வெளியிடப்பட்ட நேரம்: 10:58 (11/02/2018)

கடைசி தொடர்பு:10:58 (11/02/2018)

டீம்ல நாலு ஃபாஸ்ட் பெளலர் இருந்தாபோதும்... எந்த டீமுக்கும் தண்ணி காட்டலாம் !

"ஆம், அந்தப் பந்தை இன்னும் 20, 30 முறை எதிர்கொண்டாலும் நான் அவுட்தான் ஆவேன். பெளலரைப் பாராட்டிவிட்டு, இந்த விஷயத்தை விட்டு நகருங்கள்..." - ஜேம்ஸ் வின்ஸ் வார்த்தைகளில் குற்றவுணர்வு. அவரால் கம்பீரமாக பத்திரிகையாளர்களை எதிர்கொள்ள முடியவில்லை. அந்த பந்தைப் பற்றி அவர்கள் கேட்டுக்கொண்டே இருந்தது ரொம்பவுமே எரிச்சலூட்டியது. ஏனெனில், அவர் அவுட்டான விதம் அப்படி. சமீபத்தில் முடிந்த ஆஷஸ் தொடரில், மிச்செல் ஸ்டார்க் வீசிய அந்த மாயப்பந்தில், ஆஃப் ஸ்டம்ப் சரிந்து விழ, பெய்ல்கள் மின்னிக்கொண்டே பறக்க, ஆட்டமிழந்தார் வின்ஸ். கேட்ச், எல்.பி.டபிள்யூ, ரன் அவுட் என வேறு எப்படி அவுட் ஆகியிருந்தாலும் அவர் கவலைப்பட்டிருக்கத் தேவையில்லை. ஆனால், போல்டாகிவிட்டார். அதுவும் ஒரு வேகப்பந்துவீச்சாளரின் பந்துவீச்சில். 

 

 

 

100 மைல் வேகத்தில் வரும் பந்து, கண்ணிமைக்கும் நொடியில் பேட்ஸ்மேனை ஏமாற்றி, ஸ்டம்புகளைச் சாய்க்கும் அந்தக் கணம்... ஒரு கிரிக்கெட் ரசிகன் சிலாகிக்க வேறு எதுவும் தேவையில்லை. அதுவும் அந்த ஸ்டம்புகள் பல்டி அடித்து, பல அடி தூரம் தள்ளி நிற்கும் விக்கெட் கீப்பரை அடையும்போது, அது வேறு லெவல் ஃபீல். அந்தப் புகைப்படம்தான் மறுநாள் நாளிதழ்களின் முதல் பக்கத்தை அலங்கரிக்கும். ஒருசில நாள்கள் அந்த விக்கெட் கிரிக்கெட் வட்டாரத்தின் தலைப்புச் செய்தியாக நிலைத்திருக்கும். பௌலர் கொண்டாடப்படுவார். பௌலரின் பெயர் குறிப்பிடப்படும்போதெல்லாம், அந்த பேட்ஸ்மேனின் பெயரும் குறிப்பிடப்படும். அப்படியொரு தர்மசங்கடமான நிலையில்தான் வின்ஸ் அப்படி கராராகப் பேசினார். வாசிம் அக்ரம், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்றவர்கள் கொண்டாடப்படுவது அவர்கள் வீழ்த்திய விக்கெட்டுகளின் எண்ணிக்கைகளுக்காக அல்ல. ஸ்டார்க் வீசியதுபோன்ற மேஜிக்கல் பந்துகளை வீசியதால்தான். அவர்கள் மட்டுமல்ல, வேகப்பந்துவீச்சுமே கொண்டாடக்கூடியதுதான். ஏனெனில், அது ஒரு கலை. ரசிக்கக்கூடிய, ரசிக்கத்தூண்டும் கலை! 

இந்தியா, தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின் 3 போட்டிகள் முடிந்துவிட்டது. 3 போட்டிகளையும் எளிதில் வென்றுவிட்டது இந்தியா. ஆனாலும், வாண்டரர்ஸ் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் பெற்ற வெற்றியைப் போல் இதை உணர முடியவில்லை. சொல்லப்போனால் இந்தியா வெற்றி பெற்ற தொடர்களை விடவுமே இந்த டெஸ்ட் தொடர்தான் மிகச்சிறந்த கிரிக்கெட் விருந்தாக அமைந்தது. ஏனெனில் அந்தத் தொடர் இந்தியாவுக்குப் புதிது. அந்தத் தொடரில் ரசிகர்கள் கண்ட இந்திய அணியும் புதிது. #SAvsIND

