வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (27/02/2018)

கடைசி தொடர்பு:10:50 (01/03/2018)

கங்குலி Vs சேப்பல் அத்தியாயம் எங்கு தொடங்கியது? ஒரு கிரவுண்ட்ல ஒரு தாதா! சவுரவ் கங்குலி தாதா ஆன கதை பாகம் 1 #ACenturyIsNotEnough

கங்குலி

"ஐந்து ஆண்டுகள் இந்த அணியின் கேப்டனாக இருந்திருக்கிறேன். செங்கல் செங்கல்லாக இந்த அணியை உருவாக்கியிருக்கிறேன். என்னுடைய பேட்டிங் பொசிஷன்களை விட்டுக்கொடுத்திருக்கிறேன். இந்திய வீரர்களை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக எதிரணி கேப்டன்களோடு சண்டையிட்டிருக்கிறேன். இந்திய அணியை சுமார் 200 போட்டிகளில் வழிநடத்தியுள்ளேன். ஆனால், இப்போது திடீரென்று அணியைச் சீரழிப்பவனாக மாறிவிட்டேனா...?"  - இது கங்குலியின் ஆதங்கம்.  இந்திய கிரிக்கெட்டின் மிகப்பெரிய ஆளுமை, எதற்கும் அடங்காத அந்த வங்கப்புலி, சரத் பவார் சொன்ன வார்த்தைகளால் ஆடிப் போயிருந்தது. இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த சரத் பவார் அப்படி என்ன கேட்டார்...? ஏன் கேட்டார்...? கங்குலி அதற்குக் கலங்க வேண்டிய காரணம் என்ன...? அந்த நிலைக்கு அவர் ஏன் தள்ளப்பட்டார்...? எப்படித் தள்ளப்பட்டார்...? இதுதான் 'A Century is not enough' புத்தகம். 

ஆம், கங்குலி எழுதியிருக்கும் புத்தகம். முதல் புத்தகம்! ஆனால், கங்குலியின் முதல் அகவையிலிருந்து இது தொடங்கவில்லை. கங்குலியின் கடைசி சர்வதேசத் தொடரிலிருந்து தொடங்கும் புத்தகம் non-linear பாணியில் பல விஷயங்களைப் பேசுகிறது. 2008 பார்டர் - கவாஸ்கர் தொடரிலிருந்து தொடங்கி, புனே வாரியர்ஸ் அணியுடன் முடிந்த ஐ.பி.எல் தொடர்வரை முழுக்க முழுக்க, தன் கிரிக்கெட் வாழ்வின் அந்திமக் காலத்தைப் பற்றி இந்தப் புத்தகத்தின் வாயிலாகப் பேசுகிறார் கங்குலி. அவருடன் சேர்ந்து இந்தப் புத்தகத்தை எழுதியிருப்பவர், கங்குலியின் நண்பரான கௌதம் பட்டாச்சார்யா.A Century Is Not Enough 

புத்தகத்தின் அட்டையிலேயே 'My roller-coaster ride to success' என்று போட்டிருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட்டின் கறுப்புப் பக்கமாய்த் திகழும் 'கங்குலி vs சேப்பல்' அத்தியாயத்தைப் பற்றி, இந்திய அணிக்குள் தான் மீண்டும் வருவதற்கு இருந்த தடங்கல்களைப் பற்றி, அணியில் ஆடாத நேரத்தில் தன் மனநிலையைப் பற்றி, அனைவரும் வியக்கும் வகையில் கம்பேக் கொடுத்தது பற்றி... இன்னும் நிறைய விஷயங்களைப் பேசுகிறது 'A Century is not enough'. 13 ஆண்டுகள் ஆகியும், கங்குலி - சேப்பல் மோதல் மீதான சுவாரஸ்யம் குறையவில்லை. அதைப் பற்றி ஏற்கெனவே பல விஷயங்கள் தெரிந்துள்ள நிலையில், புதிதாக, கங்குலி எதுவும் சொல்லவில்லை என்றே தோன்றுகிறது. 

