`விராட் கோலியைத் தேர்வு செய்ததற்காக எனது பதவி பறிக்கப்பட்டது!’ - தேர்வுக் குழு முன்னாள் தலைவரின் பகீர் குற்றச்சாட்டு

விராட் கோலியைக் கடந்த 2008-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை அணிக்கெதிரான தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்ததற்காகத் தனது பதவி பறிக்கப்பட்டதாக இந்திய அணி தேர்வுக் குழுவின் முன்னாள் தலைவர் திலிப் வெங்சர்க்கார் குற்றம்சாட்டியுள்ளார். 


மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெங்சர்க்கார், ``விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கடந்த 2008-ம் ஆண்டு ஜூனியர் உலகக் கோப்பையை வென்று அசத்தியது. அந்தத் தொடரில் விராட் கோலியின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்தது. அதனால், ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடந்த 4 நாடுகள் தொடரில் பங்கேற்ற 23 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் விராட் கோலியைத் தேர்வு செய்தேன். அந்தத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 123 ரன்கள் குவித்து அசத்தினார். 

இதனால், இலங்கை அணிக்கெதிரான தொடரில் விளையாட அவரைத் தேர்வு செய்தேன். ஆனால், எனது முடிவு குறித்து அப்போதைய பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும், கேப்டன் தோனியும் அதிருப்தி தெரிவித்தனர். விராட் கோலியைத் தேர்வு செய்ததால், பத்ரிநாத்தை தேர்வு செய்ய முடியாமல் போனது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடிவந்த பத்ரிநாத்தைத் தேர்வு செய்யாதது, அந்த அணியின் உரிமையாளராக இருந்த சீனிவாசனை அதிருப்தியடையச் செய்தது. பி.சி.சி.ஐ. பொருளாளராக சீனிவாசன் பதவி வகித்து வந்தார். இதனால், பி.சி.சி.ஐ. தலைவர் சரத் பவாரிடம் முறையிட்ட சீனிவாசன், என்னைப் பணிநீக்கம் செய்ய வைத்தார்’’ என்று அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். 

இலங்கை அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் வென்றது. அந்தத் தொடரில் விராட் கோலி, ஒரு அரைசதம் உள்பட 159 ரன்கள் எடுத்தார். கடந்த 2006-ம் ஆண்டில் தேர்வுக் குழுத் தலைவரான கிரண் மோரேவுக்குப் பதிலாக, அந்தப் பதவியில் திலிப் வெங்சர்க்கார் நியமிக்கப்பட்டார்.  2007-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் முதல் சுற்றோடு இந்திய அணி வெளியேறியது. இதனால், பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பல் அதிரடியாக மாற்றப்பட்டார். பின்னர், இந்திய அணியில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என திலிப் வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வுக்குழுவை பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!