இஷாந்த் ஷர்மா #SAvsIND

காரணம், அந்த வெற்றி இந்தியாவுக்குப் புதிது. பேட்டிங்காலும், சுழற்பந்துவீச்சாலும் மட்டுமே வெற்றி கண்டுகொண்டிருந்த இந்திய அணிக்கு, வேகப்பந்துவீச்சாளர்கள் பெற்றுத் தந்த அந்த வெற்றி. இதுவரை இந்திய ரசிகர்கள் கொண்டாடிடாத வெற்றி. அரிதிலும் அரிதாக அந்தப் போட்டியில் 4 வேகப்பந்துவீச்சாளர்களைக் களமிறக்கியிருந்தது இந்தியா. தென்னாப்பிரிக்கா 3 போட்டிகளிலுமே 4 ஃபாஸ்ட் பௌலர்களுடன்தான் விளையாடியது. இதுதான் இந்தத் தொடர், மற்ற தொடர்களிலிருந்து வேறுபட்டு சுவாரஸ்யமாகத் தெரியக் காரணம். இந்த 3 ஒருநாள் போட்டிகளில் குல்தீப் யாதவ் - சாஹல் கூட்டணி மட்டுமே 21 விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டது. ஆனால், அவர்கள் பெற்றுக் கொடுத்த இந்த வெற்றிகளில் அவ்வளவாக சுவாரஸ்யம் இல்லை. அதுதான் ஸ்பின் - வேகப்பந்துவீச்சு இரண்டுக்குமுள்ள வித்யாசம். வேகப்பந்துவீச்சு - என்றுமே ரசிக்கக் கூடியது. அதுவும் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் கூட்டணி ரசித்து அனுபவிக்ககூடியது.

இவ்வாறு நாம் வேகப்பந்து வீச்சை பற்றி நினைக்கும் போது, நம்மை அறியாமல் கடந்த நுற்றாண்டை நோக்கி நினைவுகள் பயணிக்கிறது. வெஸ்ட் இண்டீஸ் - வேகபந்து வீச்சீன் சொர்க்கபூமி!  2 உலகக்கோப்பைகள், 2 டி-20 உலகக்கோப்பைகள் வென்றிருந்தாலும், வேகப்பந்துவீச்சுதான் இன்னும் அவர்களின் அடையாளம். பெர்னார்ட் ஜூலியன், கீத் பாய்ஸ், ஆண்டி ராபர்ட்ஸ், வேர்ன்பர்ன் ஹோல்டர் உள்ளடங்கிய 'ஃபாஸ்ட் 4' கூட்டணியுடன் ஆஸ்திரேலியாவைச் சாய்த்து 1975 உலகக்கோப்பை வென்றவர்கள், ராபர்ட்ஸ் உடன் 1979-ல் மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர், காலின் க்ராஃப்ட் என்ற அசுரவேகக் கூட்டணியோடு இங்கிலாந்தை வீழ்த்திக் கோப்பை வென்றனர். இவர்களில் ஒவ்வொருவராக ஓய்வு பெறும்போதெல்லாம், மால்கம் மார்ஷல், கர்ட்னி வால்ஷ், கர்ட்லி அம்ப்ரோஸ், இயான் பிஷாப் என பேட்ஸ்மேன்களை கலங்கடித்த பௌலர்கள் வந்துகொண்டுதான் இருந்தார்கள். 

