மியூசிக்கல் பார்ட்னர்ஸ் முதல் ஹார்ட் டாட்டூ கேம் வரை... இது காதலர்களுக்கான கேம்ஸ்! #ValentinesDay | From Musical Partners to Heart Tattoo Games - Valentines day games

வெளியிடப்பட்ட நேரம்: 20:24 (13/02/2018)

கடைசி தொடர்பு:20:24 (13/02/2018)

மியூசிக்கல் பார்ட்னர்ஸ் முதல் ஹார்ட் டாட்டூ கேம் வரை... இது காதலர்களுக்கான கேம்ஸ்! #ValentinesDay

`Where is the Party?'னு குழந்தைப் பிறந்தா பார்ட்டி, பதவி உயர்வுனா பார்ட்டி, திருமணத்துக்கு முன்னர் `பேச்சுலர்ஸ் பார்ட்டி', திருமணத்துக்குப் பிறகு `ஆஃப்டர் வெட்டிங் பார்ட்டி'... இவ்வளவு ஏன், வேலை போனா பார்ட்டி, காதல் தோல்வினா பார்ட்டினு தொட்டதுக்கெல்லாம் `பார்ட்டி' பண்ணும் ட்ரெண்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அலுவலகம், வீடு என இரண்டுக்கும் நடுவில் இயந்திரம்போல் ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு, மிகப்பெரிய ரிலாக்ஸாக இருப்பது பார்ட்டி போன்ற நிகழ்வுகள்தாம். அந்த வகையில் காதல் பொங்கப் பொங்க பார்ட்டி பண்ண காதலர் தினமும் Valentines Day வந்துவிட்டது. இதைக் கொண்டாடும் வகையில் கார்ப்பரேட்டில் பரவிவரும் `வேலன்டைன் பார்ட்டி கேம்ஸ்' டிட்பிட்ஸ் இங்கே...

குறிப்பு: இதில் கலந்துகொள்பவர்கள் காதலர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால், ஆண் - பெண் பார்ட்னர் அவசியம்.

Valentines Day

மியூசிக்கல் பார்ட்னர்ஸ்:

மியூசிக்கல் பார்ட்னர்ஸ் விளையாடுவதற்குத் தேவைப்படுபவை... இரட்டைப்படை எண்களில் ஆள்கள், மியூசிக் பிளேயர் மற்றும் மியூசிக் ஆன்/ஆஃப் செய்வதற்கு ஓர் ஆள். முதலில் ரேண்டமாக ஒரு ஜோடியைத் தேர்வுசெய்து அவர்களை இசைக்கு ஏற்றபடி நடனமாடச் செய்யவேண்டும். இது ரொமான்டிக் பாடலாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. ராப், கானா என எந்த வகையான பாடலாகவும் இருக்கலாம். பாடல்கள் வேறுபட வேடிக்கைகளும் அதிகரிக்கும். பாடலை இடையிடையே நிறுத்தி இருவரையும் வேறொரு பார்ட்னரைத் தேர்ந்தெடுக்கச் செய்து, பிறகு அவர்களுடன் இணைந்து நடனமாட வேண்டும். இவ்வாறு மியூசிக்கால் இணைந்ததால் இவர்கள் `மியூசிக்கல் பார்ட்னர்ஸ்' என்றழைக்கப்படுவர்.

காதல் கவிஞர்கள்:

`என் அன்பே', `ரோஜா', `என்னவள்' போன்ற  25 ரொமான்டிக் வார்த்தைகளை தனித்தனியே துண்டுச்சீட்டில் எழுதி ஒரு பாட்டிலில் நிரப்பிக்கொள்ள வேண்டும். வியாபாரம், போக்குவரத்து, அலுவலகம் போன்ற பொதுவான 25 சொற்களை வேறு துண்டுச்சீட்டில் தனித்தனியே எழுதி, மற்றொரு பாட்டிலில் நிரப்பிக்கொள்ள வேண்டும். போட்டி பங்கேற்பாளர்களை அழைத்து இரண்டு பாட்டில்களிலிருந்தும் ஒவ்வொரு சீட்டை எடுத்து அதிலிருக்கும் சொற்களை உரக்கப் படிக்கச் சொல்ல வேண்டும். கிடைத்த இரு சொற்களை வைத்து ஒரு `ஹைக்கூ' எழுதினால் நீங்களும் கவிஞரே!

