வெளியிடப்பட்ட நேரம்: 16:19 (08/03/2018)

கடைசி தொடர்பு:16:19 (08/03/2018)

ஐ.பி.எல் தொடருக்காக டெஸ்ட் போட்டிகள் புறக்கணிக்கப்படுகின்றனவா? #IPL

`நேர்த்தியான கிரிக்கெட் போட்டிகளை ரசிக்க வேண்டுமெனில், டெஸ்ட் கிரிக்கெட்டைப் பாருங்கள்' என்றுதான் பலரும் சொல்வர். `அத்தகைய கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் என்னவாகும்?' என்ற கேள்வியும் வெகுநாள்களாகவே விவாதிக்கப்பட்டுவருகிறது. இப்போது அந்தச் சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. ஐந்து நாள்கள் போட்டி என்பது, ரசிகர்களுக்கு ஒருவித சலிப்பை ஏற்படுத்துகிறது. டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலானோர் தங்கள் பணிகளில் இருக்கும் நேரத்தில் நடைபெறுவதால் அவற்றை காண்பதற்கான நேரம் கிடைக்கவில்லை எனப் பலரும் காரணம் சொன்னாலும், ஐந்து நாள்கள் முடிவுக்காகக் காத்திருக்கும் பொறுமையை நாம் இழந்துவிட்டோம் என்றே சொல்ல வேண்டும். இவற்றோடு கூடவே, டெஸ்ட் போட்டிகளின் முடிவுகள் முன்னரே கணிக்கும் வகையில் இருக்கின்றன. பெரும்பாலும் போட்டிகளை நடத்தும் நாடே வெற்றிபெறுவதும், அதற்கு ஏற்ப பிட்ச்களை அமைத்துக்கொள்வதும் போட்டியின் சுவாரஸ்யத்தை வெகுவாகக் குறைத்துவிடுகிறது. 

டெஸ்ட் கிரிக்கெட்

நிமிடத்துக்கு நிமிடம்  அதிகரிக்கும்  பரபரப்பு,  எந்த நேரத்திலும் ஒரு சிக்ஸர், ஒரு நோ பால், ஒரு மிஸ்ஃபீல்டு  ஆட்டத்தின் போக்கை மாற்றுவது ரசிகர்களை வெகுவாகக் கவர்கிறது. கேள்விப்படாத ஒரு நபர் அற்புதமாக விளையாடி ஹீரோ ஆவது, அதிகபட்சம் நான்கு மணி நேரம், அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்ற பரபரப்பு போன்றவை கிட்டத்தட்ட ஒரு திரைப்படம் பார்ப்பதுபோன்றே இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களால் புறக்கணிக்கப்பட்டதுபோல், தற்போது கிரிக்கெட் வீரர்களாலும் புறக்கணிக்கப்படுகிறது.  

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ரஷித் மற்றும் பேட்ஸ்மேன் ஹேல்ஸ் ஆகியோர் இனி வெள்ளைப் பந்து போட்டிகளில் (லிமிட்டெட் ஓவர் போட்டிகள்) மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகவும், நீண்டவகை போட்டிகளில் விளையாடப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளனர். வீரர்கள் இதுபோன்று சொல்வது புதியதல்ல. `ஏதேனும் ஒரு வகையான போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி பயிற்சிகள் எடுத்தால், சிறப்பாகச் செயல்பட முடியும்' என்கிறார்கள் அவர்கள். அப்படியே இருந்தாலும் அதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டைத் தேர்ந்தெடுக்காமல் ஏன் இருபது ஓவர் போட்டிகள்? ரசிகர்களுக்குப் பிடித்தது என்று சொல்வதைவிட, பணம் அதிகம் கொழிக்கும், அதிக அளவு கடினம் இல்லாத இருபது ஓவர்களை விட்டுவிட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்களா என்ன? இப்படியே எல்லா வீரர்களும், டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு முழுக்குபோட்டால் தரமான, சிறப்பான, நேர்த்தியான டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலத்தில் எப்படி இருக்கும்? 

அடில் ரஷித்

``ரசிகர்களின் பொழுதுபோக்குக்காகத்தான் கிரிக்கெட் விளையாடுகிறோம். அதற்குத் தகுந்தவை இருபது ஓவர் போட்டிகள்தான்” என்று அதிரடி மன்னன் கிறிஸ் கெயில், இந்திய கேப்டன் விராட் கோலி போன்றோர் பலமுறை சொல்லியுள்ளனர். இவர்கள் ரசிகர்களுக்காக விளையாடுவது ஒருபுறம் எனினும், பணத்துக்காக விளையாடுகின்றனர் என்றும் சொல்லலாம். ஐ.பி.எல் போட்டிகளுக்காக இவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தொகை, நாட்டின் தேசிய அணிக்கு வருடம் முழுவதும் விளையாடுவதால் கிடைக்கும் சம்பளத்தைவிட பல மடங்கு அதிகம். தென்னாப்பிரிக்க அதிரடி வீரர் டி வில்லியர்ஸ், தனக்கு ஓய்வு தேவை என்று ஓர் ஆண்டு முழுக்க டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை விட்டுவிட்டார். ஆனால், அந்த ஆண்டு நீண்ட தொடரான ஐ.பி.எல் போட்டிகளிலிருந்து அவர் ஓய்வுபெறவில்லை. ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடுவதற்காக டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார் இலங்கையின் வேகப்புயல் மலிங்கா. ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடத் தயாராவதற்காக `காயம்' எனச் சொல்லி வீரர்கள்  ஓய்வுபெறுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தங்கள் நாட்டு வீரர்களைக் குறை சொன்னது. 

