Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

``ஜாலியா ஓடுனேன்... ரெக்கார்டு பிரேக் பண்ணி, காமன்வெல்த் போவேன்னு நினைக்கலை!’’ - தடகள வீரர் தருண்

``ரயில்வே, ஆர்மி ரெண்டுல இருந்தும் வேலை தர ரெடியா இருக்காங்க. ஆனா, நான் இன்னும் பெருசா சாதனை எதுவும் பண்ணல. ரெக்கார்டு பண்ணிட்டு ஜாப்ல சேரலாம். வேலை எங்க போயிடப் போகுது...’’  - 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 11 ஆண்டு நேஷனல் ரெக்கார்டை பிரேக் செய்த தமிழக தடகள வீரர் தருண் சொன்னது இது. புதிய சாதனை படைத்தது மட்டுமல்லாது, 2018 கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் பெற்றிருப்பதுதான் இங்கு ஸ்பெஷல்.

தருண்

பஞ்சாபின் பட்டியலா நகரில் சமீபத்தில் ஃபெடரேஷன் கோப்பை தேசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆஸ்திரேலியாவின் பிரேஸ்பேன் நகரின் தெற்கே உள்ள கோல்டு கோஸ்ட் பகுதியில் ஏப்ரல் 4-ம் தேதியிலிருந்து காமன்வெல்த் போட்டிகள் நடக்கவுள்ளன. காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்கான கடைசி தகுதிச் சுற்றாகக் கருதப்பட்ட ஃபெடரேஷன் கோப்பையில் சாதித்து, கோல்டு கோஸ்ட் செல்வதற்கான டிக்கெட்டை, பலர் உறுதிப்படுத்தினர். அதில் ஒருவர் தருண். 

யார் இந்தத் தருண்?

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ராவுத்தம் பாளையத்தைச் சேர்ந்தவர் தருண். தந்தை அய்யாசாமி காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்தார். தாய் பூங்கொடி பள்ளி ஆசிரியை. தங்கை சந்தியா நேஷனல் லெவல் வாலிபால் வீராங்கனை. ஸ்போர்ட்ஸ் என்பது தருண் ஜீனிலேயே கலந்திருந்தது. எட்டாவது படிக்கும் வரை பள்ளி அளவிலான கோ - கோ போட்டிகளில் தருண் கில்லி. ஒன்பதாவது படிப்பதற்காக செஞ்சுரி ஃபவுண்டேஷன் பள்ளிக்குச் செல்ல, அங்கு அவரது வாழ்க்கையும் மாறியது. பள்ளி அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம் என மற்ற பிரிவுகளில் எல்லாம் ஆள் சேர்ந்துவிட்டனர். `400 மீட்டர்ல மட்டும்தான் இடம் இருக்கு. ஓகேவான்னு கேட்டாங்க. சரி ஓடுவோம்னு ஓடுனேன். நான்தான் ஃபர்ஸ்ட். அன்னிலிருந்து 400 மீட்டர்தான் என் ஃபேவரிட்’’ எனச் சொல்லும் தருண், கொல்காத்தாவில் நடந்த பள்ளிகளுக்கு இடையிலான தேசிய அளவிலான போட்டியில், 400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி வென்றார். அன்று தொடங்கியது பதக்க வேட்டை...

மிடில் டிஸ்டன்ஸ் ரன்னர்களுக்குரிய ஒரு பெரிய பிளஸ் என்னவெனில் அவர்கள் ஒரேயொரு கேட்டகிரியுடன் முடங்கி விட வேண்டியதில்லை. தருண் அந்த வகைதான். 400 மீட்டர் ஓட்டம் மட்டுமல்லாது 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் அவரால் ஜொலிக்க முடியும். 400 மீட்டர் தடகளம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இவை இரண்டிலும் ஒருவன் ஜொலிக்கிறான் எனில், 4x400 மீட்டர் தொடர் ஓட்டம் அவனுக்கு கைவந்தகலை. ஆம், ஒரு கட்டத்தில் இந்த மூன்று பிரிவுகளிலும் அவர் முத்திரை பதித்தார்.

Ayyasamy Dharun

பெங்களூருவில் 2015-ம் ஆண்டு நடந்த ஃபெடரேஷன் கோப்பையில் 400 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இரண்டிலும் வெண்கலம் வென்றார். கவுகாத்தியில் 2016-ம் ஆண்டு நடந்த தெற்காசியப் போட்டிகளில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டம், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் இரண்டிலும் முதலிடம். துருக்கி, போலந்தில் நடந்த உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து ஜொலித்ததால், 2016 ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றார்.  

ஒவ்வொரு விளையாட்டு வீரனுக்கும் ஒரு பொது எதிரி உண்டு. காயம். ஒலிம்பிக் போட்டிக்குப் பின் முழங்காலுக்குக் கீழே முறிவு (shinbone) ஏற்பட்டதால், ஓராண்டு எழுந்து நடக்க முடியவில்லை. காயத்திலிருந்து மீண்டாலும், அடுத்த ஆறு மாதங்கள் அவரால் இயல்பாகப் பயிற்சி செய்ய முடியவில்லை. இயல்பு நிலைக்குத் திரும்ப ஒன்றரை ஆண்டுகள் ஆனது. ஒரு வழியாக மீண்டும் டிராக்குக்குத் திரும்பினார். கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டிக்குத் தீவிரமாக தயாராகிக்கொண்டிருந்தார். பாட்டியாலாவில் இந்தியன் கேம்ப்பில் முகாமிட்டு பயற்சிசெய்து கொண்டிருக்கிறார்.

