டுமினி, கிளஸன் ருத்ர தாண்டவம்... வாரிவழங்கிய சாஹல்!- இந்தியா தோல்வி

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், இந்திய அணி தோல்வியடைந்தது.

Klassan

 

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி-20 போட்டி, செஞ்சூரியனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மனீஷ் பாண்டே 79 ரன்கள் சேர்த்தார். அதிரடியாக விளையாடிய தோனி, 52 ரன்கள் எடுத்தார்.  

189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தென்னாப்பிரிக்கா களமிறங்கியது. துவக்க வீரர்களாக ரீஸா ஹென்ட்ரிக்ஸ், ஜெ.ஜெ.ஸ்மட்ஸ் களமிறங்கினார்கள். ஸ்மட்ஸ் 2 ரன்களில் கேட்ச் ஆனார். ஹென்ட்ரிக்ஸ் 26 ரன்கள் எடுத்தார். 3-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய டுமினி, கிளஸன் அதிரடி காட்டினார்கள். குறிப்பாக கிளஸன் சிக்சர்களாகப் பறக்கவிட்டார்.  மிரட்டிய கிளஸன், 30 பந்துகளில் 7 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 69 ரன்கள் எடுத்து அவுட்டானார். உனட்கட், பந்துவீச்சில் அவர் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

டுமினிஅடுத்து களமிறங்கிய மில்லர், 5 ரன்களுக்கு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பெகார்டியன் களமிறங்கினார்.  மறுபுறம் நிலைத்து நின்று ஆடிய டுமினி, அரை சதத்தைக் கடந்தார். கடைசி இரண்டு ஓவர்களில், தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு 16  ரன்கள் தேவைப்பட்டன. 19-வது ஓவரை உனட்கட் வீசினார். முதல் பந்தில் பெகார்டியன் 2 ரன்கள் எடுத்தார். அடுத்த பந்து வைடு ஆனது. அதற்கு அடுத்த பந்தில் பெகார்டியன் ஒரு ரன் எடுத்தார். அடுத்த பந்தை டுமினி சந்தித்தார். புல்டாஸாக வந்த அந்தப் பந்தை டுமினி சிக்ஸருக்குத் தூக்கினார். அடுத்த பந்திலும் அவர் ஒரு இமாலய சிக்ஸர் அடிக்க, தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற்றது. 18.4 ஓவர்களில் அந்த அணி இலக்கை எட்டியது. வெற்றிக்கு வித்திட்ட டுமினி, 40 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் எடுத்து களத்திலிருந்தார். ஒருநாள் போட்டியில் சிறப்பாகப் பந்து வீசிய சாஹல், இந்தப் போட்டியில் வாரிவழங்கும் வள்ளலாக மாறினார். அவர் வீசிய 4 ஓவர்களில் 64 ரன்கள் எடுக்கப்பட்டது. ஆட்ட நாயகன் விருது கிளஸனுக்கு வழங்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!