1,800 கோடிப்பே.. நெய்மர் காயம்... பி.எஸ்.ஜி மீது கடுப்பாகும் பிரேசில்! | Neymar injured... It's Brazil Vs PSG now...

வெளியிடப்பட்ட நேரம்: 18:04 (28/02/2018)

கடைசி தொடர்பு:18:04 (28/02/2018)

1,800 கோடிப்பே.. நெய்மர் காயம்... பி.எஸ்.ஜி மீது கடுப்பாகும் பிரேசில்!

பட்ட காலிலே படும் என்பது நெய்மருக்குப் பக்காவாகப் பொருந்தும். கடந்த ஞாயிற்றுக்கிழமை Ligue 1 தொடரில் மார்சிலிக்கு எதிரான போட்டியின்போது நெய்மர் காயமடைந்தார். அனல் பறக்கும் ஆட்டம் இல்லை; ஆக்ரோஷமான டேக்கிள் இல்லை; ஆனாலும், அவர் கீழே விழுந்தார். வலது காலின் முன்பாதப் பகுதியை எசகுபிசகாக தரையில் ஊன்றி விட, வலியால் துடித்தார். களத்துக்குள் பிசியோ வந்தார். பெயின் கில்லர் பயனளிக்கவில்லை. ஸ்ட்ரெச்சர் வந்தது. நிலைமை சீரியஸ். ஆம், நெய்மரின் முன்பாதத்தில் எலும்புமுறிவு (Metatarsal fracture), போதாக்குறைக்குக் கணுக்காலில் தசைப்பிடிப்பு. 

நெய்மர்

களத்திலிருந்து நெய்மர் ஸ்ட்ரெச்சரில் சென்றபோது யாரும் இவ்வளவு சீரியஸ் என்று நினைக்கவில்லை. அடுத்தடுத்து வந்த தகவல்கள்  பயமுறுத்துகின்றன. மான்செஸ்டர் சிட்டிக்காக விளையாடிய பிரேசில் வீரர் கேப்ரியல் ஜீசஸ், கடந்த ஆண்டு ஜூலையில் Metatarsal fracture-ல் பாதிக்கப்பட்டார். காயம் குணமடைய இரண்டு மாதங்களானது மட்டுமல்ல, அதன்பின் அடுத்தடுத்து அவர் காயத்தால் அவதிப்பட்டார். இங்கிலாந்தின் டேவிட் பெக்காம், வெய்ன் ரூனி இருவரும் இந்தக் காயத்தில் சிக்கினர். ஆறு வாரங்கள் அவர்கள் கால்பந்தைத் தொட முடியவில்லை. காயம் குணமடைந்ததும் பெக்காம் (2002), வெய்ன் ரூனி (2006) இருவரும் அவசரஅவசரமாக உலகக்கோப்பைக்குத் திரும்பினர். கிட்டத்தட்ட நெய்மரின் நிலைமையும் அதுவே.

எப்படிப் பார்த்தாலும் உலகக் கோப்பைக்கு இன்னும் முழுமையாக மூன்று மாதங்கள் இருக்கின்றன. நெய்மர் அதற்குள் பரிபூரணமாக குணமடைந்துவிடுவார் என நம்புகின்றனர் பிரேசில் ரசிகர்கள். ஆனால், அவர் விளையாடும் பி.எஸ்.ஜி கிளப் ரசிகர்கள், மார்ச் 6-ம் தேதி பாரிஸில் உள்ள பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் லீக் ரவுண்ட் ஆஃப் 16 செகண்ட் லெக் ஆட்டத்தில், ரியல் மாட்ரிட்டை எதிர்த்து நெய்மர் களமிறங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். இவ்வளவு ஏன்... `எதிரணியில் நெய்மர் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்பது ரியல் மாட்ரிட் பயிற்சியாளர் ஜினாடின் ஜிடான் கருத்து. 