A Century is Not Enough புத்தகத்தை ஆன்லைனில் வாசிக்க Juggernaut தளத்தை அணுகவும்

கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டபோதும், அணியிலிருந்து வெளியேற்றப்பட்டபோதும், தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டபோதும் தன் மனநிலை எப்படி இருந்தது என்பதைப் பற்றி இதில் விவரிக்கிறார் சவுரவ். ஆனால், தனக்கும் சேப்பலுக்கும் இடையில் நடந்த விவாதங்களைப் பற்றிய புதிய தகவல்கள் பெரிய அளவில் இல்லை. அதேவேலையில், கங்குலி - சேப்பல் அத்தியாயத்தின் ஆரம்பத்தைப் பற்றி பேசியிருக்கிறார். மேலும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியிலிருந்து தான் கழற்றிவிட்ட நிகழ்வுகளின் தொகுப்பையும் இந்தப் புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார். 

“ என் சுயசரிதை வெளிவந்தால் பலருடனும் பல பிரச்னை எழும். பெரிய பூகம்பங்கள் வெடிக்கும்" என்று சில ஆண்டுகளுக்கு முன்னாள் சொல்லியிருந்தார் கங்குலி. அவர் மிகவும் வெளிப்படையாகப் பேசக்கூடியவர் என்பதால் இந்தப் புத்தகம் அப்படி நிச்சயம் பல பூகம்பங்களைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'இது என் சுயசரிதை அல்ல. வெற்றிக்கும் தோல்விக்கும் இடைப்பட்ட பயணம்' என்று அவர் புத்தகம் வெளியான அன்று கங்குலி சொல்லியிருந்தார். ஆக, சர்ச்சைகளைக் கிளப்புவதற்கான விஷயங்கள் இதில் அதிகம் இல்லை. ஆனால், கங்குலி எனும் வீரனை, அவரது மொழியில் அறிந்து கொண்டாடுவதற்கான புத்தகம் இது. 

கங்குலி என்ற பெயரைக் கேட்டாலே ஆர்ப்பரிக்கும் அவரது டை ஹார்ட் ரசிகர்களுக்கான பொக்கிஷம் இது. வெறும் கிரிக்கெட்டோடு மட்டுமல்லாமல், ஆங்காங்கே, வாழ்க்கையைத் தொடர்புபடுத்தி எழுதியிருப்பதால், அவர் ரசிகர்களுக்கு இந்தப் புத்தகம் மிகவும் நெருக்கமாக அமையும். சர்ச்சைகளைக் கிளப்புவதாக இல்லாமல் இருந்தாலும், சில பல சர்ச்சைகளுக்கும் இந்தப் புத்தகம் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கலாம். டிராவிட், சச்சின் போன்றோருடன் தான் கொண்டிருந்த நம்பிக்கை பற்றியும் சில இடங்களில் அவர் வெளிப்படுத்துகிறார். சரி, அந்தப் புத்தகத்துல வேற என்னதான் இருக்கு...? அதைத்தான் இன்னும் சில தினங்கள் பேசப் போகிறோம்... கங்குலி ரசிகர்களுக்காக... சாரி, தாதா வெறியர்களுக்காக!

கங்குலி

``நீ எடுக்கும் முடிவுதான் நீ யார் என்பதைத் தீர்மானிக்கும். அதுவே உன் வாழ்க்கையையும் தீர்மானிக்கும். உனக்கு முன்பிருந்தவர்கள் சாதிக்காத ஒரு விஷயத்தைச் செய்வதற்கு, எதற்காகத் தயங்க வேண்டும்? நான் ரிஸ்க் எடுக்கத் தயங்குவதில்லை" - 2003-04 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தைப் பற்றி இப்படி எழுதியிருக்கிறார். ஓய்வுபெற்று 10 ஆண்டுகள் ஆன பின்பும், அசைக்க முடியாத ஆளுமையாக அவர் வலம்வரக் காரணம் இந்த ஆட்டிடியூட்தான்!

