வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (08/03/2018)

கடைசி தொடர்பு:08:51 (08/03/2018)

'புவனேஷ்வர், பும்ராவுக்கு அடித்தது ஜாக்பாட்' - தோனிக்கு அதிர்ச்சியளித்த பிசிசிஐ

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான சம்பள உயர்வுகுறித்த அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக, ஜஸ்பிரித் பும்ரா போன்ற இளம்வீரர்களைவிட முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, குறைவான ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

புவனேஷ்வர், பும்ரா

கிரிக்கெட் வீரர்களின் ஆண்டு ஊதியத்தை உயர்த்த வேண்டும் என கேப்டன் கோலி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் பிசிசிஐ-க்கு கோரிக்கை வைத்தனர். இந்தk கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிசிசிஐ, வீரர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சி.ஓ.ஏ குழுவுடன் ஆலோசித்தது. அதன் முடிவில், தற்போது 2017 செப்டம்பர் முதல் 2018 செப்டம்பர் வரையிலான ஊதிய ஒப்பந்த அறிவிப்பை சி.ஓ.ஏ குழு நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்திய வீரர்களை A+, A, B மற்றும் C ஆகிய பிரிவுகளில் பிரித்துள்ளது. இதுவரை A, B மற்றும் C பிரிவுகள் மட்டும் இருந்த நிலையில் தற்போது A+ புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில், கேப்டன் விராட் கோலி, ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு, இனிமேல் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. 

இதேபோல, A பிரிவில் மகேந்திர சிங் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, புஜாரா, ரகானே, விருத்திமான் சாஹா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு ஆண்டுக்கு 5 கோடி ரூபாய் ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும், ஹர்திக் பாண்ட்யா, உமேஸ் யாதவ், யுவேந்திர சலால், கே.எல். ராகுல், இஷாந்த் சர்மா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் B பிரிவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு 3 கோடி ரூபாய் ஆண்டு வருமானம் கிடைக்கும். அதேபோல, அக்ஸர் பட்டேல், சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ், மனீஸ் பாண்டே, கருண் நாயர், பார்த்தீவ் பட்டேல், ஜெயந்த் யாதவ் போன்ற வீரர்கள் C பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆண்டு வருமானமாக ஒரு கோடி ரூபாய்  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், முகமது ஷமி மீது மனைவி வழக்குத் தொடர்ந்துள்ளதால், அவருடைய சம்பள விவரத்தை பிசிசிஐ நிறுத்திவைத்துள்ளது.  

பும்ரா, புவனேஷ்வர் குமாரை விட, இந்தியாவுக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனிக்கு குறைவான ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  ஏற்கெனவே, தோனி ஓய்வுபெற வேண்டும் என முன்னாள் வீரர்கள் தெரிவித்துவரும் நிலையில், தற்போது பிசிசிஐ குறைவான ஊதியம் நிர்ணயித்துள்ளது  தோனி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதற்கு விளக்கம் அளித்துள்ள பிசிசிஐ, "மூன்று பிரிவு போட்டிகளிலும் அதிகப் போட்டிகளில் விளையாடும் வீரர்கள் மட்டுமே A+ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர். தோனி டெஸ்ட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், அவர் A+ பிரிவில் இடம்பெறவில்லை" என்று கூறியுள்ளது. இதேபோல, இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கும் ஊதிய ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. இதிலும் A, B மற்றும் C ஆகிய பிரிவுகளின் கீழ் வீராங்கனைகள் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 50 லட்சம், 30 லட்சம் மற்றும் 10 லட்சம் வீதத்தில் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க