிக்கு முந்தைய நாள், நாங்கள் அளித்த பயிற்சியைவிட, அவர்கள் குழுவாக மேற்கொண்ட பயிற்சி மேலும் உதவிகரமாக இருந்தது. ஒருவேளை அவர்கள் கூடுதலாக பேட்டிங்கிற்கு நேரம் ஒதுக்கினால், நாங்கள் முழுமையாக அதற்குச் சம்மதிப்போம். அதைப்போலவே அதில் விருப்பம் இல்லாத வீரர்களையும் அவர்கள் விருப்பம்போல் பயிற்சி செய்ய அனுமதித்தோம். இதன்மூலமாக, போட்டி தினம் எத்தகையதாக இருக்கும் என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்.’’

டிராவிட்

``வீரர்களைக் களத்துக்கு வெளியே எப்படி அணுகுகிறீர்கள்? அவர்களைப் பொறுப்புமிக்கவர்களாக உருவாக்குது
உள்பட...

``கிரிக்கெட்டில் முடிவெடுக்கும் திறன் மிக முக்கியம். அதற்கு நீங்கள் நன்றாகப் பழகிக்கொள்ள வேண்டும். நாங்கள் அவர்களுக்கு நிறைய சுதந்திரம் வழங்குகிறோம். இருந்தாலும், அவர்கள் மீறக்கூடாத வரம்புகள் சில இருக்கின்றன. அவர்கள் இந்தியாவின், அவர்களுடைய குடும்பங்களின், பிசிசிஐ-யின் பிரதிநிதிகளாகக் களத்தில் இறங்குகின்றார்கள். எனவே, அவர்கள் தங்களை மேம்படுத்திக்கொள்ள ஒரே வழி, பொறுப்பு, சுதந்திரம் – இரண்டையுமே அவர்களிடம் வழங்கிவிடுவது. நாங்கள் அதைத்தான் செய்கின்றோம். 

``பொறுப்புணர்ச்சியைக் கற்றுத்தரமுடியுமா? சுப்மான் கில் இறுதிப்போட்டிக்குப் பிறகு, `பணியை முடிக்காமல் விலகக்கூடாது’ என்று நீங்கள் சொன்னதாக சொன்னாரே? 

``நீங்கள் அவர்களுக்கு அவர்கள் செய்யவேண்டிய பணிகளை நினைவுறுத்திக்கொண்டே இருக்கலாம். ஆனால், அதைவிடச் சிறந்த வழி, அவர்களை மறைமுகமாக உற்சாகப்படுத்தி ஊக்கம் தருவதுதான். 2002-ம் ஆண்டு ஹெடிங்லியில் உணவு இடைவேளையின்போது, ஜான் ரைட் என்னிடம் வந்து, `இந்த ஆடுகளத்தில் நீ ஒரு சதம் அடித்தால், அது உன் வாழ்நாளில் மறக்கமுடியாத ஒரு தருணமாக இருக்கும். அதுமட்டுமல்ல, ஒட்டுமொத்த அணிக்கும் அது உற்சாகம் அளிக்கக்கூடியதாக இருக்கும்’ என்றார். “அவருடைய அந்த வார்த்தைகள்தான் அன்று என்னை உந்தித்தள்ளியது.

அண்டர் 19 சாம்பியன்ஸ்

``இந்த 19 வயதிற்குட்பட்டோருக்கான அணியிலிருந்து வெளியேறும்போது வீரர்கள் எத்தகைய அனுபவங்களை விதைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறீர்கள்? 

``சொல்லப்போனால், இனிமேல்தான் அவர்கள் உண்மையான சவால்களைச் சந்திக்கப் போகிறார்கள். தற்போதுள்ள நிலையில் அவர்கள் அனைவருமே நல்ல திறமைசாலிகள். அவர்களையொத்த வயதுடைய வீரர்களைவிட அவர்கள் ஓரளவு சிறப்பாக விளையாடுகின்றார்கள். ஆனால், திடீரென்று அவர்கள் ரஞ்சிக்கோப்பையிலோ அல்லது 23வயதுக்குட்பட்டோருக்கான அணியிலோ இணைந்து விளையாடும்போது, அவர்களைவிட வயதிலும் அனுபவித்திலும் திறமையிலும் தேர்ந்தவர்களுடன் விளையாடுவார்கள். அந்த இடத்தில் அவர்கள் தங்களை நிலைநிறுத்திக்கொள்ள சில காலமாகும். ஒரு குளத்தில் பெரிய மீனாக இருந்துவிட்டு திடீரென்று கடலுக்குச் செல்லும்போது எப்படி இருக்கும்? அதைப்போலவேதான் அந்தச் சூழலும் இருக்கும். அந்தப் புதுச் சூழல் சிலருக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கலாம். அவர்கள் அங்கே பொருந்திப்போக இன்னும் கொஞ்சம் அதிக காலம் எடுத்துக்கொள்வார்கள். 

