செல்சீயின் தவறு... இனியஸ்டாவின் மேஜிக் ... 730 நிமிடக் காத்திருப்புக்குப் பின் மெஸ்ஸியின் கோல்...! #UCL #Messi #CHEBAR | Messi scored atlast against the Blues

வெளியிடப்பட்ட நேரம்: 16:42 (21/02/2018)

கடைசி தொடர்பு:18:27 (21/02/2018)

செல்சீயின் தவறு... இனியஸ்டாவின் மேஜிக் ... 730 நிமிடக் காத்திருப்புக்குப் பின் மெஸ்ஸியின் கோல்...! #UCL #Messi #CHEBAR

எட்டு பார்சிலோனா வீரர்கள் கோல்போஸ்ட் அருகில் டிஃபண்ட் செய்துகொண்டிருக்கிறார்கள். மொத்த மிட்ஃபீல்ட் யூனிட்டும் பாக்ஸுக்கு அருகில்தான் இருந்தது. வில்லியனின் காலில் பந்து. ஏற்கெனவே சிலமுறை பார்சிலோனா வீரர்களை ஏமாற்றி கோல் பகுதியை முற்றுகையிட்டுக்கொண்டிருந்தார். அதனால், அனைத்து பார்கா வீரர்களும் கீழே இறங்கி ஆடினார்கள். இடதுபுறமிருந்து வலது நோக்கி முன்னேறுகிறார் வில்லியன். பாக்ஸுக்கு வெளியே இருந்து ஷாட் அடிக்கிறார். தன் நீண்ட கால்கள் கொண்டு அதைத் தடுக்க முற்படுகிறார் செர்ஜியோ பொஸ்கிட்ஸ். ஆனால், முடியவில்லை. 

வில்லியன்

அது அற்புதமான 'curler'. ஓர் அழகிய பெண்ணின் கூந்தலை வரையும் ஓவியனின் கை போல வளைந்து, கோல்போஸ்ட் நோக்கிப் பயணப்பட்டது. ஆனால், வலது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறுகிறது...ஜஸ்ட் மிஸ்! மொத்த ஸ்டாம்ஃபோர்ட் ப்ரிட்ஜ் மைதானமும் நிசப்தமடைந்துவிட்டது. நீல நிறக் கொடியோடு "ப்ளூ இஸ் தி கலர்" என்று பாடிக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு அது ஏமாற்றமாக அமைந்தது. பயிற்சியாளர் ஆன்டோனியோ கான்டே (Antonio Conte) முகத்தில் மிகப்பெரிய ஏமாற்றம். வில்லியனின் முகத்திலும். ரியல் மாட்ரிட், யுவன்டஸ் போன்ற அணிகளுக்கெல்லாம் தண்ணி காட்டிய பார்சிலோனா கொஞ்சம் தடுமாறத்தான் செய்தது.

இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள். காரணம், பார்சிலோனா இதுநாள்வரை செல்சீ அணிக்கெதிராக சமீப காலமாக தடுமாறியே வந்துள்ளது. 2012 சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் செல்சீயால்தான் வெளியேற்றப்பட்டது. இந்த அணியுடனான கடைசி 6 போட்டிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறவில்லை. அனைத்துக்கும் மேலாக... இந்த நூற்றாண்டின் ஆகச் சிறந்த வீரன், மாயாஜால வித்தகன், கோல் மெஷின் லயோனல் மெஸ்ஸி, செல்சீ அணிக்கெதிராக ஒரு கோல் கூட அடித்ததில்லை. ஆம், 8 போட்டிகளாக... 655 நிமிடங்களாக... அந்த லண்டன் கிளப்புக்கு எதிராக அவரால் கோல் போட முடியவில்லை. இதுதான் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரிக்கக் காரணம். 

 

