Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

ஹல்க் ஹோகன், ஸ்டோன் கோல்டு, ஜான் சினா வரிசையில் ரோமன் ரெய்ன்ஸ், சரிப்பட்டு வருவாரா?

Chennai: 

WWE-யில் `எரா' எனப்படும் ஒவ்வொரு யுகத்திற்கும் ஒரு தலைவன் உருவாகிக்கொண்டேயிருப்பான். கோல்டன் எராவுக்கு `இம்மோர்டல்' ஹல்க் ஹோகன், நியூ ஏஜ் எராவுக்கு `தி ஹிட்மேன்' ப்ரெட் ஹார்ட், ஆட்டிட்யூட் எராவுக்கு `டெக்ஸாஸ் ரேட்டில் ஸ்நேக்' ஸ்டோன் கோல்டு, ரூத்லெஸ் அக்ரஷன் மற்றும் பிஜி எராவுக்கு `தி சாம்ப்' ஜான் சினா போன்றோர் WWE-யின் முகமாகவே வளர்ந்து, மல்யுத்த அரங்கிலும் ரசிகர்கள் மனதிலும் திறம்பட கோலோச்சினார்கள். அடைமொழி வைத்தவர்கள் அழிந்ததில்லை மக்களே! இவர்களின் வரிசையில் நிகழ்காலத்து `நியூ' எராவின் தலைவனாக WWE தற்போது முன் நிறுத்துவது, இல்லை இல்லை... தூக்கி நிறுத்துவது  ரோமன் ரெய்ன்ஸை. அவருக்கும் ரோமன் எம்பயர் எனும் அடைமொழி உள்ளது. என்ன, ரசிகர்களை திருப்திப்படுத்த தடுமாறிக்கொண்டிருப்பவரின் அடைமொழி, `வடை'மொழி ஆகிக்கொண்டிருப்பதுதான் இங்கே பெரும் சோகம். உண்மையிலேயே, ரோமன் ரெய்ன்ஸ் அடுத்த தலைவனாகத் தகுதியுள்ளவர்தானா, அவரால் WWE-யின் முகமாக வளர முடியுமா? ஆவோ...அடிமட்டம் வரை சென்று அலசுவோம்.

ரோமன் ரெய்ன்ஸ்


ஷீல்டின் உறுப்பினராக இருந்தபோதே ரோமன் ரெய்ன்ஸை `பவர் ரெஸ்ட்லரா'க உருவகப்படுத்திவிட்டார்கள். `பவர் ரெஸ்ட்லர்' என்பவர் யாரெனில் எதிரிகளை ஜாக்கிசானைப் போல் பறந்து பறந்து அடிக்காமல், ராஜ்கிரணைப் போல் அடித்துப் பறக்கவிடுபவர். முன்னாள் தலைவர்களான ஹல்க் ஹோகனும் பவர் ரெஸ்ட்லர்தான், ஜான் சினாவும் பவர் ரெஸ்ட்லர்தான். ஹல்க் ஹோகன், மாமிசமலை ஆன்ட்ரே தி ஜ்யான்டை மல்லாக்கத் தூக்கிப் போட்டதைப்போலவே ஜான் சினா, பிக்ஷோவை மல்லாக்கத் தூக்கிப்போட்டபோதுதான் `புது தலைவன் வந்துட்டான்டா' என ரசிகர்கள் ஆர்ப்பரித்தார்கள். ஆனால், ஏன் ரோமன் ரெய்ன்ஸால் அவர்களது இடத்தை நிரப்பத் தடுமாறுகிறார்? காரணம், மூவ்களிலுள்ள வறட்சி. சாமோன் டிராப், பவர் பாம், ஸ்பியர், சூப்பர்மேன் பன்ச் என மொத்தமே 10 மூவ்களைத்தான் மூச்சு முட்ட போட்டுக்கொண்டிருப்பார். பவர் ரெஸ்ட்லர்களுக்கு மூவ் குறைவாகத்தான் இருக்கும். ஆனால், இவ்வளவு குறைவாக இருக்கக் கூடாது சாரே. ஸ்பியர் எல்லாம் எட்ஜ், கோல்டுபெர்க் காலத்திலேயே வழக்கொழிந்துவிட்டது. ரைனோ, பட்டிஸ்டா, பாபி லாஸ்லேவில் ஆரம்பித்து பிக் ஷோ வரை பலபேர் `ஸ்பியரை' சிக்னேச்சர் மூவாகப் பயன்படுத்தி கசக்கி எறிந்துவிட்டார்கள். `ஆட்டிட்யூட் அட்ஜஸ்ட்மென்ட்' எனும் சிக்னேச்சர் மூவ் அலுப்புத் தட்ட ஆரம்பிக்கையில் அதற்கு மாற்றாக `எஸ்.டி.எஃப்' எனும் சப்மிஷன் மூவைக் கண்டுபிடித்துக்கொண்டார் ஜான் சினா. அந்தத் தெளிவு விரைவிலேயே ரோமனிடம் பிறக்க வேண்டும்.