நாங்கள் அவர்களிடம் அதைப்பற்றி அதிகமாகப் பேசி இருக்கிறோம். அங்கு செல்வதற்குள் அவர்கள் சில பழக்கங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக, இங்கே அவர்கள் மிகவும் பாதுகாப்பான ஒரு சூழலில் பயிற்சி பெறுகின்றார்கள். ஆனால், அங்கே செல்லும்போது நீங்களே உங்களைக் கவனித்துக்கொள்ளவேண்டும். வளர்வதில் இதுவும் அடங்கியுள்ளதே! விரைவாகப் புது இடத்துக்குத் தங்களைப் பழக்கிக்கொள்பவர்கள் மிகச் சிறந்த வீரர்களாக வருவார்கள்.’’

இந்தியா அண்டர் 19 அணி

``அரையிறுதிச் சுற்று நடக்கும்போதே ஐ.பி.எல் குறித்த செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. நீங்கள் அந்த சூழலை எப்படி சமாளித்தீர்கள்? 

``ஐ.பி.எல் ஏலம் என்ற ஒன்று நடக்காமல் இருப்பதைப்போல் நாங்கள் இருந்திருக்கலாம். ஆனால், நாங்கள் அப்படிச் செய்யவில்லை. ஒரு குழுவாக அதைப்ற்றிப் பேச நினைத்தோம்.  அவர்கள் இளைஞர்கள். இதற்குமுன் அவர்கள் நிறைய ஏலங்களைப் பார்த்திருப்பார்கள். சிலருக்கு இதுதான் முதல் ஏலமாக இருந்திருக்கும். `எந்த அணி நம்மைத் தேர்வு செய்கிறது’ என்ற ஆர்வம் அவர்களுக்கு வருவது இயற்கை. மிட்செல் ஸ்டார்க்குடனோ அல்லது கொல்கத்தா அணியுடனோ அவர்கள் விளையாடுவது குறித்தோ, அல்லது டெல்லி அணியுடன் இருப்பது குறித்தோ அவர்கள் நிச்சயமாக உற்சாகம் அடைந்திருப்பார்கள். ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது ரிஷப் பன்ட் ஆகியோருடன் அவர்கள் பேட்டிங் செய்வதைக்கூட அவர்கள் எண்ணிப்பார்த்திருக்கலாம். எனவே, நாங்கள் அதைப்பற்றிப் பேச முடிவெடுத்தோம். 'உங்களுக்கு ஐ.பி.எல் ஏலம் மிகுந்த உற்சாகத்தையும் ஆவலையும் அளிக்கலாம். அங்கு செல்லவேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் நமக்கு இங்கே சாதிப்பதற்கு நிறைய இருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்' என்று அவர்களிடம் கூறினோம். அவர்கள் அதனை நன்றாகப் புரிந்துகொண்டார்கள். ஆனால், எனக்குத் தெரியும், எல்லோரும் அவர்களுடைய மொபைலில் அதைப் பார்த்துக்கொண்டிருந்திருப்பார்கள் (சிரிக்கின்றார்).

தேர்வுசெய்யப்பட்ட அனைவருக்காகவும் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். அதைப்போல அவர்களும் பொறுப்பாக, ஏலம் முடிந்ததும் பயிற்சிக்குத் திரும்பினார்கள். போட்டியின்போது அது எத்தகைய விளைவையும் ஏற்படுத்தவில்லை. அரையிறுதியின்போது சற்று கடினமாகத்தான் இருந்தது. ஆனால், நாங்கள் அதனைக் கடந்துவந்தோம். வீரர்களும் அதுகுறித்து உண்மையாகவே நடந்துகொண்டார்கள். 'ஆமாம் எங்களுக்கு அது கொஞ்சம் கவனத்தைச் சிதறடிப்பதாகத்தான் இருந்தது. ஆனால், எங்கள் கவனத்தை நாங்கள் விளையாட்டில் செலுத்தினோம்' என்று உள்ளதை உள்ளபடியே பேசினார்கள்.’’

