வெளியிடப்பட்ட நேரம்: 22:36 (06/03/2018)

கடைசி தொடர்பு:10:03 (07/03/2018)

`முதல் டி20-யில் இந்தியா பரிதாபம்' - 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி!

முத்தரப்பு தொடரின் முதல் டி20-யில், இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றிபெற்றுள்ளது. 

இலங்கை

இந்தியா, இலங்கை, வங்கதேசம் அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர், இலங்கையில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்தது. தோனி, கோலியின் ஓய்வால், புதிய அணிபோல இந்தியா களமிறங்கியது. ரிஷப், வாஷிங்டன் சுந்தர், விஜய் ஷங்கர், ஷர்துல் தாகூர் ஆகிய இளம் வீரர்கள் அணியில் இடம்பிடித்தனர். இதையடுத்துக் களமிறங்கிய இந்தியாவுக்கு, தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. வழக்கம்போல, ரோஹித் சர்மா முதல் ஓவேரிலேயே அவுட் ஆக, பின்னால் வந்த சுரேஷ் ரெய்னாவும் இரண்டாவது ஓவரில் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். 

பின்னர் இணைந்த தவான், மனிஷ் பாண்டே இணை அணியைச் சரிவிலிருந்து மீட்டது. இருப்பினும், பாண்டே 37 ரன்களில் வெளியேற, உச்சகட்ட பார்மில் இருக்கும் தவான், 90 ரன்களில் அவுட் ஆகி சதம்அடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். டி20-யில் இலங்கைக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். முன்னதாக, கோலி 82 ரன்கள் அடித்ததே இதுவரை சாதனையாக இருந்தது.  அதன்பின், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. 

 அதன்பின் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்தில் வேகம் காட்டியது. குறிப்பாக ஷர்துல் தாகூரின் முதல் ஓவரில் 27 ரன்கள் அடித்தனர். இந்தியப் பந்துவீச்சை துவம்சம் செய்த குஷல் பெரேரா 66 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் சோபிக்கத் தவறவே, ஆட்டம் பரபரப்பாகச் சென்றது. ஆனால், திஷாரா பெரேரா - தாசுன் ஷானகா ஜோடி, கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடினர். இதனால், 18.3 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க