பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்ட தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு அபராதம்! | ICC fine South Africa for slow over-rate in 4th ODI against India

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (11/02/2018)

கடைசி தொடர்பு:11:45 (12/02/2018)

பந்து வீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்ட தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு அபராதம்!

இந்திய அணிக்கெதிரான 4-வது ஒருநாள் போட்டியில், பந்து வீசுவதற்கு ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் எடுத்துக்கொண்ட தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு, சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. 


இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான 4-வது ஒருநாள் போட்டி, ஜோகன்னஸ்பெர்க் வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. தவான் (109 ரன்) சதமடித்தார். கோலி 75 ரன்களும் தோனி 42 ரன்களும் எடுத்தனர். மழையால் போட்டி தடைபடவே, 28 ஓவர்களில் 202 ரன்கள் தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 25.3 ஓவர்களில், தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்து இந்தத் தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்தது. பிங்க் நிற சீருடையுடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. இதனால், ஒதுக்கப்பட்ட நேரத்தைவிட பந்துவீச கூடுதல் நேரத்தை தென்னாப்பிரிக்கா எடுத்துக்கொண்டது. தாமதமாகப் பந்துவீசியதால், போட்டி நடுவர் தென்னாப்பிரிக்கா வீரர்களுக்கு அபராதம் விதிக்க ஐசிசி-க்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் மார்கிராமுக்கு, போட்டி ஊதியத்திலிருந்து 20 சதவிகிதமும் மற்ற வீரர்களுக்குத் தலா 10 சதவிகிதமும் அபராதமாக விதித்தது, ஐசிசி.