வெளியிடப்பட்ட நேரம்: 17:31 (16/02/2018)

கடைசி தொடர்பு:17:31 (16/02/2018)

"கிரிக்கெட் மீதான காதலால் தான் இன்னும் விளையாடுகிறேன்" - யுவராஜ் சிங்

இந்தியாவிற்காக விளையாடுவது தனக்கு என்றுமே உற்சாகம் அளிப்பதாகக் கூறுகிறார் யுவராஜ் சிங். “நான் மேலும் இரண்டு அல்லது மூன்று ஐபிஎல் தொடர்கள் விளையாடுவேன்” என்று கூறும் 36 வயதான யுவி, தனக்குப் புற்றுநோய் ஏற்படாமல் இருந்திருந்தால், ஒரு வெற்றிகரமான டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையும், 80 போட்டிகளில் விளையாடிய அனுபவமும் கிடைத்திருக்கும் என்றும் கூறுகிறார். ஆனால், அதனை அவர் ஒரு குறையாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறும்போது, எவ்வித மனக்கசப்பும் இல்லாமல் வெளியேற விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். 

யுவ்ராஜ் சிங்

கடந்த 2017ம் ஆண்டு ஜனவரியில் சர்வதேச கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுத்த யுவராஜ், இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டி உள்பட 11 போட்டிகளில் விளையாடினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு விளையாடிய அவர், அதன்பின் நடந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இடம்பெறாமல் போனார். செப்டம்பர் மாதம் நடந்த தொடரிலும் அவர் இடம்பெறாத காரணத்தினால், அவர் வெகு சீக்கிரம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஒய்வெடுத்துக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், இந்தியாவிற்காக மீண்டும் ஒருமுறை விளையாடுவது குறித்து நம்பிக்கையோடு இருக்கிறார் யுவி. 2 கோடி ரூபாய்க்கு மீண்டும் அவரை கிங்க்ஸ் XI பஞ்சாப் உரிமையாளர்கள் தங்கள் அணியில் இணைத்துள்ளார்கள்.

ஒரு நாளிதழுக்கு அவர் அளித்திருந்த பேட்டியில், “என்னால் முடிந்ததை நான் செய்திருக்கிறேன். எந்த நேரத்தில் நான் வெளியேற வேண்டுமோ, அப்போது நான் வெளியேறுவேன். இதற்குமேல் என்னால் செய்திருக்க முடியாது. நான் இப்போதும் கிரிக்கெட் விளையாடுவதற்குக் காரணம், இந்தியாவிற்கு விளையாட வேண்டும் என்பதோ ஐபிஎல் தொடரில் விளையாட வேண்டும் என்பதோ மட்டுமல்ல. நான் கிரிக்கெட்டை நேசிக்கின்றேன் என்பதுதான். 

“வாழ்க்கையின் கடினமான சூழ்நிலைகளில் நான் போராளியாக இருந்திருக்கிறேன். பல்வேறு சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களுக்கும், புற்றுநோய் போன்ற நோய்களினால் அவதிப்படுபவர்களுக்கும் நான் உதவிகரமாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காத ஒருவனாகவே நான் அறியப்பட விரும்புகின்றேன். நான் இந்தியாவிற்காக விளையாடினாலும், இல்லையென்றாலும், என்னுடைய நூறு சதவிகித உழைப்பைக் களத்தில் அளிப்பேன். என்னுடைய YouWeCan அறக்கட்டளை மூலமாக புற்றுநோய் தொடர்பான பிரச்னைகளில் கவனம் செலுத்துவேன். குறிப்பாக, குழந்தைகளுக்கு ஆதரவாக இருப்பேன். எனக்கு இளைய தலைமுறையினரிடம் உரையாட பிடித்திருக்கிறது. வாய்ப்புகள் குறைந்த குழந்தைகளின் கல்விக்காகவும், விளையாட்டுக்காகவும் உழைப்பேன்" என்கிறார் யுவராஜ்.

யுவ்ராஜ் சிங்

தனக்கு எப்போதுமே டெஸ்ட் கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ளது என்று கூறுகிறார் யுவராஜ். நீளமான டெஸ்ட் கிரிக்கெட்டின் காரணமாக, ஒருநாள் போட்டி மற்றும் டி2௦ போட்டிகளில் அவரால் சிறப்பாக விளையாட முடிந்ததாகச் சொல்கிறார். “வளரும் வீரராக இருக்கும்போது, நான் நிறைய இரண்டு நாள் மற்றும் மூன்று நாள் விளையாட்டுப்போட்டிகளில் விளையாடினேன்.” அதனால்தான் நான்  நிறைய டெஸ்ட் போட்டிகளில் விளையாடவேண்டும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், அதற்குப் போட்டி அதிகமாக இருந்தது. 

