வெளியிடப்பட்ட நேரம்: 20:50 (21/02/2018)

கடைசி தொடர்பு:20:50 (21/02/2018)

`பந்துவீச்சாளரின் தலையில் பட்டு சிக்ஸருக்குப் பறந்த பந்து!’ - வீடியோ

நியூஸிலாந்தின் உள்ளூர் தொடர் ஒன்றில் பேட்ஸ்மேன் அடித்த பந்து பந்துவீச்சாளரின் தலையில் பட்டு, எல்லைக்கோட்டுக்கு வெளியில் சென்று விழுந்தது. 

Photo Credit: Twitter/BlackCaps

நியூஸிலாந்தில் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் ஃபோர்டு கோப்பைக்கான 50 ஓவர் கொண்ட ஒருநாள் தொடர் நடந்துவருகிறது. இந்தத் தொடரின் இறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் ஆக்லாந்து மற்றும் கேண்டர்பெர்ரி அணிகள் மோதிய போட்டி நடந்தது. முதலில் ஆக்லாந்து அணி பேட் செய்தது. போட்டியின் 19-வது ஓவரை கேண்டர்பெர்ரி அணியின் ஆண்ட்ரூ எல்லி வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஆக்லாந்து வீரர் ஜீத் ராவல், அதில் ஒரு பந்தை ஸ்ட்ரெய்ட் திசையில் மிக வேகமாக அடித்தார். ஆனால், அந்தப் பந்து எல்லியின் தலையில் பட்டு எல்லைக்கோட்டுக்கு வெளியில் சென்று விழுந்தது. மிகவேகமாகப் பந்து தன்னை நோக்கி வந்ததால், அந்த வேகத்துக்கு எல்லியால் கைகளை உயர்த்தித் தடுக்க முடியவில்லை. முதலில் இதை பவுண்டரியாக அறிவித்த நடுவர், பின்னர் சிக்ஸராக மாற்றி அறிவித்தார்.

இந்தச் சம்பவத்தை அடுத்து உடனடியாக பந்துவீச்சாளரின் நிலை குறித்து வீரர்களும், நடுவர்களும் சோதித்தனர். ஆனால், பந்து தாக்கியதில் ஆண்ட்ரூ எல்லிக்குப் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டது. ஆனால், பெரிய பிரச்னை இல்லை என்பதால், அவர் சிறிதுநேரத்துக்குப் பின்னர் மீண்டும் மைதானத்தில் களமிறங்கினார்.   
மீண்டும் களமிறங்கிய பின்னர், போட்டியில் இறுதி ஓவர் உள்பட 4 ஓவர்களை ஆண்ட்ரூ எல்லி வீசினார். அவரது பந்துவீச்சில் சிக்ஸர் விளாசிய ஜீத் ராவல் உள்பட 2 விக்கெட்டுகளை எல்லி வீழ்த்தினார். ஜீத் ராவல், 149 ரன்கள் எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் ஆக்லாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 304 ரன்கள் எடுத்தது.