வெளியிடப்பட்ட நேரம்: 17:13 (11/03/2018)

கடைசி தொடர்பு:17:13 (11/03/2018)

``இந்தியக் கிரிக்கெட் அணியின் வெளிநாட்டுத் தொடர்கள் இனி இப்படித்தான் நடக்கும்!’ - பி.சி.சி.ஐயின் பலே ஐடியா

இந்திய அணி பங்கேற்கும் வெளிநாட்டு தொடர்களில் மாற்றம் கொண்டுவரப்பட இருப்பதாக இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி தெரிவித்துள்ளார். 

இந்திய அணி சமீபத்தில் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்த விராட் கோலி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கிலும், டி20 தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றது. டெஸ்ட் தொடரில் தடுமாறிய இந்திய பேட்ஸ்மேன்கள் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

இந்தநிலையில், இந்திய அணியின் வெளிநாட்டு பயணங்களில் ஒருநாள் மற்றும்  டி20 தொடர்களை முதலில் விளையாடும் வகையில் மாற்றம் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பி.சி.சி.ஐ. தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, ``இந்திய அணி ஆஸ்திரேலியா மற்றும்  இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது. அந்த பயணங்களின் போது மைதானங்கள் மற்றும் அங்கு நிலவும் தட்ப வெப்ப சூழல்களுக்கு ஏற்றவாறு வீரர்கள், தங்களைத் தயார்படுத்திக் கொள்ளும் வகையில் முதலில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுமாறு மாற்றம் செய்யப்பட இருக்கிறது.

அதன் பின்னர் டெஸ்ட் தொடர்களில் விளையாடும் வகையில் தொடருக்கான அட்டவணைகள் தயாரிக்கப்படும். அணி நிர்வாகத்திடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் தொடர்பாக ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. வரும் கோடைகாலத்தில் இந்திய அணி இங்கிலாந்து செல்கிறது. இங்கிலாந்தில் ஒரு மாத காலம் இருந்த பின்னரே, இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும். இது வீரர்கள், அந்த நாட்டு தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்றவாறு தங்களைத் தயார்படுத்திக் கொள்ள உதவிகரமாக இருக்கும்’’என்றார்.