வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (28/02/2018)

கடைசி தொடர்பு:20:00 (28/02/2018)

ஜனாதிபதியை விஞ்சவிருக்கும் இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் ஊதியம்!

இந்தியக் கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு ஊதியத்தை ரூ.12 கோடியாக உயர்த்த இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

BCCI

 

உலகிலுள்ள கிரிக்கெட் வாரியங்களில் அதிக வருமானம் ஈட்டும் வாரியங்களில் ஒன்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம். இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு இருக்கும் ரசிகர் பட்டாளமே இதற்குக் காரணமாகும். போட்டி ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்ஷர்ஷிப், ஐ.பி.எல் எனப் பல்வேறு வழிகளில் பணம் ஈட்டுகிறது, இந்தியக் கட்டுப்பாட்டு வாரியம்.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய உயர்வு ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் இருந்தது. ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுமென்று வீரர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுசம்பந்தமாக வாரிய நிர்வாகிகள் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் அணி இலங்கையில் நடைபெறும் 3 நாடுகள் டி-20 தொடரில் கலந்துகொள்ள வருகிற மார்ச் 3-ம் தேதி இலங்கை புறப்பட்டுச் செல்கிறது. அதற்கு முன்னதாக வீரர்களின் ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏ, பி, சி என 3 கிரேடுகளாக வீரர்கள் பிரிக்கப்பட உள்ளனர். அதில் ஏ கிரேடில் இடம்பெற்றிருக்கும் வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 கோடிக்கும் மேல் ஊதியம் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பயிற்சியாளர்கள், பெண்கள் கிரிக்கெட் அணி, உள்ளூர் அணி வீரர்கள், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியைச் சேர்ந்தவர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.

நம்நாட்டில் மிக உயர்ந்த பதவியிலிருக்கும் ஜனாதிபதியின் ஊதியமே மாதம் ரூ.5 லட்சம்தான். கிரிக்கெட் வீரர்களின் ஊதியம் அதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கிறது. இது எல்லா இடங்களிலும் உள்ளதுதான். இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அந்த அளவுக்கு வருமானம் வருவதால், அதற்கு ஈடாக வீரர்களுக்கு ஊதியம் வழங்குகிறது.