 

ரோமன் ரெய்ன்ஸ்


ஒரு WWE ரெஸ்ட்லர் மல்யுத்தத்தில் மட்டுமல்ல, மைக்கிலும் எதிரிகளைப் பந்தாட வேண்டும். எதிரிகளைக் கலாய்த்துக் கதறவிட்டால்தான் கைதட்டல் பறக்கும். வீரர்கள் கையில் மைக்கோடு வந்தால் நம் ஊரில்தான் சேனலை மாற்றிவிடுகிறோம். உண்மையில், ஒரு நல்ல ரெஸ்ட்லருக்கான தகுதியாகப் பேச்சுத்திறமையும் ரெஸ்ட்லிங் வல்லுநர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. `இங்கே பேச்சுக்கே இடமில்லை. வெறும் வீச்சுதான்' என வசனம் பேசினால் வந்த வழியிலேயே கிளம்பச் சொல்லி பஸ் காசு கொடுத்துவிடுவார்கள். பட்டிஸ்டா, ரேன்டி ஆர்டன் போன்றோர் கோட்டைவிட்டது மைக்கில்தான். ரோமன் ரெய்ன்ஸ் பேசக் கற்றுக்கொள்ளவில்லை என்றால், அடுத்த பட்டிஸ்டாவாக மாறுவது நிச்சயம். சமீபத்தில் ப்ராக் லெஸ்னரை எதிர்த்து நல்ல ப்ரோமோ ஒன்றை ரோமன் கொடுத்திருக்கிறார், நம்புவோம்! இரண்டாவது, முன்னணி வீரனாக இருப்பவர் பேசிப்பேசியே புதுப்புது பன்ச் வசனங்களை உருவாக்க வேண்டும். அப்போதுதான் அந்த வசனங்கள் பொறிக்கப்பட்ட பொருள்கள் ஏகபோகமாய் விற்பனையாகும், WWE நிறுவனமும் லாபம் சம்பாதிக்கும். இதற்குமுன் WWE-யின் முகமாக இருந்தவர்கள் அனைவருமே இதனை செம்மையாய் செய்துகாட்டியவர்கள். `வாட்', `தட்ஸ் தி பாட்டம் லைன். பிகாஸ், ஸ்டோன் கோல்டு ஸெட் ஸோ...', `ஆஸ்டின் 3:16' என ஸ்டோன் கோல்டு எக்கசக்க வசனங்களை உதிர்த்து, மிகவும் லாபகரமான வீரராக வலம் வந்தார். `பிரதர்' என்ற வார்த்தையைக் கேட்டாலே நமக்கு ஹல்க்ஹோகன் ஞாபகம்தான் வருகிறது. `வேர்டு லைஃப்', `நெவர் கிவ் அப்', `ஹஸ்ட்ல், லாயல்டி, ரெஸ்பெக்ட்', `ரைஸ் அபோவ் ஹேட்' என ஜான் சினாவின் வசனங்கள் கொண்ட பொருள்களும் ஒருகாலத்தில் பரபரப்பாக விற்றுத்தீர்ந்தன. இன்றும் விற்றுக்கொண்டிருக்கின்றன. ஜான் சினாதான் இப்போதும் மெர்சன்டைஸ் மன்னன்!

 