ஐ.பி.எல் போன்ற  போட்டிகளால் வீரர்கள் அதிக அளவில் பணம் சம்பாதிப்பது மட்டுமன்றி, இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியமும், பெரு முதலாளிகளும், அதை ஒளிபரப்பும் தொலைக்காட்சி சேனல்களும் கொள்ளை லாபம் பார்க்கின்றன. ஐ.பி.எல் போட்டிகளுக்காக சர்வதேச கால அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் மாற்றியமைத்தது. ஐ.பி.எல் போட்டிகளுக்கு முன் இந்திய அணி விளையாடும் தொடர்களைப் பாருங்கள். ஜிம்பாப்வே, மேற்கு இந்திய தீவுகள்,  வங்கதேசம் என ஏதாவது ஒரு சிறிய அணியுடன் விளையாடுகிறார்கள். அந்தத் தொடர்களில் முக்கிய வீரர்களுக்கு பெரிய போட்டிகளுக்குத் தயாராக என்று சொல்லி ஓய்வு வழங்கப்படுகிறது. பெரும்பாலும் இளம்வீரர்களைக்கொண்ட இந்திய அணி, இந்தப் போட்டிகளில் பங்கேற்கிறது. பெரிய போட்டிகளுக்குத் தயாராக, முக்கிய வீரர்கள் ஐ.பி.எல் போட்டிகளின்போது ஓய்வெடுப்பார்களா, என்ன? 

அலெக்ஸ் ஹேல்ஸ் - டெஸ்ட் கிரிக்கெட்

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கிய காலத்தில், ``இந்தப் போட்டிகளுக்குக் கிடைக்கும் வரவேற்பையும் வீரர்களின் சம்பளத்தையும் தெரிந்துகொண்ட பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டின் எதிர்காலத்தை நினைத்துப்பார்க்கவே பயமாக இருக்கிறது” என்றார் கவாஸ்கர். ஒருவேளை தோனி, கோலி, பாண்டியா ஆகியோர் ஐ.பி.எல் போட்டிகளுக்குத் தயாராகத்தான்,  இலங்கையில் நடக்கும்  தொடரிலிருந்து ஓய்வுபெறப்பட்டதோ என்னவோ?

என்னதான் இருபது ஓவர் போட்டிகள் அதிக பணத்தைப் பெற்றுத் தந்தாலும், உண்மையான கிரிக்கெட் வீரர் என்கிற பெருமை டெஸ்ட் போட்டிகளில் சாதிக்கும் வீரர்களுக்கே கிடைக்கும். ஐந்து நாள்கள் களத்தில் நின்று போராட உடல்தகுதி மிகவும் அவசியம். அதேபோல் டெஸ்ட் போட்டிகளில் பந்துவீச்சு நுட்பங்கள், ஃபீல்டிங் அமைப்பு போன்றவை வேறு வகையானவை. அங்கு ரன்களைவிட விக்கெட்களே முக்கியம். ஒரு ஓவரில் சிறப்பாகப் பந்துவீசி, இரண்டு விக்கெட்டுகளை எடுத்தால் அல்லது மூன்று அல்லது நான்கு சிக்ஸர்களை அடித்தால் குறுகிய ஓவர் போட்டிகளில் வெற்றிக்கு வித்திட்டுவிடலாம். ஆனால், டெஸ்ட் போட்டிகளில், குறிப்பிட்ட ஒரு நேரம் மட்டுமன்றி ஒட்டுமொத்த ஐந்து நாள்களும் ஆதிக்கம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு செஷனையும் வெல்வது போட்டியில் வெற்றிபெற முக்கியமானது. 

கோலி - டெஸ்ட் கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஆண்டுகளில்தான் அஸ்வின் மற்றும் விராட் கோலி ஆகியோர் ஐ.சி.சி சிறந்த வீரர் விருது பெற்றனர். விராட் கோலி ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் நீண்ட நாள்களாக சிறப்பாக விளையாடியபோதும், டெஸ்ட் போட்டிகளில் நன்கு விளையாடிய பிறகே சிறந்த வீரராக ஒப்புக்கொள்ளப்பட்டார். மற்ற வகை போட்டிகளில் எங்கு இருக்கிறார் என்றே தெரியாத ஸ்டீவ் ஸ்மித், டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடுவதாலே, ஆகச்சிறந்த வீரராகப் போற்றப்படுகிறார். ஆக, கிரிக்கெட்டின் ஆகச்சிறந்த ஃபார்மெட்டாக மதிக்கப்படும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வீரர்கள் முழுக்குப்போடுவது ஆரோக்கியமான போக்கல்ல!


டிரெண்டிங் @ விகடன்