“நான் சவுரவ் அல்லது விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோருடைய டெஸ்ட் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள விரும்பினேன். 2004 ம் ஆண்டு சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் நான்தான் இன்னிங்ஸைத் தொடங்கி வைத்தேன். ஆனால், அந்தப் போட்டியில் எட்டு ரன்களில் ஆட்டமிழந்தேன். அதற்கு அடுத்த ஆட்டம் மழையால் தடைபட்டது. அந்த வாய்ப்பும் வீணாகப்போனது. அதற்குப் பிறகு நான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகக் களமிறக்கப்பட்டேன். கங்குலி ஓய்வுபெற்றபோது எனக்கு அவருடைய இடம் கிடைத்தது. நான் என்னுடைய விளையாட்டின் உச்சத்தில் இருக்கும்போதே எனக்குப் புற்றுநோய் இருப்பதை உறுதிசெய்தார்கள். ஒருவேளை நான் தொடர்ந்திருந்தால் நான் 80 டெஸ்ட் போட்டிகள்வரை விளையாடியிருப்பேன். ஆனால், நான் அதற்காக வருத்தப்படவில்லை" என்னும் யுவராஜின் சொல்லில் கொஞ்சம் ஏமாற்றம் கலந்திருந்தது.

யுவ்ராஜ் சிங்

அவருடைய கடைசி சர்வதேசப் போட்டிக்குப் பிறகு, யுவராஜ் பஞ்சாப் அணிக்காக உள்ளூர் விளையாட்டுப்போட்டிகளில் விளையாடவில்லை. ரஞ்சிக் கோப்பை போட்டியில் மட்டுமே அவர் பங்கேற்றார். விஜய் ஹசாரே  50 ஓவர்கள் போட்டியிலும், சையத் முஷ்தக் அலி டி2௦ விளையாட்டுப் போட்டியிலும் தலைமைதாங்கினாலும், சுமாரானா ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். யாருமற்ற மைதானத்தில் விளையாடும்போது உற்சாகம் குறையும் என்பதனை ஒப்புக்கொள்ளும் அவர், அதன் காரணமாக உற்சாகம் என்பது உள்ளிலிருந்தும் வரவேண்டும் என்கின்றார்.   

“என்னைப்போன்றவர்களுக்கு ஊக்கம் என்பது உள்ளிருந்து வருகின்றது. ஆதலால் எங்களுக்கு ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் உற்சாகப்படுத்தவேண்டிய அவசியம் இல்லை. நான் மீண்டும் எனது கிரிக்கெட் வாழ்க்கையை பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குவதால் இதனை உணர்ந்திருக்கிறேன். அடிப்படையான விஷயங்களை நான் மீண்டும் அசைபோட்டுக்கொண்டிருக்கின்றேன். ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் கரவொலி உங்களை உற்சாகப்படுத்தும். ஆனால், அதே நேரத்தில் உங்களுக்கான ஊக்கம் என்பது உள்ளிருந்து வரவேண்டும். வித்தியாசமான இடங்கள், வெவ்வேறு வகையான ரசிகர்கள்; இதனை எதிர்கொள்வது எளிதல்ல. என்னால் மீண்டும்  இன்று கிரிக்கெட் விளையாட முடிகிறதென்றால் அதற்குக் காரணம் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கான சந்தர்ப்பங்களை நான் எப்போதும் தவிர்க்கவில்லை”. 

சமீப காலமாக, யுவராஜ் தன்னுடைய உடல்நலத்தில் தீவிர கவனம் செலுத்திவருகிறார். தற்போது அனைத்து வீரர்களும் உடல் நலத்திலும் வலிமையிலும் கவனம் செலுத்துவதற்கு, அணித்தலைவர் விராட் கோலியின் அணுகுமுறையும் காரணம் என நம்புகிறார். வீரர்களின் உடல் வலிமைக்கு அளவுகோலாக நிர்வாகம் நிர்ணயித்திருக்கும் யோ – யோ தேர்விலும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் யுவராஜ். 

கோலி - தோனி

“நிச்சயமாக கோலி தோனியிடமிருந்து மாறுபட்டவர்தான். தோனி அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பார். கோலி சற்று தீவிரமாக இருப்பார். அப்போது காலம் மாறுபட்டிருந்தது. அனுபவம்வாய்ந்த, போட்டியில் வெல்லும் திறமை பெற்ற வீரர்கள் தோனியின் அணியில் இருந்தார்கள். எல்லாம் சரியான அமைப்பில் இருக்கும்போது தோனி தலைமை பொறுப்பேற்றார். ஆனால், விராட்டின் தலைமையில் நிறைய மாற்றங்களை அணி கண்டுள்ளது. அவர் உடலைத் திடமாக வைத்துக்கொள்வதால், அணியில் இருக்கும் அனைவருக்குமே உடல் கட்டுக்கோப்பாக இருப்பது அவசியம் ஆகிறது. முந்தைய தலைமுறையைவிட தற்போதுள்ள வீரர்கள் உடலினை மேலும் மெருகேற்றியுள்ளார்கள். இப்போது போட்டிகளும் கடுமையாக உள்ளதல்லவா? விராட் உலகக்கோப்பையினை மனதில் வைத்து மிகச்சரியான உடற்பயிற்சி, உணவுப்பழக்கம் ஆகியவற்றைக்கொண்டு அணியை வழிநடத்திச் செல்கிறார்" என்று கூறிய 'கம்பேக் நாயகன்' யுவி, இன்னொரு கம்பேக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறார்.  


டிரெண்டிங் @ விகடன்