41-வது நிமிடம். செல்சீ ஏரியாவிலிருந்து வந்த லாங் பாஸை செர்ஜி ராபர்டோவால் சரியாக க்ளியர் செய்ய முடியாமல் போக, பந்து ஹசார்ட் வசம் சென்றது. பாக்ஸுக்கு வெளியில் நின்றிருந்த வில்லியனுக்குப் பாஸ் செய்தார். பந்து சிக்கியதும் கோல் போஸ்ட் நோக்கி அடித்தார். ஆனால், இந்த முறை போஸ்டின் இடதுபுறம். மீண்டும் போஸ்டில் பட்டு வெளியேறியது. ஒட்டுமொத்த செல்சீ ரசிகர்களும் உறைந்துபோனார்கள். Conte விரக்தியின் உச்சத்துக்குச் சென்றுவிட்டார். இரண்டு கோல்கம்பத்தையும் அடித்த வில்லியனால் தன்னையே நம்ப முடியவில்லை. கடந்த வாரம் ஹல் சிட்டி அணியுடனான போட்டியில் 2 கோல்கள் அடித்த பிறகு, ஒருமுறை போஸ்டை அடித்தார். அந்த வகையில் 'Hitting the woodwork'ல் வில்லியன் படைத்தது ஹாட்ரிக். ஆனால், அவர் மனம் உடைந்துவிடவில்லை. 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸி, இனியஸ்டா, ஹசார்ட், சுவாரஸ் போன்ற வீரர்கள் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை. செல்சீ அணியின் கட்டுக்கோப்பான அரணைத் தாண்டி அவர்களால் எந்த வித்தையும் அரங்கேற்ற முடியவில்லை. குறிப்பாக, மெஸ்ஸியின் கால்களுக்குப் பந்து சென்றாலே, நீலச் சட்டைகள் அவரைச் சூழ்ந்துவிடும். தடுப்பாட்டத்தில் சொதப்பும் ஃபேப்ரகாஸ், பெட்ரோ இருவரும்கூட மெஸ்ஸிக்குத் தண்ணி காட்டினார்கள். முன்னாள் பார்சிலோனா வீரர்களான அவர்கள் இருவரும் தங்கள் அணியின் ஹீரோவுக்குத் தடையாக இருக்க, அங்கு கூடியிருந்த பார்சிலோனா ரசிகர்கள் கடும் ஏமாற்றத்துக்கு ஆளானானர்கள். 

Messi - Kante

இப்படி எதிர்பார்த்த வீரர்களெல்லாம் அமைதி காக்க, வில்லியன் அடிக்கடி மாஸ் காட்டினார். வேகமாக ட்ரிபிள் செய்வது, விங்கில் இருந்து கட் செய்து முன்னேறுவது என பார்சிலோனாவின் நடுகளத்தை ஆட்டிப் படைத்தார். அதனால் அடிக்கடி "வில்லியன்...வில்லியன்..." என்ற கோஷம்தான் லண்டனில் எதிரொலித்தது. இரண்டாவது முறை அவர் கோல்கம்பத்தை அடித்தபோதும் கூட...!

ஒண்ணு ரெண்டு எஸ்கேப் ஆன பின்னே, மூணாம் சுற்றில் முழுமை காணும்தானே...! அப்படித்தான் தன் மூன்றாவது ஷாட்டில், செல்சீக்கு முன்னிலை ஏற்படுத்திக் கொடுத்தார் வில்லியன். கிடைத்த கார்னர் வாய்ப்பில் கிராஸ் செய்யாமல், ஹசார்ட்-க்கு ஷார்ட் பாஸ் கொடுத்தார் ஃபேப்ரிகாஸ். அதை அவர் பாக்ஸுக்கு வெளியே நின்றிருந்த வில்லியனுக்குப் பாஸ் செய்தார். கார்னர் வாய்ப்பென்பதால், செல்சீ, பார்சிலோனா இரு அணி வீரர்களும் பாக்ஸுக்குள் நிறைந்திருந்தனர். இவரிடம் பந்து சிக்கியதும் பொஸ்கிட்ஸ் டேக்கிள் செய்ய விரைந்தார். உலகின் தலைசிறந்த மிட்ஃபீல்டர்களுள் ஒருவராகக் கருதப்படும் பொஸ்கிட்ஸ்-க்கு, வில்லியன் சற்றும் வாய்ப்பளிக்கவில்லை. சடசடவென வலதுபுறம் முன்னேறினார். இம்முறையும் பாக்ஸுக்கு வெளியே இருந்து ஷூட்... ஆனால், தரையோடு தரையாக அடித்தார். ரகிடிச், உம்டிடி இருவரையும் கடந்து கோல்கீப்பர் டெர் ஸ்டேகனையும் ஏமாற்றி கோலானது. ஸ்டாம்ஃபோர்ட் ப்ரிட்ஜ் அதிர்ந்தது.

