வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (07/03/2018)

கடைசி தொடர்பு:09:10 (07/03/2018)

ஒரு காதல் கடிதம் வென்று கொடுத்த ஆஸ்கர் விருது..! #Oscar90

``உன்னிடம் இப்போது இதைச் சொல்ல விரும்புகிறேன். இனி மிச்சம் இருக்கும் ஒவ்வொரு தருணத்தையும் ரசிப்போம். நல்லது கெட்டது இரண்டையும், என்னிடம் இருந்த அனைத்தையும் உனக்காகக் கொடுத்துவிட்டேன். நீயும் எனக்காக!'' - ஆம், தன் காதலியைப் பிரியும்போது அவன் கூறிய வார்த்தைகள்தான் இவை.

31 ஆண்டுகால காதல் பயணம் அது. எல்லா பிரிவுகளையும்போல் கண்ணீரோடுதான் முடிந்தது. பிரிவுக்குப் பிறகு காதலியைத் தன் கரங்களால் பிடிக்க முடியவில்லை என்ற ஏக்கம் பேனாவை கைகளில் திணித்தது. நினைவுகளை வார்த்தைகளாக்கி அவளுக்காக ஒரு காதல் கடிதம் தீட்டினான்... `டியர் பேஸ்கட்பால்' என்று தலைப்பு வைத்தான். அவன் காதலிக்குச் சமர்ப்பித்தான். ஆம், அவள் - பேஸ்கட்பால்!

கோபே ப்ரயன்ட் - ஆஸ்கர்

அந்த விளையாட்டின் மீது இவனுக்கு அப்படியென்ன காதல்? அது அவன் ரத்தத்தில் ஊறியிருந்தது. அந்தத் தீராத நேசத்தை தன் தந்தையின் விழிகளில் பார்த்தவன் அவன். அவனின் தந்தை அமெரிக்காவின் NBA தொடரிலிருந்து ஓய்வுபெற்றவர். ஆனால், அந்த விளையாட்டை விட முடியவில்லை. பிரபலமில்லாத தொடர்களில்தான் அதன் பிறகு விளையாட முடியும். அவர் தயங்கவில்லை. மொழி தெரியாத இத்தாலி நாட்டுக்குச் சென்றார். அங்குதான் அந்த விளையாட்டின் மீது இவன் காதல்கொண்டான்.

வீட்டில் கிடந்த துணிகளை ஒன்றாகச் சுருட்டிப் பந்தாக்கினான். குப்பைத்தொட்டி நெட் ஆனது. குறிபார்த்து வீசத் தொடங்கினான். சரியாகக் குப்பைத்தொட்டியில் அந்தப் பந்து விழுந்தபோதெல்லாம் கத்தி ஆர்ப்பரித்தான். மெத்தையில் விழுந்துகொண்டாடினான். அந்தக் களிப்பில்தான் அந்த விளையாட்டின் மீது தான்கொண்டிருந்த காதலை உணர்ந்தான். தன்னை உணர்ந்தான். விடுமுறை நாள்களில் அமெரிக்கா சென்று ஜூனியர் போட்டிகளில் பங்கேற்றான். கூடைப்பந்தின் மீது அவன் கொண்டிருந்த காதல், அவனுக்கு வெற்றிகளைப் பரிசளித்தது. NBA தொடரில் லாஸ் ஏஞ்சலஸ் லேக்கர்ஸ் அணிக்காகப் பங்கேற்றான். சாதித்தான். கோபே ப்ரயன்ட் எனும் ஜாம்பவான் இப்படித்தான் பிறந்தான்!

 

33,643 புள்ளிகளுடன் NBA வரலாற்றில் அதிக புள்ளிகள் எடுத்தவர்கள் பட்டியலில் 3-ம் இடத்தில் இருக்கிறார் கோபே ப்ரயன்ட். ஐந்து முறை NBA சாம்பியன், NBA ஆல்ஸ்டார் அணியில் 18 முறை இடம்பெற்றவர், 2008-ம் ஆண்டில் `மோஸ்ட் வேல்யூபில் ப்ளேயர்' (MVP) என சாதனைகள் வரிசைகட்டி நின்றன. லேக்கர்ஸ் அணி ரசிகர்களின் ஃபேவரிட் ப்ளேயர் ஆனார். அந்த அணியின் மீதான நேசமும் வளர்ந்தது. 20 ஆண்டுகாலப் பயணம் 2016-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. அவரோடு சேர்ந்து, அவர் அணிந்து விளையாடிய 8 மற்றும் 24 என்ற ஒரு ஜெர்சி எண்களும் ஓய்வுபெற்றன. எல்லா ஜாம்பவான்களையும்போல் எல்லா விளையாட்டு வீரர்களையும்போல் கண்ணீரோடுதான் இவரது கடைசிப் போட்டியும் அமைந்தது. காதலர்களின் பிரிவுகளுக்கு கண்ணீர் மட்டும்தானே சாட்சி. அவர் இளமைக் காலத்திலேயே பாப் இசையில் அனுபவம் பெற்றவர். பல இடங்களில் நிகழ்ச்சிகள் அரங்கேற்றியுள்ளார். அதனால், அந்தக் காதல் கவிதை எழுதுவது அவருக்குக் கஷ்டமாக இல்லை. 

``ஒன்று மட்டும் உண்மை என்பதை உணர்ந்திருந்தேன். உன் மீது காதல் வயப்பட்டேன். என்னை உனக்கு முழுதாக அர்ப்பணித்துக்கொண்டேன். என் உடலிலிருந்து, சிந்தனையிலிருந்து, ஆவியிலிருந்து, ஆன்மாவிலிருந்து...'' என்று 6 வயதில் தனக்கு அந்த விளையாட்டின் மீதிருந்த அளவில்லா அன்பை தன் வார்த்தைகளில் வெளிப்படுத்தினார் ப்ரயன்ட். 5 நிமிட குறும்பட வசனத்தில் உணர்ச்சிகள் நிரம்பியிருந்தன. எல்லா விளையாட்டு வீரர்களுக்கும் இருக்கும் உணர்வுதான் அது. ஆனால், அந்த உணர்வினுள் உயிர் முழுமையாகக் கலந்திருந்தது. அந்த உயிர்தான்... அந்தக் காதல்தான் ப்ரயன் கைகளில் இன்று ஆஸ்கர் எனும் மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்துச் சென்றிருக்கிறது.

ப்ரயன்ட் ஆஸ்கர்

ஆம், கோபே ப்ரயன்ட் இன்று ஆஸ்கர் வின்னர். சிறந்த அனிமேஷன் குறும்படத்துக்கான விருதை அவர் எழுதிய `டியர் பேஸ்கட்பால்'தான் வென்றிருக்கிறது. வெறும் 5 நிமிடம்தான். எளிமையான வசனங்கள்தான். ஆனால், கோபேவின் குரலும் காதலும் அதற்கு உயிர் கொடுத்தன. க்ளென் கீன், தன் அனிமேஷன் மூலம் அதற்கு உருவம் கொடுத்தார். பேஸ்கெட்பால் உலகமே கொண்டாடியது. நேற்று ஹாலிவுட்டும் கொண்டாடிவிட்டது. அனிமேஷன் என்ற அறிவியல்தான் நாமினேஷன் பட்டியலில் இந்தப் படம் இடம்பெறக் காரணம். ஆனால், அந்த விருதைப் பெற்றுத்தந்தது ப்ரயன்ட் கொண்டிருந்த காதல்... விளையாட்டின் மீதான காதல்!


டிரெண்டிங் @ விகடன்