வெளியிடப்பட்ட நேரம்: 18:47 (21/02/2018)

கடைசி தொடர்பு:18:47 (21/02/2018)

கோலி, பும்ரா, இந்தியா... ரேங்கிங்கில் எல்லா ஏரியாவிலும் `மென் இன் ப்ளூ’ நம்பர் 1

ஓராண்டில் ஒரு கிரிக்கெட் வீரர் நிறைய சாதனைகள் செய்யலாம். ஆனால், சாதனைகள் செய்வதில் சாதனை செய்து வருகிறார் விராட் கோலி. ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் டீம் இந்தியா நம்பர் - 1. பேட்ஸ்மேன், பந்துவீச்சாளர் என எல்லாவற்றிலும் நம்பர் 1 இடத்தை இந்திய வீரர்களே ஆக்கிரமிக்கிறார்கள். 'சொந்த மண்ணில் இந்தியா கில்லி. ஆனால், வெளிநாட்டில் இந்தியாவுக்கு வெற்றி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது' என்ற வரலாற்றையெல்லாம் மாற்றி எழுதி வருகிறது `மென் இன் ப்ளூ’.

சேஸ் விராட்

விராட் கோலி

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசை பட்டியலில் 900 புள்ளிகளைக் கடந்த முதல் இந்திய வீரர் என்பதுதான் விராட் கோலியின் சமீபத்திய சாதனை. இதற்குமுன் சச்சின் டெண்டுல்கர் 1998-ல் ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரின்போது 887 புள்ளிகளைப் பெற்றிருந்ததே இந்திய பேட்ஸ்மேனின் அதிகபட்ச புள்ளியாக இருந்தது.  சர்வதேச அளவில் 900 புள்ளிகளைக் கடந்த 7வது பேட்ஸ்மேன் விராட் கோலி என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸைத் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் தரவரிசையிலும் 900 புள்ளிகளைக் கடந்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் விராட் கோலியையே சாரும். தற்போது டெஸ்ட்,ஒருநாள் மற்றும் டி20 என மூன்று ஃபார்மெட்டுகளிலும் முதல் மூன்று இடங்களுக்குள் இருக்கும் ஒரே வீரரும் விராட் கோலி தான்.

ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் கோலியை அடுத்து, தென்னாப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் 844 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும்,ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் 823 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளனர். தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி 323 ரன்களைக் குவித்த ஷிகர் தவான் 4 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தில் உள்ளார்.

தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தில் 4 சதங்கள்,2 அரைசதங்கள் என இதுவரை 870 ரன்களைக் (3 டெஸ்ட்- 286, 6 ஒருநாள் - 558, டி20 - 26) குவித்துள்ளார் கோலி. இன்னும் 2 டி20 போட்டிகளில் 130 ரன்கள் அடித்தால் ஒரு சுற்றுப் பயணத்தில் 1000 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை தன்வசம் வைத்துக்கொள்வார். ஒரு சுற்றுப்பயணத்தில் 1000 ரன்களைக் கடந்த ஒரே வீரர் மேற்கிந்திய தீவுகளின் விவியன் ரிச்சட்ஸ் மட்டுமே. 1976-ல் இங்கிலாந்துக்கு எதிராக 1045 ரன்களைக் (ஒருநாள் 216,டெஸ்ட் - 829) குவித்து சாதனை படைத்தார் ரிச்சட்ஸ். 

க்ளாஸ் பும்ரா

பும்ரா

`இந்தியாவில் ஆக்ரோஷமான ஒரு பந்துவீச்சாளர் இல்லையே' என்ற குறையை போக்க வந்தவர் பும்ரா. கையைச் சுற்றி இவர் வீசும் யாக்கர்கள்தான் இவரை குறைந்த நாட்களில் நம்பர் 1 பௌலர் ஆக்கியுள்ளது. 2016-ம் ஆண்டு ஜனவரி 23 அன்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக தன் முதல் ஒருநாள்  போட்டியை ஆடினார் பும்ரா, அதிலிருந்து சரியாக 755 நாட்களில் ஐசிசி ஒருநாள் தரவரிசையில் நம்பர் 1 பௌலர்! தென்னாப்ரிக்காவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி 787 புள்ளிகளை பெற்றதன் மூலம் அதிக புள்ளிகளைப் பெற்ற 4-வது இந்திய பந்துவீச்சாளர் என்ற புகழையும் எட்டியுள்ளார். டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்டாக இருக்கும் பும்ரா, `இந்திய வேகப்பந்துவீச்சின் சொத்து' எனப் பல வீரர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

ஆஃப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷித் கானும் 787 புள்ளிகளைப் பெற்று, 6 இடங்கள் முன்னேறி 2-ம் இடத்தில் உள்ளார். 19 வயதில் டாப் பவுலர்கள் லிஸ்டில் இடம் பிடித்த ஒரே வீரர் என்ற  சாதனையை படைத்துள்ளார் ரஷித். நியூசிலாந்து அணியின் ட்ரென்ட் போல்ட் 729 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளார்.

மாஸ் இந்தியா

பும்ரா

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 5-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று 122 புள்ளிகளுடன் உலகின் நம்பர் 1 கிரிக்கெட் அணியாக மாறியுள்ளது இந்திய அணி. 117 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா இரண்டாமிடத்திலும், 116 புள்ளிகளுடன் இங்கிலாந்து மூன்றாமிடத்திலும் உள்ளன. 

தோனி,கோலி,பும்ரா

இப்போதும் `தென்னாப்பிரிக்காவில் முன்னணி வீரர்கள் காயத்தால் வெளியேறி விட்டார்கள், ஆம்லா ஃபார்மில் இல்லை' எனப் பல விமர்சனங்கள் இந்தியாவின் வெற்றி மீது வைக்கப்படுகின்றன. ஆனாலும், உலக கிரிக்கெட் அரங்கில் இந்தியா கில்லி என்பதை யாராலும் மறுக்க முடியாது. இங்கிலாந்து பயணத்தில் வென்று, இந்த விமர்சனங்களுக்கு `மென் இன் ப்ளூ’ முற்றுப்புள்ளி வைக்கும் என்பது இந்திய ரசிகர்களின் நம்பிக்கை. வாழ்த்துகள் டீம் இந்தியா.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்