``​​​​​​​பயிற்சியின்போது நிறைய வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது. ஆட்டத்தின் போக்கை அது பாதித்ததா? அதை நீங்கள் எப்படி எதிர்கொண்டீர்கள்? 

``அனைத்து வீரர்களுக்கும் உலகக்கோப்பை அனுபவம் கிடைக்கவேண்டும் என்று நாங்கள் எண்ணினோம். அதற்கு முக்கியமாக நாங்கள் அவர்களுடைய உடல் நலத்தில் கவனம் செலுத்தினோம். தேசிய கிரிக்கெட் கழகத்தின் பிசியோதெரபிஸ்ட் யோகேஷ் பர்மர் மற்றும் பயிற்சியாளர் ஆனந்த் தாடே இருகருக்கும்தான் நன்றி சொல்லவேண்டும். கடந்த ஒரு ஆண்டாக அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் நன்றிக்குரியது.’’ 

இந்திய அண்டர் 19 டீம்

``​​​​​​​ஒருசில வீரர்கள் ஏற்கெனவே முதல்தர கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டனர். இந்தியா-ஏ அணியின் பயிற்சியாளராக அவர்கள் மேலும் வளர்வதற்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்? 

``கடந்த இரு ஆண்டுகளாக நான் மிகவும் விரும்பிய ஒன்று, சீனியர் மற்றும் ஜூனியர் அணிக்கான தேர்வுக் குழுக்களோடு தொடர்பிலிருந்து உரையாடியது. அவர்கள் தங்களால் முடிந்தவரை மிகச்சிறந்த வீரர்களை அணியில் இடம்பெறச் செய்கின்றார்கள். சீனியர் அணியைத் தேர்வு செய்பவர்கள்கூட 19 வயதுக்குட்பட்டோருக்கான அணி குறித்து விசாரிக்கின்றார்கள். அவர்கள் மறக்காமல் கூறும் ஒரு விஷயம், ஒரு வீரரின் ரஞ்சிக்கோப்பை பெர்ஃபாமென்ஸ். அதில் அவரின் ஆட்டம் மதிப்பிடப்படும். 

ஆனால், ஒவ்வொரு முறையும் அப்படி நிகழாது. இந்தியா – ஏ அணிக்காக நீங்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால், ரஞ்சிக்கோப்பையில் இவ்வளவு ரன்கள் எடுத்திருக்கவேண்டும். இவ்வளவு விக்கெட்கள் கைப்பற்றியிருக்கவேண்டும் என்றெல்லாம் ஒன்றும் இல்லை. நிச்சயமாக உங்கள் திறமைக்கு மதிப்பிருக்கிறது. உங்கள் திறமையைப் பார்த்து 'அவனை நாம் தேர்வு செய்ய வேண்டும்' என்று உற்சாகமாகக் கத்த வாய்ப்புள்ளது. தேர்வு செய்பவர்கள் கூறுவது ஒன்றுதான் : ரஞ்சிக்கோப்பை முக்கியம், முதல் தர கிரிக்கெட் முக்கியம். இங்கு உங்களுக்கு வாய்ப்பு நன்றாக வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போது நீங்கள் ரிஷப் பன்ட் போல 900 ரன்கள் அல்லது இஷான் கிஷன் போல 800ரன்கள் குவியுங்கள், இந்தியா – ஏ அணிக்குள் நுழைந்துவிடுவீர்கள். ஆனால், நான் கூறுவது என்னவென்றால், இந்த அமைப்பில் நன்றாக விளையாடுங்கள். ரன்கள் எடுங்கள். விக்கெட்டுகளைக் கைப்பற்றுங்கள். அடுத்த நிலைக்கு நீங்கள் தயாராகிவிட்டீர்கள் என்று நிரூபித்துக்காட்டுங்கள். அவர்கள் நேரடியாக அந்த அணிக்குள் தள்ளப்பட்டுத் திணறுவதை நான் விரும்பவில்லை. அதற்குப்பதிலாக, அவர்கள் இன்னும் கொஞ்சம் கற்றுக்கொண்டு, சில மேடு பள்ளங்களைப் பார்த்துவிட்டு, அந்தச் சவாலுக்கு முழுமையானவர்களாகத் தயாராவதையே நான் விரும்புவேன்.’’ 

Courtesy: Cricinfo


டிரெண்டிங் @ விகடன்