வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (11/03/2018)

கடைசி தொடர்பு:21:31 (11/03/2018)

இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு 2 டி20 போட்டிகளில் விளையாடத் தடை!

வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்குள் இலங்கை அணி பந்துவீசி முடிக்காமல், கூடுதல் நேரம் எடுத்துக் கொண்ட காரணத்தால் கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு 2 டி20 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Photo Credit: Twitter/ICC

இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் இடையிலான நிதாஹஸ் கோப்பைக்கான டி20 தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. இலங்கை - வங்கதேசம் அணிகள் இடையிலான லீக் போட்டி கொழும்பு பிரேமதாஸா மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில், முதலில் பேட் செய்த இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. 215 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி, 2 பந்துகள் மீதமிருந்த நிலையில், வெற்றி இலக்கை எட்டி சாதனை படைத்தது. இலங்கை மண்ணில் டி20 போட்டியில் அதிகபட்ச சேசிங் ஸ்கோர் இதுவாகும்.

இந்தநிலையில், வங்கதேச அணிக்கெதிரான போட்டியில் குறிப்பிட்ட நேரத்துக்கும் அதிகமான நேரத்தை இலங்கை அணி பந்துவீச எடுத்துக் கொண்டதாக போட்டி நடுவர் குற்றம்சாட்டினார். ஒதுக்கப்பட்ட நேரத்தில் 4 ஓவர்கள் குறைவாகப் பந்துவீசியதால், கேப்டன் தினேஷ் சண்டிமாலுக்கு 2  டி20 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், இலங்கை  அணி வீரர்களுக்கு போட்டி ஊதியத்திலிருந்து 60 சதவிகிதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால், இந்திய அணிக்கெதிரான நாளைய போட்டியிலும், வங்கதேச அணிக்கெதிரான அடுத்த லீக் போட்டியிலும் இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.