West Indies fast bowlers

கிரிக்கெட் பிரபலமடையத் தொடங்கிய அன்றைய காலகட்டதில் இவர்கள்தான் கிரிக்கெட்டுக்கே அடையாளம். 1983 உலகக்கோப்பையில் இவர்களை வென்றதுதான் இந்தியா உலக அரங்கில் அடையாளம் பெறக் காரணமாக அமைந்தது. அதன்பின் பாகிஸ்தான் சில காலம் வேகப்பந்துவீச்சில் மிரட்டியது. ஆனாலும், வெஸ்ட் இண்டீஸ் போல் நான்கு பௌலர்கள் கொண்ட அணியாக அவர்கள் மிரட்டியதில்லை. இம்ரான் கான், ஆகிப் ஜாவேத், வாசிம் அக்ரம் என 90-களின் தொடக்கத்தில் 3 தரமான பௌலர்களைக் கொண்டிருந்தது பாகிஸ்தான். ஜாவேத், இம்ரான் கான் ஆகியோர் ஓய்வு பெற்ற பிறகுதான் வக்கார் யூனுஸ், சோயப் அக்தர் களம் கண்டனர். ஒவ்வோர் அணிக்கும் இதே நிலைதான். சமகாலத்தில் ஆதிக்கம் செலுத்தக் கூடிய 4 ஃபாஸ்ட் பௌலர்கள் ஒரே நேரத்தில் அமையவில்லை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆஸ்திரேலிய அணி, அந்த வகையில் கிரிக்கெட் உலகை மிரட்டியது. க்ளென் மெக்ராத், ப்ரெட் லீ, ஜேசன் கில்லெஸ்பி, மைக்கேல் காஸ்பரோவிச் என 4 ஃபாஸ்ட் பௌலர்களை ஒரே காலகட்டத்தில் கொண்டிருந்தது. ஆனால், அவர்களாலும் சில போட்டிகளில் மட்டுமே அவர்கள் நால்வரையும் கூட்டாகக் களமிறக்க முடிந்தது. உலக பௌலர்களையெல்லாம் மிரட்டி எடுத்த டாப் 7, ஜாம்பவான் பேட்ஸ்மேன்களையெல்லாம் காலி செய்த ஜாம்பவான் ஷேன் வார்ன் என இந்த 8 இடங்களையும் அவர்களால் தொட முடியாது. அதனால் பிளேயிங் லெவனில் 3 ஸ்பெஷலிஸ்ட் ஃபாஸ்ட் பௌலர்களுக்கு மேல் அவர்களால் பயன்படுத்த முடியவில்லை. இன்றும்கூட, ஆஸ்திரேலியாவில் விளையாடினாலும், இங்கிலாந்தில் விளையாடினாலும் நாதன் லயான் இறங்கவேண்டியிருக்கிறது. மிட்சல் ஜான்சன், மிட்சல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட் போன்றவர்கள் இருந்தபோதுகூட அவர்களால் 4 வேகப்பந்துவீச்சாளர்களைக் களமிறக்க முடியவில்லை. 

australian fast bowlers

வாண்டரர்ஸ் டெஸ்ட் போட்டி இதனால்கூட மிகவும் தனித்துவம் பெற்றது எனச் சொல்லலாம். அந்தப் போட்டியில் மட்டும் 9 ஸ்பெஷலிஸ்ட் வேகப்பந்துவீச்சாளர்கள். கூட ஹர்டிக் பாண்டியா - ஃபாஸ்ட் பௌலிங் ஆல்ரவுண்டர். கடந்த சில ஆண்டுகளில் ஃபாஸ்ட் பௌலர்கள் மட்டுமே பந்துவீசிய டெஸ்ட் போட்டி அதுவாகத்தான் இருக்கும். 296.1 ஓவர்கள், அதாவது 1777 பந்துகளை வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே வீசினர். நடுவே ஆடுகளம் மோசம் என்று போட்டி நிறுத்தப்பட்டது. இருந்தாலும், அதைப் பற்றி யாரும் பெரிதாக கவலைப்பட்டுக் கொள்ளவில்லை. இந்தியர்கள் குற்றம் கூறவில்லை. காரணம், இந்தியா வெற்றி பெற்றது அல்ல. இது இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் கொடுத்த வெற்றி. ஆனால், இந்தப் போட்டி வெற்றி தோல்விக்கு அப்பாற்பட்ட ஒன்று. ஏன், இந்தத் தொடரே அப்படிப்பட்ட ஒரு தொடர்தான். 

இன்றும் கிரிக்கெட் ரசிகர்களால் சிலாகிக்கப்படும் 70, 80-களின் கிரிக்கெட் போட்டிகள் பந்துவீச்சைத்தான் மையமாகக் கொண்டிருந்தன. வால்ஷ், அம்ப்ரோஸ், மார்ஷல், ராபர்ட்ஸ் என்று பந்துவீச்சாளர்கள் பட்டியலை நாம் அடுக்கலாம். அன்று சிறந்து விளங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களைப் பட்டியலிட நினைத்தால், விவியன் ரிச்சர்ட்ஸ் தாண்டி நம்மால் பெரிதாகச் சொல்ல முடியாது. ஏனெனில், பந்துவீச்சு அன்று கிரிக்கெட்டின் மிகமுக்கிய அங்கமாகப் பார்க்கப்பட்டது. பின்னர், கவாஸ்கர், சச்சின், கோலி என்று கிரிக்கெட் பரிணாமம் கொண்டது. இவ்வளவு ஏன் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் கூட லாரா, சந்தர்பால், கெய்ல் என்று மாறிப்போனது. 

