``எனது வெற்றியில் மனைவி அனுஷ்காவுக்கு பெரிய பங்கு இருக்கிறது!’’ - நெகிழ்ந்த விராட் கோலி

`எனது வெற்றிக்கு என் மனைவிக்கும் பெரிய பங்கும் உள்ளது' என இந்திய அணியின் கேப்டன் கோலி, மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு புகழாரம் சூட்டியுள்ளார். 

india vs south africa

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராகச் செஞ்சுரியனில் நேற்று நடைபெற்ற 6 வது மற்றும் இறுதி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் இத்தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்திய அணி அசத்தியுள்ளது .இப்போட்டியில் அபாரமாக விளையாடிய கேப்டன் கோலி ஒருநாள் போட்டியில் தனது 35 வது சதத்தைப் பூர்த்திசெய்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப்பாதைக்கு கூட்டிச்சென்றார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க மண்ணில் ஒரு நாள் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை அவர் பெறுகிறார். இத்தொடரின் மத்தியில் ஐ.சி.சி பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடம் சென்ற கோலி, தற்போது 3 சதங்கள் அடித்ததுடன் பல சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார்.

kohli

ஒரு நாள் தொடரில் கேப்டனாக அடித்த சதத்தில் கோலி 13 சதங்களுடன் தற்போது 2-வது  இடத்துக்கு முன்னேறியுள்ளார். இவர் இச்சாதனையை 46 இன்னிங்ஸில் நிகழ்த்தியுள்ளார். இதற்குமுன்பு தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் இதே சாதனையை 98 இன்னிங்ஸில் நிகழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 220 இன்னிங்ஸில் 22 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார்.

இரு அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடரில் 500 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையைக் கோலி நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்பு, 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் 491 ரன்கள் குவித்ததே அதிகபட்சமான ஸ்கோராக இருந்தது. இதேபோல், இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் 3 சதங்களைக் குவித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 2003-ம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியும் 2004-ம் ஆண்டில் நடைபெற்ற முத்தரப்பு தொடரான வி.பி.(VB) சீரிஸில் முன்னாள் வீரர் வி.வி.எஸ் லக்ஷ்மனும் 3 சதங்கள் அடித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

'அடுத்த சச்சின் டெண்டுல்கர்' என்று கிரிக்கெட் ரசிகர்களால் மகிழ்ச்சியோடு அழைக்கப்படும் கோலி, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனை ஒன்றையும் தகர்த்துள்ளார். ஓர் ஆண்டில் குறைந்த நாள்களில் 500 ரன்களைக் கடந்த வீரர் என்று சச்சின் 2003-ம் ஆண்டு 69 நாள்களில் படைத்த சாதனையை கோலி 47 நாள்களில் நிகழ்த்தி பிரமிக்க செய்துள்ளார் 

anushka sharma

போட்டி முடிந்த பின்னர் கோப்பை வழங்கும் நிகழ்வில் பேசிய கோலி, "ஆண்டவன் அருளால் எனது உடல் ஃபிட்டாக உள்ளது. இன்னும் 8-9 ஆண்டுகள் விளையாடுவேன் என்று எதிர்பார்க்கிறேன்" எனக்  கூறினார். பின்னர் மனைவி அனுஷ்கா ஷர்மாவைப் பற்றி பேசிய அவர், "எனது வெற்றிக்கு என் மனைவிக்கும் பெரிய பங்கும் உள்ளது. நான் சோர்ந்துபோகும் நேரத்தில் அவர் எனக்கு பெரிய ஊக்க சக்தியாக உள்ளார். குறிப்பாக, இத்தொடரில் எனது வெற்றிக்கு அவர் ஒரு முக்கிய காரணமாக அமைந்தார்" என்று நெகிழ்ச்சியாகப் பேசினார்.

உலகின் அனைத்து பௌலர்களையும் தனது பேட்டால் நொறுக்கும் கோலி, தற்போது கேப்டனாக அனைத்து அணிகளையும் நொறுக்கிவருகிறார். இதே வேகத்துடன் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில்  நடைபெறும் ஐ.சி.சி உலகக் கோப்பையையும் கைப்பற்ற வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் ஆசையாக உள்ளது. அடுத்து நடைபெறும் தொடர்களில் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் ஜொலிக்க வாழ்த்துகள் 'கிங் கோலி.' 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!