உதாரணமாக: ரோஜா, அலுவலகம் என வந்திருந்தால்,

`இன்று மலர்ந்த ரோஜா 

அலுவலகம் வராததேன்!' என எழுதலாம்.

மிக்ஸ் அண்ட் மேட்ச்:

இந்த கேம் விளையாடுவதற்குத் தேவையான பொருள்கள்... போட்டியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆண்-பெண் இருபாலரும் உடுத்தக்கூடிய வெவ்வேறு அளவுகளில் ஆடை வகைகள், கடிகாரம், செயின் போன்ற அணிகலன்கள் மற்றும் இவற்றைப் பிடித்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு பெரிய கூடை. இந்தப் போட்டியின் நடுவர் போட்டியைத் தொடங்கியதும், பார்ட்னர் இருவரும் ஓரத்தில் வைக்கப்பட்ட கூடையை நோக்கிச் சென்று அதில் தங்களின் பார்ட்னருக்கு ஏற்ற உடை மற்றும் அணிகலங்களைத் தேர்வுசெய்து அவர்களை மெருகேற்ற வேண்டும். குறுகியகால நேரத்தில் தங்களின் பார்ட்னரின் அழகை மெருகேற்றியவரே இந்தப் போட்டியின் வெற்றியாளர்!

கண்ணாம்மூச்சி ஏனடா?:

ஆண்-பெண் இரு போட்டியாளர்களையும் தனித்தனியே பிரித்து அவர்களின் கண்களை மூடும்படியான மாஸ்க்கை அணிவிக்க வேண்டும். பிறகு, போட்டியாளர்கள் அனைவரையும் ஒரே அறைக்குள் அனுப்ப வேண்டும். வலது, இடது, முன், பின் என இந்த வார்த்தைகளை மட்டுமே உபயோகப்படுத்தி தங்களின் பார்ட்னருக்குத் தாங்கள் இருக்கும் இடத்துக்குத் துப்புக்கொடுக்கலாம். சத்தமாக மியூசிக் போட்டால் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். கண்களைக் கட்டிக்கொண்டிருக்கும் இவர்கள், தங்களின் பார்ட்னரைக் கண்டுபிடித்துவிட்டால் அவர்களே வின்னர்!

எனக்கே எனக்கா..?:

இந்த விளையாட்டின் முதல் ரூல் பார்ட்னர்களின் கண்களையும் கைகளையும் கட்டிவிடவேண்டும். பிறகு, ஆண் அல்லது பெண் யாராவது ஒருவர் வாயில் இனிப்புப் பண்டங்களை ஊட்ட வேண்டும். அது கவர்செய்யப்பட்ட சாக்லேட் வகையாகவும் இருக்கலாம் அல்லது ஜாமூன், ஜிலேபி போன்ற கவர் இல்லாத இனிப்பு வகைகளாகவும் இருக்கலாம். கவர்செய்யப்பட்ட இனிப்பு வகை என்றால், அதை எப்படியாவது பிரித்து தன் பார்ட்னருக்கு ஊட்டிவிட வேண்டும். கவர் இல்லாத இனிப்பு வகையை அவர்களே உண்ணலாம்.

ஐஸ்... ஐஸ் பேபி!:

இது ஜாலியான ஐஸ்க்ரீம் கேம். இதில் ஆண்களின் கண்களைக் கட்டி வரிசையாக நிற்கவைக்க வேண்டும். பெண்கள், தங்கள் பார்ட்னருக்கு ஐஸ்க்ரீம் ஊட்டிவிட வேண்டும், கைகளால் அல்ல. பெண்களின் இரு கைகளும் கட்டப்பட்டிருக்கும் நிலையில், மேஜை மீது இருக்கும் ஐஸ்க்ரீமை வாயில் வைத்திருக்கும் ஸ்பூன்கொண்டு தன் பார்ட்னருக்கு ஊட்டிவிட வேண்டும். முதலில் ஐஸ்க்ரீமை காலிசெய்யும் ஜோடியே வெற்றியாளர்கள்!

