வெளியிடப்பட்ட நேரம்: 09:43 (14/02/2018)

கடைசி தொடர்பு:09:43 (14/02/2018)

விராட், தோனி, ரெய்னா... ரொமான்ஸ் செய்தது எப்படி? கிரிக்கெட்டர்களின் லவ் ஸ்டோரி!

என்னதான் கிரிக்கெட்டில் கில்லியாக இருந்தாலும், காதல் என்று வரும்போது தனது விக்கெட்டை (மனதை) பறிகொடுக்கதான் வேண்டும். அப்படி கிரிக்கெட்டில் நடந்த கியூட் காதலை வெளிப்படுத்தி, ஸ்வீட்டாக வாழ்ந்துவரும் கிரிக்கெட் ஜோடிகள் இவர்கள்தான்!

ஹர்பஜன் சிங் - கீதா பாஸ்ரா :

ஹர்பஜன் - கீதா பாஸ்ரா (கிரிக்கெட்)

கீதா பாஸ்ரா பாலிவுட்டில் சில படங்கள் நடித்திருக்கிறார். இவர் நடித்த `தி டிரெயின்' எனும் படத்தில் `ஓ அஜ்னபி' எனும் பாடலைப் பார்த்த ஹர்பஜன் `பார்த்தவுடன் காதல்' வலைக்குள் விழுந்துவிட்டார். `எப்படியாவது பேசிவிட வேண்டும்' என்று துடித்த ஹர்பஜன், அவரின் நண்பரிடம் `எனக்கு இந்தப் பெண்ணைப் பார்க்க வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார். பின், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பையை வென்றவுடன் கீதா பாஸ்ராவின் நம்பர் ஹர்பஜனுக்குக் கிடைத்தது. `நான் ஹர்பஜன் சிங், உங்ககூட ஒரு டீ இல்ல காபி குடிக்கலாம்'னு மெசேஜ் அனுப்பியிருக்கிறார். மூன்று நாள்கள் ஆகியும் கீதா எந்தவித ரெஸ்பான்ஸும் செய்யவில்லை. தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்த ஹர்பஜன் சிங்கிற்கு கீதாவிடம் இருந்து ஒரு மெசேஜ்... `டி-20 உலகக் கோப்பை ஜெயிச்சதுக்கு என்னோட வாழ்த்துகள், இந்திய மண்ணுக்குப் பெருமை சேர்த்து எங்களுக்குப் பெருமை தேடிக் கொடுத்துட்டீங்க' என ரிப்ளை செய்தார். அங்கிருந்துதான் இருவருக்குமிடையே காதல் மலர, நீண்ட நாள் காதலுக்குப் பின் 29, அக்டோபர் 2015 அன்று இவர்களுடைய திருமணம் முடிந்தது.

யுவராஜ் சிங் - ஹேசல் கீச் :

யுவராஜ் - ஹேசல் கீச்

ஹேசல் கீச் `பில்லா' படத்தின் `செய் ஏதாவது செய்' பாடலின் மூலம் நமக்கு பரிச்சயம். மீடியாவுக்கு பயந்து வெளியில் சொல்லாமல் சில ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தார்கள். இவர்கள் காதலித்து வந்தது ஹர்பஜனோடு சேர்த்து யுவராஜின் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். ஹர்பஜன் `சீக்கிரம் உன் காதல் விஷயத்தை சொல்லிரு' என்று மறைமுகமாக யுவராஜுக்கு ட்வீட் போட்டுள்ளார். அதைத் தொடர்ந்து தனக்கு நெருங்கியவர்களை மட்டும் அழைத்து ஹர்பஜனுக்கு திருமணம் முடிந்த அடுத்த மாதமே தனது நிச்சயதார்த்தையும் முடித்துக்கொண்டார். அதிகாரப்பூர்வமாக இருவரும் தங்களது திருமண செய்தியை ட்விட்டரில் பதிவிட்டுத் தங்களது அன்பை பகிர்ந்துகொண்டனர். யுவாராஜின் வீட்டிலும் ஹேசலை மருமகளாக முழு மனதுடன் ஏற்றுக்கொண்டார்கள். 

