Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

22 ஓவர்கள் பந்துவீசிய இந்தியா... 10 ஓவர்களே பேட்டிங் செய்த வங்கதேசம்... நம்புங்க இது டி-20! #IndvBan

இந்த நேரத்துல எதுக்கு நடக்குது என்றே தெரியாத ஒரு முத்தரப்பு டி-20 தொடர். அதில் கிரிக்கெட் உலகையே ஆட்டிப் படைக்கும் ஒரு அணியோடு, ஒரு கத்துக்குட்டி அணியும், கத்துக்குடியாய் மாறிக்கொண்டிருக்கும் அணியும் மோதுகின்றன. அவர்களுக்கு ஈடு கொடுக்க 6 முன்னணி வீரர்களுக்கு ஓய்வு கொடுத்தது இந்தியா. தொடர் தொடங்குவதற்கு முன்பே 'ஏ' டீம்கள் மோதும் தொடர்போல் ஆகிவிட்டது. போதாக்குறைக்கு 'இப்படியொரு சேனல் இருக்குதா?' என்ற வகையில் புதிய சேனல் ஒன்றில் ஒளிபரப்பாகிறது. பல டிஷ்களில் வரவில்லை. ஹாட்  ஸ்டாரிலும் இல்லை. இப்படி பலதரப்பட்ட காரணங்களால் ரசிகர்களுக்கு இந்தத் தொடரின் மீது வழக்கமான எதிர்பார்ப்பு இல்லை. ரசிகர்கள் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத இந்தத் தொடரை இந்திய வீரர்கள் எப்படி அணுகுகிறார்கள்...? #INDvBAN

ரோஹித் ஷர்மா

இலங்கையுடன் ஆடிய அதே பிளேயிங் லெவனைத்தான் இந்தப் போட்டியிலும் களமிறக்கியது இந்தியா. சொல்லப்போனால் அவர்களுக்கு இது மிகப்பெரிய சவால் அளிக்கக்கூடிய தொடர் இல்லைதான். வெற்றி பெற்றுவிட்டார்கள். கூலாக விளையாடியிருக்கலாம். ஆனால், ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு மைண்ட் செட்டில் ஆடினார்கள். அந்த வகையில் அந்த 11 பேரை 3 பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

குரூப் 1 : ரோஹித், தவான், சாஹல்

இந்த ஃபார்மட் இவர்கள் மூவருக்குமே ஃபேவரிட். இந்திய அணியைப் பொறுத்தவரையில் இவர்கள்தான் முதல் சாய்ஸ். ஒருநாள், டி-20 இரண்டிலுமே ரோஹித் - தவான் பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாது. அதேபோல் தனக்கான இடத்தை சாஹல் உறுதிசெய்துகொண்டார். துணைக்கண்டத்தில் மட்டுமல்லாது, தென்னாப்பிரிக்காவிலும் கலக்கியுள்ளார். ரிஸ்ட் ஸ்பின்னர்கள்தான் கோலியின் சாய்ஸ் என்பதால் அவர் நிச்சயம் உலகக்கோப்பைக்குப் பயணப்படுவார். அதனால் இந்த மூவருக்குமே எந்த பிரச்னையும் இல்லை. இயல்பாக அவர்களது ஆட்டத்தை வெளிப்படுத்தலாம்.

தவான் - #INDvBAN

தவான் - முதல் போட்டியின் ஃபார்மை மீண்டும் தொடர்ந்துவிட்டார். அற்புதமான ஆட்டம். நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய இடங்களில் பொறுமையாகவும் ஆடினார். சிறப்பான இன்னிங்ஸ். ரோஹித் - மோசமான தென்னாப்பிரிக்கத் தொடரிலிருந்து மீண்டுவர இந்திய கேப்டனுக்கு கொஞ்சம் நேரம் வேண்டும். அந்த தொடரின் ஃபார்ம் அவரை தனது நேச்சுரல் கேம் ஆடவிடாமல் தடுக்கிறது. மற்றபடி அடுத்த போட்டியில் கம்பேக் கொடுத்துவிடுவார். சாஹல் - நேற்று இந்தியாவின் எகனாமிகல் பௌலர். வெறும் 19 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

குரூப் 2 : வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர் 

இருவரும் உலகக்கோப்பைக்கான ரேஸில் இல்லை. ஆஃப் ஸ்பின்னராக இருப்பதால் வாஷிங்டன் சுந்தரின் ஏரியா துணைக்கண்டம்தான். அதேபோல் ஹர்டிக் பாண்டியா இடத்தை விஜய் சங்கர் பிடிப்பது அரிது. அதை இருவரும் உணர்ந்திருப்பர். அதனால், இவர்களுக்கு தேர்வாளர்களிடத்தில் உடனடியாக நிரூபிக்க எதுவும் இல்லை. தங்களின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும்.

