40 வயது... 18,000 ரன்கள்... 25 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கும் வாசிம் ஜாபர்! | Wasim Jaffer recorded 18000 runs in first class cricket

வெளியிடப்பட்ட நேரம்: 08:50 (18/03/2018)

கடைசி தொடர்பு:08:50 (18/03/2018)

40 வயது... 18,000 ரன்கள்... 25 ஆண்டுகளாக உள்ளூர் கிரிக்கெட்டில் கலக்கும் வாசிம் ஜாபர்!

சேவக், கம்பீர் காலத்துக்கு முன்னாள் இந்தியா சோதித்துப் பார்த்த பல தொடக்க ஆட்டக்காரர்களில் கொஞ்சம் அதிக காலம் தாக்குப்பிடித்தவர் இவர்தான். சர்வதேசப் போட்டிகளில் அவ்வளவு சிறப்பாகச் செயல்படாவிட்டாலும், உள்ளூர் போட்டிகளில் பாட்ஷாவாகவே வலம் வந்தார். வாசிம் ஜாபர் - முதல்தர கிரிக்கெட்டின் தவிர்க்க முடியாத வீரர். 

அவருக்கு அப்போது வயது 15 இருக்கும். அந்தச் சிறு வயதில், பள்ளி கிரிக்கெட் அணிக்காக 400 ரன்களைக் குவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இன்று அவருக்கு வயது 40. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பின்னும், அதே ஆச்சர்யத்தை தன் பேட்டிங் திறமையால் ஏற்படுத்தியுள்ளார். `முதல் தர கிரிக்கெட்டின் ரன் மெஷின்’ என்று அழைக்கப்படுகிறார். கிளாஸாக ஆடி 40 வயதில் இரட்டைச் சதம் அடிக்கிறார். உண்மையில் வாசிம் ஜாபர் ஒரு `வாவ்’ வீரர்தான். 

18 வயதில், இவருக்கு முதல் தரப் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு இரண்டாவது போட்டியிலேயே மும்பை அணிக்காக முச்சதம் விளாசினார் ஜாபர். 2008 ஐ.பி.எல் டி-20 போட்டியின்போது பெங்களூரு அணியை டெஸ்ட் கிரிக்கெட் அணி என்று விமர்சித்தனர். ஏனெனில், அந்த அணியில் டிராவிட்டுக்கு இணையாக தனது க்ளாஸிக் ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜாபர்.

                                வாசிம் ஜாபர்

இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகள் விளையாடியபோதிலும், ஜாபரை இன்றுவரை ஞாபகம் வைத்துக்கொள்ள மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2006-ம் ஆண்டு நடந்த அந்த டெஸ்ட் போட்டி மட்டுமே போதும். முதல் இன்னிங்ஸில் அவர் அடித்தது ஒரு ரன் மட்டுமே. இந்தியாவின் ஸ்கோர் 241. அடுத்து ஆடிய மேற்கிந்தியத்தீவுகள் 371 ரன்களைக் குவித்தது. அதன்பின் ஓப்பனராகக் களமிறங்கிய ஜாபர், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான சேவாக், லட்சுமணன், டிராவிட் ஆகியோரோடு பாட்னர்ஷிப் வைத்து பொறுமையாக 399 பந்துகளில் 212 ரன்களைக் குவித்து இந்திய அணியை மீட்டெடுத்து டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தார். அந்த இரட்டைச் சதத்தை போல இந்த இராணிக் கோப்பை இரட்டைச் சதமும் ஸ்பெஷலானது. 'ரெஸ்ட் ஆஃப் இந்தியா' அணிக்கும் , விதர்பா அணிக்கும் இடையிலான  இராணிக் கோப்பை டெஸ்ட் போட்டியில் 431 பந்துகளில் 286 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார் ஜாபர். இந்த 286 ரன்களில் 34 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும். 286 ரன்கள் அடிப்பதற்குள் பல்வேறு சாதனைகளைக் கடந்ததுதான் இந்த இரட்டைச் சதத்தின்  ஸ்பெஷல்!

                                    வாசிம் ஜாபர்

இந்த இரட்டைச் சதத்தின் மூலம் முதல் தரப் போட்டிகளில் 18,000 ரன்களைக் கடந்து சாதனை படைத்துள்ளார் ஜாபர். இதன்மூலம் முதல் தரப் போட்டிகளில் அதிக ரன் குவித்த 6-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதுவரை தனிநபர் அதிகபட்சமாக இருந்த முரளி விஜயின் 266 ரன்கள் என்ற சாதனையைத் தகர்த்து, இராணிக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சாதனையைப் படைத்தார். முதல் தரப் போட்டிகளில் 40 வயதுக்கு மேல் 200 ரன்களைக் கடந்த 5-வது  இந்திய வீரர். அது மட்டுமல்லாமல் 40 வயதில் 250 ரன்களைக் கடந்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் எட்டியுள்ளார். ஜிஆர்.விஸ்வநாத்திற்குப் பிறகு இராணிக் கோப்பையில் தொடர்ந்து ஆறு முறை அரைசதங்கள் அடித்தவரும் இவரே. முதல் தரப் போட்டிகளில் இவர் அடித்திருக்கும் சதங்களின் எண்ணிக்கை 53. இதன்மூலம் அதிக சதங்கள் அடித்த 8-வது இந்திய வீரரானார் ஜாபர்.

                                 வாசிம் ஜாபர்

முதல் தரப் போட்டிகளில், 53 சதங்கள்,8 இரட்டைச் சதங்கள், 50+ சராசரி,ரஞ்சிக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்தவர் என்று பல சாதனைகளைக் கையில் வைத்துள்ள ஜாபர், மீதமுள்ள சாதனைகளை விரைவில் நிச்சயம் தகர்ப்பார். இந்திய அணிக்காக ஆடும்போது கொடுத்த வாய்ப்புகளில் தவறினாரே தவிர, உள்ளூர் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத வீரராகவே வலம் வந்தார். தொடக்க ஆட்டக்காரர் டெஸ்ட் போட்டிகளில் எப்படி ஆட வேண்டும் என்பதற்கு ஜாபர் சிறந்த உதாரணம். ஜாபரை உள்ளூர் கிரிக்கெட்டின் ராகுல் ட்ராவிட் என்றே கூறலாம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்