வெளியிடப்பட்ட நேரம்: 21:22 (10/02/2018)

கடைசி தொடர்பு:21:22 (10/02/2018)

``நூறாவது போட்டியில் சதமடித்த தவான்!'' - தென்னாப்பிரிக்காவுக்கு 290 ரன்கள் இலக்கு

தென்னாப்பிரிக்காவுக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு ரன்கள் குவித்தது. 

6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஏற்கெனவே நடந்து முடிந்த 3 போட்டிகளிலும் இந்தியா வென்று 3-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்தநிலையில், இவ்விரு அணிகள் இடையிலான 4-வது ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பெர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்டிங் தேர்வு செய்தார். 

இதையடுத்து பேட்டிங் செய்யக் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா மீண்டும் ஏமாற்றினார். அவர் 5 ரன்களில் ரபாடாவின் பந்துவீச்சில் வெளியேறினார். இதையடுத்து இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தவான் - கேப்டன் கோலி இந்திய அணிக்கு சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி 158 ரன்கள் குவித்தது. கடந்த போட்டியில் சதமடித்த கேப்டன் கோலி 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நூறாவது போட்டியில் விளையாடிய தவான் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 109 ரன்கள் எடுத்து வெளியேறினார். நூறாவது போட்டியில் சதமடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையைத் தவான் படைத்தார். சர்வதேச அளவில் இந்த பெருமையைப் பெறும் 7-வது வீரர் இவராவார். 

அதன்பின் களமிறங்கிய வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ரஹானே 8 ரன்களிலும், ஸ்ரேயாஸ் ஐயர் 18 ரன்களிலும், பாண்ட்யா 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 34.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி 200 ரன்கள் எடுத்திருந்தபோது மின்னல் மற்றும் தூறல் காரணமாக போட்டி சிறிதுநேரம் தடைபட்டது. 35-வது ஓவரில் 200 ரன்கள் குவித்த இந்திய அணி, பெரிய அளவில் ரன் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி 15 ஓவர்களில் 89 ரன்கள் மட்டுமே இந்திய அணி எடுத்தது. 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. தோனி 42 ரன்களுடனும்,குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.