பீல்டிங்கில் சொதப்பிய இந்தியா...பிங்க் நிற சென்டிமென்டை தக்கவைத்த தென்னாப்பிரிக்கா! | South Africa wons Fourth ODI

வெளியிடப்பட்ட நேரம்: 02:00 (11/02/2018)

கடைசி தொடர்பு:02:22 (11/02/2018)

பீல்டிங்கில் சொதப்பிய இந்தியா...பிங்க் நிற சென்டிமென்டை தக்கவைத்த தென்னாப்பிரிக்கா!

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

South Africa


இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் முதல் 3 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. 4-வது ஆட்டம்  ஜோகன்னஸ்பெர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. தவான் (109 ரன்) சதமடித்தார். கோலி 75 ரன்களும் தோனி 42 ரன்களும் எடுத்தனர்.

அடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக மார்க்ரம், அம்லா ஆகியோர் களமிறங்கினார்கள்.  மார்க்ரம் 22 ரன்களில் பும்ரா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். அந்தச் சமயத்தில் மழை பெய்தது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது தென்னாப்பிரிக்க அணி 7.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்திருந்தது. சிறிது நேரம் கழித்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. ஆனால், 28 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டது. 28 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 202 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

பந்தை விடவும் அதிக ரன்கள் எடுக்க வேண்டியிருந்ததால் தென்னாப்பிரிக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள். விக்கெட்டுகள் வீழ்ந்தன. 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டுமினி 10 ரன்களுக்கு அவுட்டானார். அம்லா 33 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அதிரடி காட்டிய நட்சத்திர வீரர் டிவில்லியர்ஸ் 18 பந்துகளில் 2 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 26 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். அதன்பிறகு ஜோடி சேர்ந்த மில்லர் மற்றும் கிளஸன் ஜோடி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதை நோக்கி அழைத்துச் சென்றது. இதில் மில்லருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது. அவர் 6 ரன்னில் இருந்தபோது சாஹல் பந்து வீச்சில் கொடுத்த கேட்சை இந்திய வீரர்கள் தவறவிட்டனர். அதே ஓவரில் அவர் போல்டு ஆனார். ஆனால் அது நோபாலாக அறிவிக்கப்பட்டது.

South Africaஅணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்ற மில்லர் ஸ்கோர் 174 ரன்களாக இருந்தபோது சாஹல் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட்டானார். அவர் 28 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்ஸருடன் 39 ரன் சேர்த்தார். அடுத்து களமிறங்கிய பெலுக்வாயோ 3 இமாலய சிக்ஸர்களுடன் வெற்றியை துரிதப்படுத்தினார். அவர் 5 பந்துகளில் 3 சிக்ஸர் 1 பவுண்டரியுடன் 23 ரன் எடுத்தார். சாஹல் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். 25.3 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து இந்தத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. கிளஸன் 27 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்ஸருடன் 43 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 4 போட்டிகள் முடிவில் இந்தத் தொடரில் இந்திய அணி 3-1 என்றக் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் பீல்டிங் மோசமாக இருந்தது. மில்லரின் கேட்சைப் பிடித்திருந்தால் ஒருவேளை இந்தப் போட்டியில் முடிவு மாறியிருக்கலாம்.

இந்தப் போட்டியில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம் என்னவென்றால், தென்னாப்பிரிக்க அணி பிங்க் நிறச் சீருடையுடன் களமிறங்கியதாகும். அந்த அணி பிங்க் சீருடையுடன் களமிறங்கிய ஒருநாள் போட்டிகளில் தோல்வி அடைந்தது இல்லை. அந்தப் பெருமையை இந்தப் போட்டியிலும் தக்கவைத்துக் கொண்டது. அணி வீரர்கள் பிங்க் நிறச் சீருடையுடன் களமிறங்கியது ஒரு நல்ல விஷயத்திற்காகும். இந்தப் போட்டி மூலம் கிடைக்கும் தொகை புற்றுநோய் மருத்துவமனைக்கு நன்கொடையாக அளிக்கப்பட இருக்கிறது.


[X] Close

[X] Close