Neymar

சான்டியாகோ பெர்னபுவில் நடந்த முதல் லெக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் 3-1 என வென்று விட்டது. பி.எஸ்.ஜி-யின் சொந்த மண்ணில் நடக்கும் ரிட்டர்ன் லெக் ஆட்டத்தில் நெய்மர் இருந்தால்தான் கதைக்காகும் என்பது பி.எஸ்.ஜி ரசிகர்கள் எதிர்பார்ப்பு. நெய்மர் போன்ற ஒரு நட்சத்திர வீரர் இல்லாமல், நடப்புச் சாம்பியன் ரியல் மாட்ரிட்டை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. பார்சிலோனாவிடமிருந்து ரூ.1,800 கோடி கொடுத்து நெய்மரை வாங்கியிருக்கிறது பி.எஸ்.ஜி. அவ்வளவு விலை கொடுத்தும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் முக்கியமான கட்டத்தில், அணியின் முக்கிய வீரர் ஆடாமல் இருப்பதை பி.எஸ்.ஜி நிர்வாகம் விரும்பவில்லை. 

Neymar

நெய்மர் 100 சதவிகிதம் ஒத்துழைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, முடிந்தளவு களத்தில் ஒத்துழைத்தால் போதும், இரண்டாவது லெக்கில் வென்று, காலிறுதிக்கு முன்னேறிவிடலாம் என்பது பி.எஸ்.ஜி-யின் கணக்கு. ஏனெனில், சாம்பியன்ஸ் லீக் வரலாற்றில்  பி.எஸ்.ஜி இதுவரை ஃபைனலுக்கு முன்னேறியதில்லை. நெய்மர் எத்தனை சீசன்கள் பி.எஸ்.ஜி-யில் இருப்பார் எனத் தெரியாது. எனவே, அவர் இருக்கும்போதே முடிந்தவரை சாம்பியன்ஸ் லீக்கில் முத்திரை பதிக்க வேண்டும் என்பது அந்த கிளப் விருப்பம். Ligue 1 டைட்டில் அடிப்பது அவர்களுக்கு ஒரு விஷயமே அல்ல. இப்போதே 16 புள்ளிகள் வித்தியாசத்தில் பி.எஸ்.ஜி முதலிடத்தில்தான் இருக்கிறது. அதனால் அவர்கள் இலக்கு எல்லாம் சாம்பியன்ஸ் லீக் மீதே! 

இன்னும் காயத்தின் வீரியம் குறித்தோ, குணமாகும் காலம் குறித்தோ மருத்துவத் தரப்பில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வரவில்லை. `எப்படியும் காயம் குணமடைய ஆறு வாரங்கள் வரை ஆகலாம்’ என நெய்மரின் தந்தை தெரிவித்துள்ளார். முன்பாதத்தில் ஏற்பட்ட இந்த எலும்புமுறிவுக்குப் பெரிதாக சர்ஜரி ஏதும் தேவையில்லை என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தாலும், ஆறு வாரங்கள் முழுமையாக அவர் ஓய்வெடுக்க வேண்டியது அவசியம். 

Neymar

நெய்மரின் காயத்தை பி.எஸ்.ஜி மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிரேசிலும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. அவசர அவசரமாக களத்துக்குத் திரும்பி மீண்டும் காயமடைந்துவிட்டால் என்ன செய்ய என்ற அச்சமும் பிரேசில் ரசிகர்களுக்கு இருக்கிறது. காரணம், உலகக் கோப்பை. சாம்பியன்ஸ் லீக்கை விட உலகக் கோப்பை பெரிது. ரஷ்யாவில் ஜூன் மாதம் நடக்கவுள்ள உலகக் கோப்பைக்கு பிரேசில் நெய்மரை பெரிதும் நம்பியிருக்கிறது. பிரேசிலில் 2014-ல் நடந்த உலகக் கோப்பையிலும்  நெய்மர்தான் பிரேசிலின் ஆபத்பாந்தவன். கொலம்பியாவுக்கு எதிரான காலிறுதியில் முதுகுத்தண்டில் அடிபட்டு, நெய்மர் ஸ்ட்ரெச்சரில் சென்றபோது பிரேசில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த கால்பந்து உலகமும் கலங்கியது. நெய்மர் இல்லாத பிரேசில் அணி அரையிறுதியில், ஜெர்மனியிடம் செமத்தியாக வாங்கியது. உலகக் கோப்பை வரலாற்றிலேயே மோசமான தோல்வி அது. இந்தமுறை அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பது பிரேசிலியர்கள் விருப்பம். ஆனால், பி.எஸ்.ஜி-யின் கணக்கு வேறு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்