ஃபெடரேஷன் கோப்பை தொடங்குவதற்கு பத்து நாள்களே இருந்தபோது டைபாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். ஒரு வாரம் படுக்கையை விட்டு எழ முடியவில்லை. ஒருவழியாக ஃபெடரேஷன் கோப்பை தொடங்கும் நேரத்தில் காய்ச்சல் குணமடைந்தது. அவரால் 400 மீ ஓட்டத்தில் பதக்கம் வெல்ல முடியவில்லை. 400 மீட்டர் தடை ஓட்டத்திலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் பங்கேற்றார். ஆனால், அதில் சாம்பியன். 49.45 நொடிகளில் இலக்கை அடைந்து முதலிடம் பிடித்ததோடு, புதிய நேஷனல் ரெக்கா ர்டு படைத்தார்.  2007-ல் ஜோசப் ஆப்ரஹாம் 49.51 நொடிகளில் கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. 11 ஆண்டுகளுக்குப் பின் அந்தச் சாதனையை முறியடித்து, தன் பெயரை அழுந்தப் பதிவு செய்தார் தருண். 

Ayyasamy Dharun

``ஜாலியா ஓடுனேன். எந்த ரிஸ்க்கும் எடுக்கலை. ஃபர்ஸ்ட் வந்தது மட்டுமில்லாம, நேஷனல் ரெக்கார்டை பிரேக் பண்ணுவேன்னு நினைச்சுக் கூட பார்க்கலை. காமன்வெல்த்துக்கு செலக்ட் ஆனது இன்னும் சந்தோஷம்’’ என்றார் தருண். `அதெப்டி, ரிஸ்க் எடுக்காமா, இது சாத்தியம்’ என்றதும், ``400 மீட்டர் ஓட்டத்துக்கு பிராக்டீஸ் பண்றதுதான் கஷ்டம். தாவு தீந்துரும். நான் அல்ரெடி 400 மீட்டருக்கு ஏத்த மாதிரி பிராக்டீஸ் பண்ணதால, ஹர்டில்ஸ் எனக்குப் பெரிய ரிஸ்க்கா தெரியலை. ஜம்ப், ஸ்டெப், டைமிங்னு இதுலயும் சில சிக்கல் இருக்கு. ஆனா, ரன்னிங் அளவுக்கு ஹர்டில்ஸ் பெரிய விஷயம் கிடையாது’’ எனச் சொல்லும் தருண்,  காமன்வெல்த் போட்டியில் 4*400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் பங்கேற்கிறார். 

அப்படி இப்படி என ஒருமுறை நேஷனல் சாம்பியனாகி விட்டால் போதும், ஒரு வேலை கிடைத்துவிடும். அதன்பின் ஸ்போர்ட்ஸுக்கு குட்பை சொல்லிவிடலாம் என்பதே இங்கு பல விளையாட்டு வீரர்களின் நிலை. ரியோ ஒலிம்பிக் போட்டிக்குச் சென்றதிலிருந்து தருண் மீது பலரும் ஒரு கண் வைக்க ஆரம்பித்து விட்டனர். அவர் நினைத்தால் இன்றே ஒரு வேலையில் சேர்ந்துவிடலாம். ``ரயில்வே, ஆர்மி ரெண்டுல இருந்தும் வேலை தர ரெடியா இருக்காங்க. ஆனா, நான் இன்னும் பெருசா சாதனை எதுவும் பண்ணல. ரெக்கார்டு பண்ணிட்டு ஜாப்ல சேரலாம். வேலை எங்க போயிடப் போகுது?’’ என மெச்சூரிட்டியுடன் பேசும் தருண், காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வெல்வது குறித்து எந்த உறுதியும் அளிக்கவில்லை. ``காமன்வெல்த்துக்கு இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு. அதனால, மெடல் வின் பண்ணுவேன்னு உறுதியா சொல்ல முடியாது. முடிஞ்ச வரை என் பெஸ்ட்டை கொடுப்பேன். காமன்வெல்த்தை விட ஏசியன் கேம்ஸ்ல மெடல் வின் பண்றதுதான் என் இலக்கு’’ என வெளிப்படையாகச் சொன்னார். 

Ayyasamy Dharun

ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் திறமையுடைய வீரர், வீராங்கனைகளைக் கண்டறிந்து அவர்களுக்குப் பயிற்சி உள்ளிட்ட பிற வசதிகளைச் செய்துதருவதற்காகவே, தமிழ்நாடு அரசு `எலைட் ஸ்கீம்’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. அந்தத் திட்டத்தின் கீழ், வீரர்கள் தங்கள் பயிற்சி, உபகரணங்கள் உள்ளிட்ட செலவினங்களுக்கான பில்லை சமர்ப்பித்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் தருண் இடம்பெற்றிருந்தாலும், இதுவரை அவர் இதன் மூலம் பலன்பெறவில்லை. மாறாக, அவர் பயின்று வரும் ஒசூரில் உள்ள Alvas கல்லூரி, அவருக்கு வேண்டிய சகல வசதிகளையும் செய்து வருகிறது. தருணுக்கு மட்டுமல்ல, அந்தக் கல்லூரியில் படிக்கும் விளையாட்டு வீரர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப ரூ.15,000 முதல் ரூ. 25,000 வரை வழங்கி வருகிறது கல்லூரி நிர்வாகம். அந்தப் பணத்தில்தான் தருண் தன் பயிற்சிக்கான செலவு, போட்டிகளில் பங்கேற்கும் செலவை சமாளித்து வருகிறார். 

காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றால், எல்லாப் பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு கிடைக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement

MUST READ

Advertisement