சாதாரணமாகப் பார்த்தால் அது வெறுமனே ஒரு டெஸ்ட் தொடர்தான். ஆனால், கங்குலிக்கு அது சாதாரண டெஸ்ட் தொடர் அல்ல. தன் அணி போராடப்போகும் மிகப்பெரிய யுத்தம். கிரிக்கெட்டின் ராஜாவை வீழ்த்தி, அந்த அரியணையில் ஏறுவதற்கான நுழைவுவாயில் அந்தத் தொடர். அதை அவர் சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. டிசம்பர் மாதம் தொடங்கிவிருந்த தொடருக்கு, 5 மாதங்கள் முன்பிருந்தே தயாராகியிருக்கிறார் கங்குலி. அதுவும் சாதாரணமாகவா...? இந்திய வீரர்களுக்கே தெரியாமல், இந்திய மீடியாவுக்குத் தெரியாமல், அவரைப் பின்தொடர்ந்துகொண்டேயிருக்கும் கொல்கத்தா மீடியாவுக்குத் தெரியாமல் ஆஸ்திரேலியா பயணப்பட்டுள்ளார் கங்குலி. யாருக்கும் தெரியாமல் எதற்காக இப்படி ஒரு பயணம்?

2003 - ஆஸ்திரேலியா கிரிக்கெட்டின் உச்சிக்கொம்பில் நின்றுகொண்டிருந்தது. அசைக்க முடியாத சக்தியாக விளங்கியது. அதுவும் சொந்த மண்ணில் அவர்களை வீழ்த்துவதென்பது சாதாரண விஷயமல்ல. 23 ஆண்டுகளாக இந்தியாவால் அங்கு ஒரு டெஸ்ட் போட்டியில்கூட வெற்றி பெற முடியாமல் இருந்தது. இதையெல்லாம் உடைக்க வேண்டும். இந்திய அணிக்குப் புதிய அடையாளத்தைத் தர வேண்டும். அதற்கு, தான் முன்னால் நின்று வழிநடத்த வேண்டும். ஆஸ்திரேலியா பயணித்தார். ஒவ்வொரு மைதானத்தையும் பார்வையிட்டார். அதன் தன்மையை அறிந்தார். அப்போதே திட்டங்கள் வகுத்தார். அதுவும் சின்னச் சின்ன விஷயங்களுக்காக... 

கங்குலி

சொல்லப்போனால், இந்தப் பயணம்தான் கங்குலிக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்துவிட்டது. ஆகச்சிறந்த ஆஸ்திரேலிய அணியை, தான் ஆட்டுவிக்கக் காரணமாக இருந்தது இந்தப் பயணம்தான். அதேசமயம், தன் கிரிக்கெட் வாழ்வின் அஸ்திவாரத்தை ஆட்டிப் படைத்து அதைத் தரைமட்டமாக்கியதும் இந்தப் பயணம்தான். ஆம், கங்குலி - சேப்பல் முதல் சந்திப்பு இந்தப் பயணத்தின்போதுதான் நிகழ்ந்துள்ளது. கங்குலி வேண்டி விரும்பிய பயணம், மிகவும் நேசித்த பயணம், தன்னை மெருகேற்றியதாக நினைத்த பயணம்... தன் வில்லனையும் கண்முன்னே காட்டியது. 

A Century is Not Enough புத்தகத்தை ஆன்லைனில் வாசிக்க Juggernaut தளத்தை அணுகவும்

கங்குலி எதற்காகச் சேப்பலைச் சந்தித்தார்...? அந்தப் பயணத்தில் என்ன நிகழ்ந்தது...? அசைக்க முடியாத அணியான ஆஸ்திரேலியாவைச் சாய்க்க அப்படி என்னென்ன யுக்திகளை தாதா கையாண்டார்...? அடுத்த பாகத்தில்...!


டிரெண்டிங் @ விகடன்