'மரண அடி' டார்ஸி ஷார்ட்... ராஜஸ்தான் கொடுத்த ரூ.4 கோடி கம்மிதானோ...! #NZvAUS | D'arcy Short is making a huge impact with his hard hitting

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (21/02/2018)

கடைசி தொடர்பு:17:16 (17/03/2018)

'மரண அடி' டார்ஸி ஷார்ட்... ராஜஸ்தான் கொடுத்த ரூ.4 கோடி கம்மிதானோ...! #NZvAUS

டார்ஸி ஷார்ட் என்ற பெயர் திரையில் தெரிந்தது. ஃபிளெம்மிங் தொடங்கிவைக்க, ரூ. 20 லட்சத்தில்தான் ஏலம் ஆரம்பித்தது. சென்னை, சன்ரைஸர்ஸ் அணிகள் விட்டுக்கொடுக்காமல் போட்டி போட ரூ.1 கோடியானது அவரது தொகை. உடனே, சன்ரைசர்ஸ் பின்வாங்கியது. டெல்லி களத்தில் இறங்கியது. சூப்பர் கிங்ஸ் அவுட். ராஜஸ்தான் ராயல்ஸ் இன். போட்டி உக்கிரமானது. ஒரு சர்வதேசப் போட்டியில்கூட விளையாடத அந்த வீரருக்கு கடும் போட்டி. இறுதியாக ராஜஸ்தான் அணி 4 கோடிவரை செல்ல, அரை மனதாகப் பின்வாங்கியது டேர்டெவில்ஸ்.

டார்ஸி ஷார்ட்

அப்போதே அவரது பெயரை கூகுள் செய்யத் தொடங்கிவிட்டார்கள் கிரிக்கெட் வெறியர்கள். டார்ஸி ஷார்ட். வயது 27. ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்காக பிக்பேஷ் தொடரில் விளையாடுகிறார். அதிரடியாக ஆடக்கூடியவர். இவ்வளவுதான் தெரியும். அவர் ஆட்டத்தைப் பெரும்பாலானோர் பார்த்ததில்லை. வழக்கமாக அடையாளம் தெரியாத அணிகளுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் வாய்ப்பு கொடுக்கும் என்பதால், அப்போது அவரைப் பற்றி பெரிய அளவுக்குப் பேச்சு இல்லை. 

சரியாக ஒரு மாதம் கழித்து... ஆஸ்திரேலிய டி-20 அணியின் ஓப்பனர். இந்த ஃபார்மட்டின்  வரலாற்றில், மிகப்பெரிய சேஸிங் நடந்த போட்டியின் ஆட்ட நாயகன். தொடர்ச்சியாக இரண்டு அரைசதங்கள், நான்கு 50+ ஸ்கோர்கள் என மிரட்டுகிறார். போல்ட், சௌதி, சோதி, சான்ட்னர், முன்ரோ என வேகம், ஸ்விங், லெக் ஸ்பின், ஆஃப் ஸ்பின் என எல்லா வகை பௌலர்களையும் வெளுத்து வாங்குகிறார். வார்னர், மேக்ஸ்வெல், ஃபின்ச் ஆகியோரைத் தாண்டி, நிச்சயம் ஐ.பி.எல் தொடரின்போது கவனிக்கப்படவேண்டிய வீரராக இவர் திகழ்வார். 

டார்ஸி ஷார்ட்

முதல் சர்வதேசப் போட்டி... 4 ரன்களில் அவுட். அடுத்து, இடையில் நடந்த பிக்பேஷ் ஃபைனலுக்குச் செல்கிறார். 203 ரன்கள் டார்கெட். விக்கெட்டுகள் விழுந்துகொண்டே இருக்கின்றன. சளைக்காமல் போராடுகிறார். 44 பந்துகளில் 68 ரன்கள். அடுத்த போட்டி இங்கிலாந்துடன். 20 பந்துகளில் 30 ரன்கள். மீண்டும் இங்கிலாந்துடன்... ஆட்டமிழக்காமல் 36. அடுத்த போட்டி நியூசிலாந்துக்கு எதிராக. நியூசிலாந்து முதலில் பேட்டிங். 20 ஓவர்களில் 243 ரன்கள். மிகப்பெரிய டார்கெட். கூலாக ஆடுகிறார் ஷார்ட். பௌண்டரிகளாக பறக்காஸ் விடுகிறார். 44 பந்துகளில் 76 ரன்கள். சேஸ் செய்து வரலாறு படைக்கிறது ஆஸ்திரேலியா. அந்த வரலாற்றுப் போட்டியின் ஆட்ட நாயகன் - டார்ஸி ஷார்ட்.

இன்று இறுதிப்போட்டி. ஆஷ்டன் அகர் சுழலில் சிக்கிய நியூசிலாந்து, 150 ரன்கள்தான் எடுத்தது. சின்ன கிரவுண்டில் சின்ன டார்கெட்தான். ஆனால், அடிக்கடி மழையின் குறுக்கீடு அதிகமாக இருந்தது. டக்வொர்த் லீவிஸ் விதிமுறை பயன்படுத்தப்பட்டால் ரன்ரேட் அதிகமாகும். அதனால் ஆரம்பம் முதலே தாக்கத்  தொடங்கினார் ஷார்ட். 6 பௌண்டரிகள், 3 சிக்ஸர்... இவர் பொளந்துகட்ட, ஆனானப்பட்ட டேவிட் வார்னர் அடக்கி வாசித்தார்.  30 பந்துகளில் 50 ரன்கள். கோப்பையை ஆஸ்திரேலியாவின் வசம் எடுத்துவந்தார் ஷார்ட். ஆஸ்திரேலியா முத்தரப்புத் தொடரைக் கைப்பற்றிவிட்டது. 

டார்ஸி ஷார்ட்

தொடர்ந்து 5 சர்வதேச டி20 போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது ஆஸி அணி. அதுவும் பல முன்னணி வீரர்கள் இல்லாமலேயே. இந்தத் தொடரில், 5 போட்டிகளில் 196 ரன்கள் (சராசரி: 49.00, ஸ்ட்ரைக் ரேட்: 149.61) எடுத்து பட்டையைக் கிளப்பியிருக்கிறார் புதுமுக நாயகன் ஷார்ட். இவர் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தால் ராஜஸ்தான் அணி கொடுத்த 4 கோடி குறைவுதானோ என்று எண்ணத் தோன்றுகிறது. வி ஆர் வெய்ட்டிங் ஃபார் யு...!


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close