டி20 கிரிக்கெட்டில் 243 ரன்களை விரட்டிப் பிடித்து வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா!

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 243 ரன்களை சேஸ் செய்து சாதனை படைத்தது. 

வார்னர்


ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது. 5வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கப்தில், முன்ரோ தொடக்க வீரர்களாகக் களமிறங்கினார்கள். ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை இருவரும் சிதறடித்தனர். 9.2 ஓவர்களிலேயே அணியின் ஸ்கோர் 100 ரன்களுக்கு எகிறியது. இருவரும் அரைசதம் கடந்தனர். ஸ்கோர் 132 ரன்களாக உயர்ந்தபோது முன்ரோ ஆட்டமிழந்தார். அவர் 33 பந்துகளில் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 76 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கப்தில்  49 பந்துகளில் 6 பவுண்டரி 9 சிக்ஸருடன் சதமடித்தார். அவர் 105 ரன்களுக்கு அவுட்டானார். நியூஸிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்தது. 

மேக்ஸ்வெல்


244 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர், டி ஆர்கி ஷார்ட் ஆகியோர் அதிரடியாக விளையாடி சிறப்பான தொடக்கம் அளித்தனர். இவர்களின் ஆட்டம் நியூஸிலாந்து வீரர்களைவிடவும் ஆக்ரோஷமாக இருந்தது. 7.1 ஓவர்களிலேயே அணியின் ஸ்கோர் 110 ரன்னைத் தொட்டது. வார்னர் 24 பந்துகளில் 4 பவுண்டரி 5 சிக்ஸருடன் 59ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஷார்ட் 44 பந்துகளில் 8 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 76 ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்களும் அதிரடியைத் தொடர ஆஸ்திரேலியா வெற்றியை எட்டிப்பிடித்தது. 18.5 ஓவர்களில் அந்த அணி 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பிஞ்ச் 36 ரன்களுடன் (14 பந்து 3 பவுண்டரி 3 சிக்ஸர்) களத்திலிருந்தார்.  மேக்ஸ்வெல் 14 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். நியூஸிலாந்து வீரர்கள் எக்ஸ்ட்ரா வகையில் 20 ரன்கள் விட்டுக்கொடுத்தது அந்த அணிக்குப் பின்னடைவாக அமைந்தது. 

டி20 கிரிக்கெட்டில் இவ்வளவு பெரிய ஸ்கோரை எட்டிப்பிடித்த அணி என்ற சிறப்பை ஆஸ்திரேலியா பெற்றுள்ளது. இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 236 ரன்களை எட்டிப்பிடித்ததே சாதனையாக இருந்தது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!