வில்லியன்

கோல் அடித்ததும் டிடியர் ட்ரோக்பா போல் வில்லியன் கொண்டாட, ஒட்டுமொத்த செல்சீ ரசிகர்களின் மனதிலும் நாஸ்டால்ஜியா ஃபீலிங்! 6 ஆண்டுகளுக்கு முன்பு, இதே மைதானத்தில் பார்சிலோனா அணியை சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியின் முதல் சுற்றில் எதிர்கொண்டது செல்சீ. அதில் கோல் அடித்தவர் செல்சீ அணியின் ஜாம்பவான் ட்ரோக்பா. அந்த கோல்தான் செல்சீ இறுதிப் போட்டிக்குச் செல்லக் காரணமாக இருந்தது. அந்த சீசன் சாம்பியனும் ஆனார்கள். அன்று பயிற்சியாளராக இருந்த டி மட்டியோ இத்தாலிக்காரர். இப்போது கான்டே - இவரும் இத்தாலியர். செல்சீ ரசிகர்கள் கனவுலகில் மிதந்தார்கள். லண்டன் நீல வண்ணம் பூண்டது. 

கோல் வாங்கியவுடன் பாலினியோ வெளியே எடுக்கப்பட்டு, அலீக்ஸ் விடால் களமிறக்கப்பட்டார். பாலினியோ வெளியேற்றப்பட்டதுக்கு அவர்தான் காரணம். 16-வது நிமிடத்தில் கிடைத்த எளிதான வாய்ப்பைக் கோட்டைவிட்டார். ஆட்டத்தில் பெரிய அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தமுடியவில்லை. அதனால் மாற்றப்பட்டார். ஆனால், விடால் களமிறங்கக் காரணம் - செல்சீ மேனேஜர் Conte. புதிய பயிற்சியாளர் வெல்வெர்டே பதவியேற்ற பிறகு 4-4-2 ஃபார்மேஷனில்தான் அதிக போட்டிகளில் பார்சிலோனா களமிறங்கியது. ஓரளவு அது பலனும் தந்தது. ஆனால், அணிகள் அறிவிக்கப்பட்டபோதே அவர்களின் திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருந்தார் Conte. 

ஆன்டோனியோ கான்டே

அல்வாரோ மொராடா, ஆலிவியர் ஜிரௌட் என இரு ஸ்ட்ரைக்கர்களில் யார் களமிறக்கப்படுவார் என எல்லோரும் யோசிக்க, இருவரையும் இறக்காமல், வில்லியன், பெட்ரோ, ஹசார்ட் கூட்டணியைக் களமிறக்கினார் Conte. மூவருமே கவுன்டர் அட்டாக்கில் கில்லிகள். அதுதான் பார்சிலோனாவின் கேம் பிளானை பாதித்தது. வழக்கமாக அட்டாகிங் கேம் ஆடுபவர்களை, அவர்களின் நடுகளத்திலேயே தேங்க வைத்தது. மெஜிஸியன் இனியஸ்டா கூட 'டீப் ரோலி'ல்தான் விளையாடினார். 70 சதவிகிதத்துக்கும் மேலாக பந்தை வசப்படுத்தியிருந்தபோதும் அவர்களால் ஒரு ஷாட் கூட கோல் நோக்கி அடிக்க முடியவில்லை.  அவர்களின் திட்டங்களை லைன் அப் மூலமாகவே உடைத்தார் Conte. "ஆன்டோனியோ... ஆன்டோனியோ..." என்று ரசிகர்கள் முழங்கினார்கள். சிறு அணிகளிடம் தோற்றதால் பதவி நீக்கம் செய்யப்படுவார் என்று சில வாரங்களுக்கு முன்பு பேசப்பட்டது. ஆனால், பார்சிலோனா எனும் அரக்கனை தன் கன்ட்ரோலில் அவர் வைத்திருக்க, ஒட்டுமொத்த செல்சீ ரசிகர்களும் அவரைக் கொண்டாடத் தொடங்கினார்கள். 

நடுகளத்தில் முதலில் தடுமாறிய Kante, ஃபேப்ரிகாஸ் இருவரும் சுதாரித்துக்கொண்டு அசத்தியதால், பார்சிலோனா செல்சீ அணியின் தடுப்பை உடைக்கப் போராடியது. முதல் பாதியில் சைலன்டாக இருந்த சுவாரஸ், இரண்டாம் பாதியில் pressing கேம் மூலம் கொஞ்சம் செல்சீ அணிக்கு வேலை வைத்தார். ஆனாலும், ஆஸ்பிளிகியூட்டா, கிறிஸ்டென்ஸன், ருடிகர் அடங்கிய மூவர் அரணை அவர்களால் உடைக்க முடியவில்லை. 2012 கிடைத்த அதே முடிவு இந்தப் போட்டியிலும் கிடைக்கும் என செல்சீ ரசிகர்கள் நம்பினார்கள். வீரர்களும் அதேபோல் விளையாடினார்கள். ருடிகர் அவ்வப்போது கவுன்டர் அட்டாக் கொடுத்து பயமுறுத்தினார். வில்லியன் ஓயாமால் போராடினார், ரத்தம் கொட்டியபோதும்!

