வெளியிடப்பட்ட நேரம்: 15:15 (02/03/2018)

கடைசி தொடர்பு:15:15 (02/03/2018)

`தலைசிறந்த வீரராக தோனியை கிரிக்கெட் வரலாறு பதிவுசெய்துகொள்ளும்!’ - ரவி சாஸ்திரி புகழாரம்

'கிரிக்கெட் உலகம் கண்ட தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரராக, வரலாற்றில் என்றென்றும் நிலைத்திருப்பார் தோனி' என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி புகழாரம் சூட்டியுள்ளார். 

தோனி - ரவி சாஸ்திரி

Photo Credit: Twitter/RaviShastriOfc


 சமீபத்தில் முடிவடைந்த தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி மொத்தம் 69 ரன்கள் எடுத்தார். இதனால், தோனியின் பேட்டிங் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஒருநாள் தொடருக்கு அடுத்தபடியாக நடந்த 3 போட்டிகள்கொண்ட டி20 தொடரில், 80 ரன்கள் எடுத்து தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 

தோனி குறித்துப் பேசிய இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, `` தோனியின் அனுபவம் மற்றும் அவரின் ஃபிட்னஸ் காரணமாக, உலகம் கண்ட தலைசிறந்த ஒருநாள் போட்டி வீரராக கிரிக்கெட் வரலாற்றில் அவர் என்றென்றும் நிலைத்திருப்பார். நான் ஏற்கெனவே கூறியதுபோல, அனுபவத்துக்கு எந்த மாற்றும் இல்லை. அதைக் கடைகளில் வாங்கவும் விற்கவும் முடியாது. கிரிக்கெட் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், இறுதி ஓவர்களில் பேட் செய்வது அல்லது ஃபினிஷிங் செய்வதுபோன்ற சூழல்களில், தோனியைவிட சிறப்பாகச் செயல்பட்டது மிகச் சிலரே என்பது தெரியும். 5, 6 அல்லது 7 என எந்த இடத்தில் களமிறக்கினாலும் போட்டியின் போக்கையே மாற்றக்கூடிய வீரர் அவர்’' என்றார். ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், ரவி சாஸ்திரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.