அழகிய சின்ட்ரெல்லா:

பெண்கள் அனைவரும் தங்களின் காலணிகளைக் கழற்றி குறிப்பிட்ட இடத்தில் வைத்துவிட்டு, ஓரிடத்தில் அமர்ந்திருக்க வேண்டும். பிறகு, காலணிகள் அனைத்தும் கலைக்கப்பட வேண்டும். போட்டியின் நேரம் தொடங்கியதும் ஆண்கள் அனைவரும் பெண்களின் காலணிகள் குவிந்திருக்கும் இடத்துக்குச் சென்று தங்களின் பார்ட்னரின் சரியான காலணியைக் கண்டுபிடித்து அவர்களுக்கு அணிவிக்க வேண்டும். தன் சின்ட்ரெல்லாவின் காலணியை முதலில் கண்டுபிடித்து அணிவிப்பவரே போட்டியின் வெற்றியாளர்.

காதல் விளையாட்டு:

இந்த கேம் விளையாடுவதற்கு ஒரே ஒரு டென்னிஸ் பால் மட்டுமே தேவை. பார்ட்னர் இருவரும் தங்கள் நெற்றியின் நடுவில் டென்னிஸ் பால் வைத்துப் பிடித்துக்கொள்ள வேண்டும். ஓரடி முன் அல்லது பின் குதிக்கவும், சாயவும் என்று போட்டி நடுவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும். இறுதிவரை நடுவரின் சொற்களைப் பின்பற்றி டென்னிஸ் பாலை நழுவவிடாமல் நெற்றியில் தக்கவைத்தவர்களே இந்தப் போட்டியின் வெற்றியாளர்.

Valentines Day

கப்புள் ரிலே:

இது ரொம்பவே சுவாரஸ்யமான விளையாட்டு. இதற்குத் தேவையானப் பொருள்கள், சாக்லேட் மற்றும் காற்றடைத்த பலூன். போட்டியின் நடுவர் கை அசைத்ததும், ஆண்கள் அனைவரும் குறிப்பிட்ட இடத்தில் வைத்துள்ள சாக்லேட்டைச் சாப்பிட வேண்டும். பிறகு, தான் சாப்பிட்டு முடித்ததை வேறோரிடத்தில் இருக்கும் தன் பார்ட்னருக்கு நேராகச் சென்று சொல்லாமல் ஏதோ ஒருவகையில் தகவலை அனுப்ப வேண்டும் (இதில்தான் பார்ட்னர்களின் சாமர்த்தியம் ஒளிந்திருக்கிறது). அந்தத் தகவல் சென்றடைந்ததும் பெண்கள், அவர்கள் கைகளிலிருக்கும் காற்றடைத்த பலூனை உடைத்து தன் பார்ட்னரை நோக்கிச் செல்ல வேண்டும். இருவரும் இணைந்த பிறகு போட்டியின் முற்றிடம் சென்றடையும் முதல் ஜோடியே சிறந்த வேலன்டைன் ஜோடி!

ஹார்ட் டாட்டூ கேம்:

இந்த கேம் விளையாடுவதற்கு கலர் மார்க்கர் அல்லது முகச்சாயம், துண்டு ஆகியவை தேவை. இவற்றை வைத்துக்கொண்டு காதலர்கள் தன் பார்ட்னரின் முகம் அல்லது கைகள் மீது குறிப்பிட்ட நேரத்துக்குள் டாட்டூ வரைய வேண்டும். இதன் தீம் காதல்தான். அனைவரையும் வசீகரிக்கச் செய்த டாட்டூவுக்குப் பரிசு!


டிரெண்டிங் @ விகடன்