20-ம் நூற்றாண்டில் டி-20 விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியதும், இது முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கான கேமாக மாறிப்போனது. ஸ்பின்னர்கள்தான் இங்கு தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலை, இன்று இன்னும் மாறிப்போய் லெக்-ஸ்பின்னர்கள்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்றாகிவிட்டது. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி அந்தப் பழைய 4 வேகப்பந்துவீச்சாளர்கள் தியரியைக் கையில் எடுத்தது வரவேற்கத்தக்கது. அதன் விளைவு - உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணி தொடர்ந்து 2 போட்டிகளில் தோற்றது. ஆடுகளத்தின் தன்மையைக் காரணம் காட்டி, தென்னாப்பிரிக்க பௌலர்களுக்குத் தரவேண்டிய அங்கீகாரத்தைக் கெடுப்பது முட்டாள்தனம். இரண்டாவது போட்டி நடந்த செஞ்சூரியன் ஆடுகளம், அப்படியே துணைக்கண்ட ஆடுகளத்தைப் போலத்தான் இருந்தது. இருந்தும் இந்தியாவால் வெற்றி பெற முடியவில்லையே. பந்துவீச்சு அப்படி!

South Africa fast bowlers #SAvsIND

டேல் ஸ்டெய்ன், மோர்னே மோர்கல், வெர்னான் ஃபிலாண்டர், ககிஸோ ரபாடா என அற்புதமான நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள். வேகம், துல்லியம், வேரியேஷன் என அனைத்தும் நிறைந்த கூட்டணி. அன்றைய வெஸ்ட் இண்டீஸ் பௌலிங் யூனிட்டைப் பார்ப்பதுபோல் இருந்தது. ஸ்டெய்ன் காயத்தால் விலக, அவருக்குப் பதிலாகக் களமிறங்கிய லுங்கிசானி எங்கிடி, அறிமுகப் போட்டியிலேயே ஆட்டநாயகனாகி அசத்திவிட்டார். வாண்டரர்ஸ் போட்டியில் ஃபெலுக்வாயோ இணைந்துகொள்ள 5 வேகப்பந்துவீச்சாளர்களோடு களமிறங்கினார் டுப்ளெஸ்ஸி. வெற்றிக்கான ஃபார்முலாவை கடைசிப் போட்டிக்கு முன்னமேனும் புரிந்துகொண்ட விராட், இஷாந்த் ஷர்மா, புவனேஷ் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது ஷமி என தானும் ஒரு படையைக் களமிறக்கினார். வெற்றி ஒருவழியாக அவர்வசம் அடைந்தது. 

சொல்லப்போனால் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் ரொம்பவுமே 'under estimate' செய்யப்பட்டவர்கள். இந்தியாவில் நடந்த ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் ஒருபுறம் இஷாந்த், உமேஷ் கொடுத்த பிரஷரில்தான், மறுபுறம் அஷ்வின் பந்துவீச்சுக்கு இரையாகிக் கொண்டிருந்தார்கள் ஆஸி பேட்ஸ்மேன்கள். அந்தத் தொடர் சரி, மற்ற தொடர்களில்...? நாடு முழுதும் சுழலுக்குச் சாதகமான ஆடுகளங்களே வைத்திருந்தால், ஒரு பௌலரால் எப்படி தன்னை நிரூபிக்க முடியும்? எப்படி முன்னேற்றம் காண முடியும்? இந்தப் போட்டிக்குப் பிறகாவது வேகப்பந்துவீச்சின் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்திருக்கும்.

indian fast bowlers

டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் தாண்டி டி-20 என விரிந்த கிரிக்கெட், இன்று 10 ஓவர் போட்டி, பனிப் போட்டி வரை பரிணாமம் அடைந்துவிட்டது. வெறும் பேட்ஸ்மேன்களுக்கான விளையாட்டாகத் தொடர்ந்தால், மெல்ல இந்த விளையாட்டின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிடும். போட்டிக்குப் போட்டி கோலி சதமடிக்க, இன்று அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ரோஹித் இன்னும் இரண்டு டபுள் செஞ்சுரி அடித்தால், அதன் மவுசும் போய்விடும். ஒருநாள் போட்டிகளிலும் 300 என்ற ஸ்கோரையும் மதிப்பார் இல்லை. இப்படியே போய்க்கொண்டிருந்தால் விரைவில் கிரிக்கெட் மீதான ஈர்ப்பு, எதிர்பார்ப்பு குறைந்துவிடும். கிரிக்கெட் அதன் பழைய 'மோஜோ'வை அடையவேண்டுமெனில், வாண்டரர்ஸ் டெஸ்ட் போல், மேலும் பல போட்டிகள் நடக்கவேண்டும். தென்னாப்பிரிக்காவைப் போல் மற்ற அணிகளும் வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் தரவேண்டும். ஏனெனில், அது கிரிக்கெட்டின் மிகச்சிறந்த ஆயுதம். ரசித்து கொண்டாடக்கூடிய ஆயுதம்!


டிரெண்டிங் @ விகடன்