வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (17/02/2018)

கடைசி தொடர்பு:17:20 (17/02/2018)

36 வயதில் `நம்பர் ஒன்': வரலாறு படைத்தார் ரோஜர் ஃபெடரர்!

டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் டென்னிஸ் அரங்கில் மீண்டும் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ளார். இதன்மூலம் மிக அதிக வயதில் டென்னிஸ் அரங்கில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார்.

Roger


ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர். வயது 36. இவர் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். டென்னிஸ் அரங்கில் அசாத்திய வீரராகத் திகழ்ந்த ஃபெடரருக்கு இடைப்பட்ட காலத்தில் சறுக்கல் ஏற்பட்டது. தொடர் தோல்விகள் வந்து சேர்ந்தன. தரவரிசையிலும் கீழே சரிந்தார். இந்நிலையில், சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டியில் கிடைத்த வெற்றி ஃபெடரர்மீது மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. 

நெதர்லாந்தில் ரோட்டர்டாம் ஓப்பன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள ஃபெடரர் காலிறுதியில் நெதர்லாந்தின் ராபின் ஹாஸை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் 4-6, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஃபெடரர் அரையிறுதிக்குள் நுழைந்தார். இந்த வெற்றியின் மூலம் ஃபெடரர் டென்னிஸ் ஆடவர் தர வரிசையில் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியிருக்கிறார். இதன் மூலம் மிக அதிக வயதில் டென்னிஸ் அரங்கில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்தவர் என்ற சாதனை ஃபெடரர் வசமாகியிருக்கிறது. இதற்கு முன்பு ஆந்த்ரே அகாஸி தன் 33 வயதில் நம்பர் ஒன் வீரராக இருந்ததே சாதனையாக இருந்தது.