ரோமன் ரெய்ன்ஸ்

ஹல்க் ஹோகன் WWE-யின் முகமாக இருந்த காலத்திலும் அல்டிமேட் வாரியர், மாச்சோ மேன், ஆன்ட்ரே தி ஜ்யான்ட் எனப் பலருக்கும் பெரும் ரசிகக்கூட்டமே இருந்தது. ஆட்டிட்யூட் எராவின் முகம் ஸ்டோன் கோல்டுதான் என்றாலும், தி ராக், ட்ரிபிள் ஹெச், கர்ட் ஆங்கிள், ஹார்டி பாய்ஸ், க்றிஸ் ஜெரிக்கோ, எட்ஜ் என மற்ற வீரர்களும் புகழின் உச்சத்தில் இருந்தார்கள். அதேபோல், ரூத்லெஸ் அக்ரஷன் மற்றும் பிஜி எராவின் முகம் ஜான் சினாதான் என்றாலும் பட்டிஸ்டா, ப்ராக் லெஸ்னர், ரான்டி ஆர்டன், ரே மிஸ்டிரியோ என மற்றவர்களும் பிரபலமான வீரர்களாக வலம் வந்தனர். ஆனால், மற்றவர்களிடமிருந்து ஜான் சினா, ஹல்க் ஹோகன் மற்றும் ஸ்டோன் கோல்டை தனித்துக் காட்டியது அவர்களது கிம்மிக். ஜான் சினா மிகவும் கூலான ராப் பாடகர் என்றால், ஸ்டோன் கோல்டு முதலாளியையே போட்டுப் பிளக்கும் ஆன்டி ஹீரோ. இப்படி கிம்மிக்கிலிருந்த திடம்தான் மற்றவர்களிடமிருந்து அவர்களைத் தனித்துக் காட்டியது. ஆனால், ரோமன் ரெய்ன்ஸின் கிம்மிக்கோ மிகவும் பலவீனமானது. ஷீல்டின் உறுப்பினராக ஓகே. தனி ஆளாக, ரோமன் ரெய்ன்ஸாக அவரது கிம்மிக் முழுமையடையாத ஒன்று. நான் யாரு, நேனு எவரு, ஹூ அம் ஐ என்ற கேள்விகளுக்கு சீக்கிரமே ரோமன் ரெய்ன்ஸ் பதில் கண்டுபிடிக்க வேண்டும். மெக்மேஹான் அதற்கேற்றார்போல் ஸ்டோரிலைன் உருவாக்க வேண்டும். இல்லையேல், ஷெத் ராலின்ஸ், டீன் அம்ப்ரோஸ், ஃபின் பாலேர் எனப் பின்னாலேயே தகுதியானவர்கள் பலர் வெயிட்டிங். கொஞ்சம் அசந்தாலும் ஆப்படித்துவிடுவார்கள் பார்த்துக்கிடுங்க.

ரோமன் ரெய்ன்ஸ்

சில வீரர்கள் WWE-யின் முகமாகியிருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால், அதாவது ஸ்டேஜுக்குப் பின்னால் தெளிவான திட்டமிடுதல் இருந்தது. சரியான நேரத்தில் வீரர்களின் திறமையைக் கண்டறிந்து சரியான நேரத்தில் சரியான ஸ்க்ரிப்டோடு இவர்கள் `புஷ்' செய்யப்பட்டனர். ஆனால், ரோமன் ரெய்ன்ஸை புல்லட் ரயில் வேகத்தில் `புஷ்' செய்துகொண்டிருக்கிறார் மெக்மேஹான். என்ன பிரச்னை எனத் தெரியவில்லை. ரசிகர்கள் ரோமன் ரெய்ன்ஸைப் பார்த்தாலே `ஸொப்பா...' என்கிறார்கள். குழந்தைகள் மட்டுமே `ரோமன்... ரோமன்...' என அலறுகிறார்கள். குழந்தைங்களுக்கு பிடிச்ச பீஸுய்யா! எனவே, மெக்மேஹான் கொஞ்சம் ஆர அமர யோசித்து, பொறுமையாகக் காய் நகர்த்தலாம். அதைச் செய்யாமல், ஆறே ஆண்டிற்குள் ட்ரிபிள் க்ரவுன் சாம்பியன், ராயல் ரம்பிளில் அதிகப்பேரை எலிமினேட் செய்த வீரன், சர்வைவர் சீரிஸில் அதிகப்பேரை எலிமினேட் செய்த வீரன், ரெஸ்டில்மேனியாவில் அண்டர்டேக்கரை தோற்கடித்த வீரன் எனப் பல சாதனைகளை முறியடிக்க வைத்துக்கொண்டிருக்கிறார். இதனாலேயே, `அட போங்கய்யா...' என ரசிகர்கள் அலுப்பு மருந்து வாங்க எழுந்துவிடுகிறார்கள்.

இதையெல்லாம், வின்ஸ் மெக்மேஹனும் ரோமன் ரெய்ன்ஸும் இணைந்து சரிசெய்தால் ரோமன் ரெய்ன்ஸ், WWE-ன் அடுத்த முகமாக மாற வாய்ப்புள்ளது. இல்லையேல் வெஞ்சன கிண்ணம்கூட கிடைக்காது. இவ்வளவு நாளாக `புஷ்' செய்ததெல்லாம் புஷ்ஷாகிவிடும்! பிலீவ் இட்..!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்
Advertisement
Advertisement

MUST READ

Advertisement