ஆயிஷா முகர்ஜி - தவான் :


தவான் - ஆயிஷா

ஆயிஷா முகர்ஜி இந்தியாவில் பிறந்த கொஞ்ச நாளிலேயே தனது குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிவிட்டார். எல்லா விளையாட்டுகளின் மீதும் மிகுந்த ஈர்ப்புடையவர் ஆயிஷா. கிக் பாக்ஸிங் பயிற்சியும் பெற்றவர். என்னதான் ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகியிருந்தாலும் இந்திய உணவுகள்தான் இவருக்குப் பிடிக்குமாம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டார். பின், சில ஆண்டுகளிலேயே இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். ஃபேஸ்புக் மூலம் ஆயிஷாவை தவானுக்கு அறிமுகம் செய்திருக்கிறார் ஹர்பஜன். ஆயிஷாவின் போஸ்டுகள் தவானுக்குப் பிடித்துப்போக, அவருக்கு ஃப்ரெண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பியிருக்கிறார். அவரும் அதை ஏற்றுக்கொண்டார். நட்பாக ஆரம்பித்த பழக்கம் காதலாகி மாறி, கல்யாணத்தில் வந்து நின்றது. 2012-ல் இருவரும் திருமணம் செய்துகொண்டர். 

தோனி - சாக்‌ஷி :

தோனி - சாக்‌ஷி

தோனியின் காதல் கதையை அவரது கதையை மையமாக வெளிவந்த `MS Dhoni : The untold story' படத்தை வைத்து நாம் ஒருவிதமாகக் கணித்திருப்போம். ஆனால், தோனி - சாக்‌ஷியின் காதல் கதை அதிலிருந்து சற்று மாறுபட்டது. தோனியும் சாக்‌ஷியும் பால்ய நண்பர்கள். தோனியின் தந்தையும், சாக்‌ஷியின் தந்தையும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்கள். இரண்டு குடும்பங்களும் சுமுகமான உறவைத் தக்கவைத்துக்கொண்டனர். அதன்படி இருவரும் ராஞ்சியில் ஒரே பள்ளியில் சேர்ந்தனர். பின் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக சாக்‌ஷியின் குடும்பம் டேராடூனுக்குப் பயணப்பட்டது. தொலைவு இவர்களுக்குள் பிரிவை ஏற்படுத்தியது. இருவரும் தங்களது இலக்கை நோக்கி ஓடத்தொடங்கினர். பின் இருவரும் எதிர்பாராதவிதமாக ஹோட்டலில் பார்த்துக்கொள்ளும் தருணம்தான் படத்தில் காட்சியாக இடம்பெற்றிருக்கும். அதன் பின் லவ்வுதான், காதல்தான் கல்யாணம்தான். 

ரித்திகா சஜ்தேஹ் - ரோகித் ஷர்மா :

ரோகித் - ரித்திகா

ரோகித் ஷர்மாவின் மேனேஜராக ரித்திகா சஜ்தேஹ் அவருக்கு அறிமுகமானார். விளையாடும் இடங்கள், ஊர்கள் என எல்லா இடங்களுக்குமே இருவரும் சேர்ந்துதான் பயணிப்பார்கள். வேலையாக ஆரம்பித்த இவர்களது உறவு நட்பாக மாறத் தொடங்கியது. பின், நெருங்கிய நண்பர்களாகப் பழகத் தொடங்கினர். இருவருக்குள்ளும் காதலை உணர்ந்த இவர்கள், அதை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளவில்லை. ஆறு வருடங்கள் கழித்து ஒரு வழியாக தன் காதலை சொல்லிவிடலாம் என முடிவு செய்த ரோகித், தான் விளையாடிய முதல் மைதானத்துக்கு ரித்திகாவை அழைத்துச் சென்றார். பின், முட்டிக்கால் போட்டு பாக்கெட்டில் இருந்த மோதிரத்தை எடுத்து அவர் முன் நீட்டி `Will you marry me' என ப்ரபோஸ் செய்தார். பின் இருவரும் டிசம்பர் 2015-ல் திருமணம் செய்துகொண்டனர். 

