Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

`ஸ்னைப்பர் ஜெஜே’ டபுள் கோல்... ஃபைனலில் சென்னையின் எஃப்.சி! #PoduMachiGoalu #LetsFootball #CHEGOA

சென்னையின் எஃப்.சி மற்றும் கோவா எஃப்.சி அணிகள் மோதிய, பரபரப்பான அரையிறுதியின் இரண்டாவது லெக் போட்டியில், சொந்த மண்ணில் கெத்து காட்டிய சென்னை அணி 3-0 என்ற கோல்கணக்கில் கோவாவை சாய்த்து, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. `மிசோ ஸ்னைப்பர்’ என்று செல்லப்பெயர் கொண்ட இந்திய வீரர் ஜெஜே இரட்டை கோல் அடித்து மிரட்ட, சென்னைப் பையனான மிட்ஃபீல்டர் தனபால் கணேஷ் ஒரு ஹெடர் கோல் அடித்து, கூடியிருந்த சூப்பர் மச்சான் ரசிகர்களை, தன் பங்குக்குப் பரவசப்படுத்தினார். முந்தைய முதல் லெக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆன நிலையில், இந்த 2-வது லெக் போட்டியில் 3-0 என்ற கோல் கணக்கில் வென்றதால், மொத்தமாக 4-1 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றது சென்னை அணி. #CHEGOA

சென்னையின் எஃப்.சி #CHEGOA

கால்பந்து என்பது தனி நபர் ஆட்டமல்ல; ஒட்டுமொத்தமாக, ஒரு அணியாகச் செயல்படும் வீரர்களாலே கால்பந்து அழகு பெறுகிறது. அப்படி ஓர் அழகான ஆட்டம்தான் சென்னை அணியை இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற வைத்திருக்கிறது. பின்களம், நடுகளம் மற்றும் முன்களம் என அனைத்து ஏரியாக்களிலுமே சென்னை அணி வீரர்கள் துடிப்பாக ஆடியதுடன், ஒரு கட்டமைக்கப்பட்ட அணியாக ஒருங்கிணைந்து செயல்பட்டதன் விளைவுதான் இந்த அபார வெற்றி. பின்களத்தில் மெயில்சன், செரேனோ, கால்டெரான் மற்றும் ஜெர்ரி அடங்கிய டிஃபென்சிவ் கூட்டணி, எந்த இடத்தில் கோவா வீரர்கள் பந்தோடு நுழைந்தாலும் டஃப் கொடுத்து பந்தை கிளியர் செய்து அசத்தியது. பின்களம் தந்த நம்பிக்கையால், நடுகளத்தில் தனபால் கணேஷும், பிக்ரம்ஜித்தும் சென்னையின் ஃபேன் ஃபேவரிட் ரஃபேல் அகுஸ்டோவும் துணை செய்ய, முன்களத்தில் வெடி வெடித்தனர்  நெல்சனும், ஜேஜேவும். அதிலும் நெல்சன் ஷோ ஆசம். ஜெஜே ஃபினிஷிங் ஆசம், ஆசம்.

சென்னையின் எஃப்.சி #CHEGOA

தொடக்கம் முதலே வேகமெடுத்த போட்டியில், 15 நிமிடங்கள் தாண்டியதுமே சென்னையின் கை ஓங்கத் தொடங்கியது. போட்டியின் முதல் கோலை அடித்தவர் சென்னையின் ஜேஜே. 26-வது நிமிடத்தில் கோவா கோல் பாக்சிற்குள் நெல்சன் அனுப்பிய டெலீசியஸ் கிராஸை, நிதானமான ஒரு ஃபைன் ஹெடரால் கோலாக்கினார் `மிசோ ஸ்னைப்பர்’ ஜேஜே. அடுத்த 7-வது நிமிடத்திலேயே அடுத்த கோல் சென்னைக்கு, தனபால் கணேஷின் த்ரில்லிங் ஹெடரால் விழுந்தது. இம்முறையும், செட் பீஸிலிருந்து ஒரு சூப்பர் கிராஸ் மூலம் அந்த கோலுக்கு அடித்தளம் போட்டது நெல்சன் கிரிகோரி. நெல்சன் சூறாவளியுடன் கொஞ்சம் ரஃபேல் புயலும் சேர்ந்து அடிக்க, ஆடித்தான் போனது கோவாவின் டிஃபென்ஸ். அதிக நேரம் பந்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், கோவா வீரர்கள் எடுத்த முயற்சிகள், சென்னையின் கீப்பர் கரன்ஜித் சிங்கால் முறியடிக்கப்பட, முதல் பாதி 2-0 என முடிவடைந்தது.

சென்னையின் எஃப்.சி #CHEGOA

இரண்டாம் பாதியில் சென்னை கீப்பர் கரன் ஜித் உடனடி ரியாக்சன்களால் கோவா வீரர்களின் போராட்டங்களை அடங்க வைத்தார். சென்னை டிஃபென்ஸைத் தாண்டி உள்ளே சென்ற ஓரிரு ஷாட்களையும், அவர் தடுத்துவிட்டார். கோவா கீப்பர் நவீனும், சென்னை வீரர்களின் பல ஷாட்டுகளை முறியடித்தாலும், அதிர்ஷ்டம் ஏனோ அவருக்குக் கை கொடுக்கவில்லை. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில், மாற்று வீரராகிய கேவிலன், ஜெஜேவுக்கு பாஸ் போட்டார். வந்த பந்து, கோவா டிஃபெண்டரின் காலில் பட்டாலும், ஒரு வழியாக ஜெஜேவிடமே சேர்ந்துவிட, அதை கோவா கீப்பர் நவீனை ஏமாற்றிவிட்டு பாட்டம் லெஃப்ட் கார்னருக்கு அனுப்பிவைத்து, தன் இரண்டாவது கோலைப் பதிவு செய்தார். சென்னையின் டெட்லாக்கை கடைசி வரை உடைக்க முடியாத கோவா, கடைசி வரை கோல் ஏதும் அடிக்கவே முடியாமல், பரிதாபமாகத் தோற்று வெளியேறியது.

#CHEGOA சென்னையின் எஃப்.சி

இதன் மூலம் சென்னை அணி, வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள, பெங்களூரு அணிக்கெதிரான இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. சென்னையின் வெற்றிக்கு முக்கியக் காரணமான, `டிஃபென்சிவ் புலி’ மெயில்சன் ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச் சென்றார். கூடியிருந்த 19,000 ரசிகர்களுக்கும் செம்ம விருந்தாக அமைந்த இப்போட்டியில், சென்னை அணி ஒருங்கிணைந்த மற்றும் உறுதியான அதே சமயத்தில் முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதே, வெற்றிக்கு காரணம். இதே ஃபார்மோடு ஃபைனலுக்குப் போனால் சாம்பியன் டைட்டிலும் நிச்சயம். வெற்றிக்கனி எட்டும் தூரத்தில்தான் இருக்கிறது! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?
Advertisement

MUST READ