வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (04/03/2018)

கடைசி தொடர்பு:14:15 (04/03/2018)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமனம்!

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியின் கேப்டனாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார். 

Photo Credit: BCCI

உலகின் முன்னணி கிரிக்கெட் லீக் போட்டிகளுள் ஒன்றான இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வரும் ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கி, மே மாதம் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன. முதல் போட்டியும், இறுதிப் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில்  நடைபெறுகின்றன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2 ஆண்டுகள் தடைக்குப் பின்னர் ஐ.பி.எல்லுக்குத் திரும்பியுள்ள தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்  அணியும் மோதுகின்றன. 

இந்தத் தொடரில் பங்கேற்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் கேப்டனாக தினேஷ் கார்த்திக் செயல்படுவார் என்று அந்த அணி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ராபின் உத்தப்பா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல். தொடரின் வெற்றிகரமான கேப்டன்களுள் ஒருவரான கௌதம் காம்பீரை, ஏலத்துக்கு அனுப்ப கொல்கத்தா அணி நிர்வாகம் முடிவு செய்தது. அவர் தற்போது டெல்லி டேர்டெவில்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த ஏலத்தின் தினேஷ் கார்த்திக்கை ரூ.7.4 கோடி என்ற பெரிய தொகைக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்தது. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 8-ம் தேதி நடைபெறும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கெதிரான போட்டியுடன் ஐ.பி.எல். தொடரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி தொடங்குகிறது.