சுரேஷ் ரெய்னா - ப்ரியங்கா சௌத்ரி :

ரெய்னா- ப்ரியங்கா

இவர்களது காதல் கதையை கிரிக்கெட்டின் பாணியில் `மேட்ச் ஃபிக்ஸிங்' என செல்லமாகக் கலாய்ப்பார்கள். சுரேஷ் ரெய்னாவும், ப்ரியங்கா சௌத்ரியும் சிறு வயது நண்பர்கள். ப்ரியங்கா குடும்பத்தினரின் பஞ்சாப் பயணம் இருவரின் தொடர்பையும் துண்டித்துவிட்டது. ஆனால், ப்ரியங்காவின் குடும்பமும் ரெய்னாவின் குடும்பமும் தங்களது உறவை தொடர்ந்துகொண்டுதான் இருந்தார்கள். யதேச்சையாக ஒருநாள் இருவரும் டெல்லி ஏர்போர்ட்டில் சந்தித்துக்கொண்டனர். பின் மீண்டும் இருவரும் பழகத் தொடங்கினர். ஆஸ்திரேலியாவில் உலகக் கோப்பை நடந்துகொண்டிருந்த நேரம், நான்கு மாதங்கள் கழித்து அம்மாவிடமிருந்து சுரேஷ் ரெய்னாவுக்கு போன் வந்தது. `உனக்கும், உன் பால்ய தோழி ப்ரியங்காவுக்கும் திருமணம்' என்று கூறி போனை கட் செய்துவிட்டாராம். அதற்குப் பின் எனது திருமணம் `மேட்ச்ஃபிக்ஸிங்' ஆகிவிட்டது என ட்விட்டரில் நக்கலாக பதிவிட்டிருந்தார். 

விராத் கோலி - அனுஷ்கா ஷர்மா :

கோலி - அனுஷ்கா

கோலி - அனுஷ்கா சந்திப்பை, 2013-ல் நடந்த டி.வி விளம்பர நிகழ்வு ஏற்படுத்திக் கொடுத்தது. நல்ல நண்பர்களாக இருவரும் பழகத் தொடங்கினர். தங்களுக்குள் இருக்கும் காதலை உணர்ந்து உணர்வுகளுக்கு தைரியம் கொடுத்தாலும், அதை வெளிப்படையாகச் சொல்ல மனம் மறுத்தது. காதலை வெளிக்காட்டுவதற்கான தருணங்கள் கிடைத்தபோதும் அதை வெளிக்காட்டாமலேயே சில தவிப்புகளுடன் நாள்களைக் கடத்தி வந்தனர். அனுஷ்கா பிறந்தநாளுக்கு கோலி சர்ப்ரைஸ் கொடுக்க, கோலி பிறந்தநாளுக்கு இவர் சர்ப்ரைஸ் கொடுக்க என்றே போய்க்கொண்டிருக்கும் நேரத்தில், 2014-ல் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தை இந்திய அணி  வென்றதோடு கோலியும் தன் காதலில் வென்றார். அதற்குப் பின் வெளிப்படையாக அனுஷ்காவுடன் இருக்கும் ரிலிஷேன்ஷிப் குறித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டார். அதற்குப் பின் எக்கச்சக்க சர்ச்சை, இருவருக்குமான கருத்து வேறுபாடுகள், இந்திய அணியின் தொடர் சரிவு என இருவர் சம்பந்தப்பட்ட விஷயம் எல்லாமே மீடியாவுக்கு செம தீனி. இருப்பினும் ஒருவருக்கொருவர் தங்களை விட்டுக்கொடுக்காமல் தங்கள் காதலை வெளிப்படுத்திய விராத் கோலி - அனுஷ்கா, `விருஷ்கா' என்றானார்கள்! 


டிரெண்டிங் @ விகடன்