வில்லியன்

69-வது நிமிடத்தில் பார்சிலோனா பெனால்டி ஏரியாவில், பந்து முகத்தில் பட, மூக்கிலிருந்து ரத்தம் சொட்டக் கீழே விழுந்தார் வில்லியன். சில விநாடிகள் மருத்துவ உதவி எடுத்துக்கொண்டு மீண்டும் விளையாட வந்தார். 3 நிமிடம் கழித்து, ருடிகர் செய்த கிளியரன்ஸை எடுக்க, வில்லியன், ஜோர்டி ஆல்பா இருவரும் முயன்றனர். பந்து கடந்து போனது. அப்போது வில்லியனைப் பார்த்த ஜோர்டி ஆல்பா கூட அவரது மூக்கிலிருந்து ரத்தம் வருவதைப் பார்த்து ஒரு நொடி நின்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து நடுவர் கூட ஆட்டத்தை அதற்காக நிறுத்தினார். ஆனால், வில்லியன்... களத்திலிருந்து வெளியேறவேண்டும் என்றோ, ஓய்வு வேண்டுமென்றோ சிறிதும் நினைக்கவில்லை. மீண்டும் லண்டனில் அவர் பெயர் முழங்கியது!

75 நிமிடம் பார்சிலோனாவுக்குத் தண்ணி காட்டிய செல்சீ அணி செய்தது ஒரேயொரு தவறுதான். அந்த ஒரு தவறு ஆட்டத்தின் போக்கை அப்படியே மாற்றிவிட்டது. கிறிஸ்டென்ஸன் செய்த பாஸை, ஃபேப்ரிகாஸ் எடுக்காமல் விட்டுவிட, அதை நோக்கி ஓடிவந்தார் இனியஸ்டா. அவரைப் பார்த்ததும் பிளாக் செய்ய விரைந்தார் ஆஸ்பிளிக்கியூட்டா. ஃபேப்ரிகாஸ் தவறு செய்வது இயற்கைதான். ஆனால், ஆஸ்பி அப்படியல்ல. பெர்ஃபெக்ஷன், கன்சிஸ்டென்ஸி இரண்டுக்குமே அவர்தான் மறு பெயர். அப்படிப்பட்ட ஆஸ்பி தன் முடிவில் தவறிழைத்தார். அந்தத் தவறைப் பயன்படுத்தினார் இனியஸ்டா.

 

 

பந்தை பாக்ஸுக்குள் கடத்திச் சென்றுவிட்டார். கோல் போஸ்ட் நோக்கி அடிக்கலாம். கோல் போக 50 சதவிகிதம் வாய்ப்புள்ளது. பெரும்பாலான வீரர்கள் அதைத்தான் செய்வார்கள். ஆனால், இது இனியஸ்டா. பாஜி ராவ் மஸ்தானி படத்தில் வரும் ரன்வீர் சிங் போல், மண்ணுக்குள் புதைந்திருக்கும் மயிலிறகின் அடி நுனியையும் கண்களால் காண்பவர். 100 சதவிகித வாய்ப்பு எங்கே..? தேடினார். சுவாரஸ் கோல் போஸ்டின் மிக அருகில் நிற்கிறார். பாஸ் செய்தால் கோல் போடுவது ஈசி. ஆனால்... ஃபேப்ரிகாஸ் ஸ்லைட் செய்தால், பாஸைத் தடுத்துவிடலாம். ருடிகர் பிளாக் செய்யவும் வாய்ப்புண்டு. 

