“திறமையை வெளிப்படுத்தியும் அணியில் இடமில்லாததால் வேதனை அடைந்தேன்!” - சுரேஷ் ரெய்னா ஆதங்கம்

சிறப்பாக விளையாடியும் அணியிலிருந்து கழற்றிவிட்டது வருத்தமளித்ததாக இந்தியக் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். 

Raina


இந்தியக் கிரிக்கெட் வீரர்  சுரேஷ் ரெய்னா. வயது 31. இந்திய அணிக்காக 223 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 65 டி20 போட்டிகளில் விளையாடியவர். கடைசியாக, சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டி 20 போட்டியில் விளையாடிய ரெய்னாவுக்கு அதன்பிறகு அணியில் இடம் கிடைக்கவில்லை. அந்தப் போட்டியில் ரெய்னா 63 ரன்கள் எடுத்திருந்தார். இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ள யோ-யோ சோதனையில் தேர்ச்சி பெறாததே ரெய்னா இந்திய அணியில் இடம்பெற முடியாததற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், ரெய்னா இந்தச் சோதனையில் தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 போட்டி தொடரில் ரெய்னா இடம்பிடித்துள்ளார்.

அணியில் இடம்பிடிக்க முடியாதது பற்றி பேசிய ரெய்னா, “திறமையை வெளிப்படுத்தியும் அணியிலிருந்து கழற்றி விடப்பட்டது என்னை காயப்படுத்தியது. தற்போது நான் யோ-யோ டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளேன். இது என்னை வலிமைப்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாக எடுத்த கடின பயிற்சியால் இந்திய அணிக்காக விளையாடலாம் என்ற கனவு இன்னும் வலுவடைந்துள்ளது. எனக்கு 31 வயதாகிறது. வயதை பெரிய விஷயமாக நான் கருதவில்லை. இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. 2019-ம் ஆண்டு உலகக் கோப்பையில் விளையாடுவதே இலக்கு. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக விளையாடுவேன் என்ற நம்பிக்கையுடன் உள்ளேன். அணியில் இடம்பிடிக்க முடியாமல்போன கடினமான காலங்களில் குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!