உலகக்கோப்பை என்ற நெருக்கடியை உணராததால் இருவரும் இயல்பான தங்களின் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பவர்பிளேயில் நன்றாக வீசும் சுந்தர், நேற்றும் அசத்தினார். தொடக்கத்தில் உனத்கட், ஷர்துல் தாக்கூர் இருவரையும் டார்கட் செய்த வங்கதேச பேட்ஸ்மேன்களை கட்டுக்குள் வைத்திருந்தார். இவர் வீசிய 13 டாட் பால்கள் வங்கதேசத்தின் ரன்ரேட்டைக் கட்டுப்படுத்தியது. இரண்டாவது ஆட்டத்திலேயே ஆட்டநாயகன் ஆகிவிட்டார் விஜய் சங்கர். மஹ்மதுல்ல, முஷ்ஃபிகுர் ரஹீம் என இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வங்கதேசத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டார். ஆனால், 5 எக்ஸ்ட்ராக்கள். 

விஜய் ஷங்கர் - #INDvBAN

ஒரு நோ பால். ஃப்ரீ ஹிட் பந்தில் வைடு என பிரஷர் தருணங்களை கையாள்வதில் கொஞ்சம் சொதப்பினார். தன் ஸ்பெல்லின் கடைசி ஓவரில் மீண்டும் நோ பால். அதனால் கூடுதலாக 4 ரன்கள். போதாக்குறைக்கு ஒரே ஓவரில் நம் ஃபீல்டர்கள் 2 கேட்ச்கள் ட்ராப். இல்லாவிடில் விஜய் சங்கரின் இந்த ஸ்பெல் சிறப்பானதாக இருந்திருக்கும். முதல் தொடர் என்பதால், அதைப் பெரிதுபடுத்த வேண்டியதில்லை. ஆனால், அதை சீக்கிரம் சரிசெய்துகொண்டால் மட்டும் இந்திய அணியில் நீடிக்க முடியும். 

குரூப் 3 : மற்ற 6 வீரர்களும்! 

அந்த 2 குரூப்பில் இருந்த வீரர்களைப் போல் இவர்களால் நெருக்கடி இல்லாமல் விளையாட முடியாது. ரெய்னா, பன்ட் இருவரும் ஒருநாள் அணியில் இடம்பிடிக்கவேண்டும். கார்த்திக், மனீஷ் இருவருக்கும் உலகக்கோப்பைக்கான பிளேயிங் லெவனில் இடம்பிடிக்க கடும் போட்டி. உனத்கட், ஷர்துல் ஆகியோருக்கு அணிக்குள் நிரந்தர இடம் பிடிக்க வேண்டிய நிலை. ஆக, இவர்கள் நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. வெறும் கேமியோக்களால் இந்தத் தொடரின் அடுத்த போட்டிக்கான அணியில் இடம்பெற நினைத்தால், அது அவர்களின் எதிர்காலத்துக்கு பாதிப்பு. களத்தில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஜொலிக்கவேண்டும். 

அந்த பிரஷர்தான் நேற்று இவர்களைச் சொதப்பச் செய்தது. கடைசி 4 ஓவர்களில் வங்கதேசத்தின் டெய்ல் எண்டர்கள் பேட்டிங் செய்ததால், உனத்கட், ஷர்துல் ஆகியோரின் எகானமி தப்பியது. இருவரும் தங்களின் முதல் 2 ஓவர்களில் தலா 18 ரன்கள் கொடுத்திருந்தனர். இலங்கைக்கு எதிரான போட்டிக்குப் பிறகு இந்தப் போட்டியில் ஓரளவு நன்றாகவே வீசினார் ஷர்துல். ஆனால், இன்னும் லைன், லெந்த் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. போதாக்குறைக்கு இருவரும் சேர்ந்து 5 வைடுகள். பௌலர்களுக்குக் கூட தொடர்ந்து 2 வைடுகள் வீசினார் உனத்கட். 

மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக் - #INDvBAN

மனீஷ் பாண்டே இலங்கைக்கு எதிராக, ஒருநாள் போட்டியில் ஆடுவதுபோல் ஆடினார். 35 பந்துகளில் 37 ரன்கள். நேற்று பரவாயில்லை. ஆனாலும், மிகவும் சிரத்தை எடுத்து ஆடுவது அப்பட்டமாகத் தெரிகிறது. மிகவும் திறமையான பேட்ஸ்மேனான அவர், இக்கட்டான சூழலில் தன்னுடைய நேச்சுரல் கேமை ஆட முடியாமல் தடுமாறுகிறார். இந்தத் தொடர் அதை ஓரளவு சரிசெய்யும் என எதிர்பார்க்கலாம். டி.கே - இன்னும் மிடில் ஆர்டரில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ரிசப் பன்ட் - கீப்பிங் வாய்ப்பும் இல்லை. மோசமான ஷாட்களால் பேட்டிங் வாய்ப்பையும் வீணடிக்கிறார். பதற்றமாக ஆடுகிறார். இன்னும் கவனமாக ஆடவேண்டும். தோனியின் இடத்தை நிரப்புபவர் என அனைவரும் எதிர்பார்க்கும்போது இப்படியான செயல்பாடுகள் பெரும் ஏமாற்றமாக இருக்கிறது. 

சுரேஷ் ரெய்னா... என்ன ஆச்சு...? முதல் போட்டியில் அவுட்டான விதமே பரிதாபமாக இருந்தது. நேற்றும் பேட்டிங்கில் மிகக் கவனமாகவே விளையாடினார். 27 பந்துகளில் 28 ரன்கள். ஆனால், அதையெல்லாம் விட அவர் கேட்ச் மிஸ் செய்ததுதான் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தியாவின் ஆகச் சிறந்த ஃபீல்டர், மிகவும் எளிதான கேட்சைத் தவறவிடுவதை என்னவென்று சொல்வது. டி20 போட்டிகளில் அநாயசமாக ரன் குவித்து, ஃபீல்டிங்கில் சூப்பர்மேனாக பறக்கம் அந்த ரெய்னா எங்கே...? 

ரெய்னா - #INDvBAN

இப்படி இந்திய பௌலர்களும் ஃபீல்டர்களும் ஒருபுறம் சொதப்ப, வங்கதேசம் பேட்டிங் செய்த விதம் படுமோசம். 20 ஓவர்களில் 57 டாட் பால்கள். அவர்கள் ரன் அடித்தது என்னவோ 10 ஓவர்களில்தான். அந்த டாட் பால்கள் ஆகச்சிறந்த பந்துகளினால் வந்தது இல்லை என்பதுதான் வங்கதேசத்தின் மோசமான பிளானை சுட்டிக்காட்டுகிறது. இலங்கை அணிபோல் தொடக்கத்திலிருந்தே இந்திய அணியை அட்டாக் செய்ய முடிவெடுத்த அவர்களால், அதை சரியாக எக்ஸிக்யூட் செய்யமுடியவில்லை. மிடில் ஸ்டம்ப், லெக் ஸ்டம்ப் லைன்களில் வந்த பந்துகளையெல்லாம் அடித்தவர்கள், ஆஃப் சைடு வந்த பந்துகளில் ஸ்கோர் செய்யத் தவறினார்கள். பேட்டைப் போட்டு சுற்ற, பந்து மிஸ் ஆக, டாட் பால்களின் எண்ணிக்கை அதிகமானது. கிட்டத்தட்ட 68 சதவிகித ரன்கள் லெக் சைடில் வந்தவையே. அவர்களது பிளானே, அவர்களின் இன்னிங்ஸை கெடுத்துவிட்டது.

பார்ப்பதற்கு பரபரப்பே இல்லாத தொடர்போலத்தான் இருக்கிறது. ஆனால், ஒவ்வொரு வீரருக்கும் இது ஒரு வகையில் முக்கியமான தொடராக அமைந்துள்ளது. அந்தத் தேவையே அவர்கள் மீதான பிரஷரையும் அதிகரிக்கிறது. அப்படி எந்த நெருக்கடியையும் உணராமல் இந்திய வீரர்கள் ஆடினால்தான் அவர்களின் முழு திறனும் வெளிப்படும். அப்போதுதான் இந்த சின்ன தொடரிலும் பரபரப்பிருக்கும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