எளிதான பாஸையும் தவிர்த்தார். பின்னால் மெஸ்ஸி. ஆனால், இவர் கண்கள் கோல் நோக்கி இருக்கின்றன. மெஸ்ஸியின் நிழல் தெரிந்திருக்கக்கூட வாய்ப்பில்லை. ஆனால், மெஸ்ஸியின் மூளை அவருக்குத் தெரியும். மெஸ்ஸியின் கால்பந்து ஞானம் தெரியும். 14 ஆண்டுகால கெமிஸ்ட்ரி... காற்று நுழைய மறுக்கும் இடத்தில் மெஸ்ஸியின் கால்கள் நுழையும் என்று தெரியும். ஆண்டவனாலும் முடியாததை அந்த அர்ஜென்டினா வீரன் முறியடிப்பான் என்பது தெரியும். எப்படி எதிரணியின் அரணை உடைப்பதென்று தெரியும். ஏனெனில், இவன் பெயர் இனியஸ்டா... மாயக்காரன்!

மெஸ்ஸி, இனியஸ்டா

மெஸ்ஸி... இனியஸ்டாவை நன்கு அறிந்தவர் அவரைவிட யாரும் இருக்க மாட்டார்கள். அவரது கால்கள் பந்தை எங்கு செலுத்தும் என்பது இவருக்கு பரிச்சயம். எத்தனை டிஃபண்டர்கள் இருந்தாலும், அவர்களை ஏமாற்றி தன் கால்களுக்கு அதைப் பரிசாளிப்பார் என்பதை அறிந்திருந்தவர். அப்படியான கெமிஸ்ட்ரி இந்தப் போட்டியில் 75 நிமிடம்... செல்சீ அணிக்கு எதிராக 730 நிமிடம் வேலை செய்யாமல் இருந்தது ஆச்சர்யம்தான். ஆனால், அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டனர். ஒரு மைனஸ் பாஸ்... மெஸ்ஸியின் லெஃப்ட் ஃபூட் சிங்கிள் டச்... செல்சீ கோல் போஸ்டின் வலது கார்னரில் பந்து... கோல்! மெஸ்ஸியின் போராட்டம் முடிவுக்கு வந்தது. பார்சிலோனாவுக்கு அவே கோல். செல்சீ ரசிகர்களின் கனவு நொறுங்கியது. 

பந்து வலைக்குள் சென்றதும் ஆர்ப்பரித்த மெஸ்ஸியின் முகத்தில் அப்படியொரு நிம்மதி. 722 கோல்கள் அடித்தவனை, 5 பாலன் டி ஓர், 4 சாம்பியன்ஸ் லீக், ஒரு ஒலிம்பிக் தங்கம், ஒரு உலகக்கோப்பை கோல்டன் பால் விருதுகள் வாங்கியவனை... இந்த ஒற்றை கோல் இத்தனை ஆண்டுகளாக என்ன பாடு படுத்திவிட்டது! நிம்மதியின் உச்சத்தில் இருந்தார் மெஸ்ஸி. அவே ஃபேன்கள் ஏரியாவில் அதுவரை அமைதியாக நின்றிருந்த பார்கா ரசிகர்களின் சொர்க்கத்தின் வாசலைத் தொட்டுவந்தார்கள். தங்கள் ஆதர்ச நாயகனின் சந்தோஷத்தில் மொத்த உலகையும் மறந்து ஆர்ப்பரித்தார்கள். 

மெஸ்ஸி

ஒருவழியாக ஆட்டம் 1-1 என முடிய, கேம்ப் நூ மைதானத்தில் நடக்கும் இரண்டாம் சுற்றுக்கு எல்லோரும் வெயிட்டிங். ஒரு அவே கோல் அடித்திருப்பதால், பார்சிலோனாவுக்கு அந்தப் போட்டி சாதகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள். இப்படித்தான் 2012-ம் ஆண்டும் சொன்னார்கள். ஆனால், செல்சீ அதை பொய்யாக்கியது. சரித்திரம் படைத்தது. இம்முறை Conte அதை நடத்திக் காட்டுவார் என்று நம்புகிறார்கள். ஆனால், ஒவ்வொரு முறையும் சோடைபோக பர்சிலோனா ஒன்றும் கத்துக்குட்டி இல்லையே. அது பார்சிலோனா. 1 லட்சம் ரசிகர்கள் அரங்கில் கூடி, "மெஸ்ஸி... மெஸ்ஸி..." என்று முழங்குவார்கள். அந்த முழக்கத்தின் நடுவே செல்சீ வென்றால் அது மாபெரும் சரித்திர வெற்றிதான். ஆனால், மாயக்காரரகள் வித்தையக் காட்டினால் செல்சீ தவிடுபொடியாகவும் வாய்ப்புண்டு. என்ன நடக்கும்..? மார்ச் 14 தெரியும்!


டிரெண்டிங் @ விகடன்