``2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அஷ்வின், ஜடேஜா இருப்பார்களா?’’ - பயிற்சியாளரின் பளீச் பதில் | Indian bowling coach Bharath arun speaks about Ashwin and Jadeja back on ODI team

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (10/02/2018)

கடைசி தொடர்பு:19:00 (10/02/2018)

``2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அஷ்வின், ஜடேஜா இருப்பார்களா?’’ - பயிற்சியாளரின் பளீச் பதில்

2019-ம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் இடம்பெறுவார்களா என்பது குறித்து பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் பேசியுள்ளார். 


தென்னாப்பிரிக்காவில் ஒருநாள் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் மூன்று போட்டிகளிலும் வென்று 3-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களான சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். கேப்டவுன் வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, சுழற்பந்துவீச்சாளர்களைப் புகழ்ந்து தள்ளினார். மேலும், 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் சஹால் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் முக்கியப் பங்காற்றுவார்கள் என்றும் கூறியிருந்தார். அதனால், அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு இந்திய ஒருநாள் அணியில் மீண்டும் இடம் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது. 

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் அஷ்வின் மற்றும் ஜடேஜாவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ``இந்திய அணியில் ஏற்கெனவே உள்ள பந்துவீச்சாளர்களைக் கருத்தில்கொள்ள முடிவு செய்துள்ளோம். உலகக் கோப்பை தொடரைக் கருத்தில்கொண்டு வீரர்கள் தேர்வில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறோம். அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரும் கருத்தில் கொள்ளப்படுவார்கள்’’ என்றார். அதேபோல் குல்தீப் மற்றும் சஹால் ஆகியோரையும் அவர் பாராட்டத் தவறவில்லை. அவர்களது பந்துவீச்சு குறித்து பேசிய பரத், ``முழுநம்பிக்கையுடன் அவர்கள் பந்துவீசுகின்றனர். பேட்ஸ்மேனை ஏமாற்றும் வித்தை அவர்களிடம் உள்ளது’’ என்றார்.