ரபாடாவுக்கு ஒரு நியாயம், வங்கதேசத்துக்கு ஒரு நியாயமா...?! இது என்ன நீதி? #BANvsSL

கொழும்புவில் நடந்த இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி-20 போட்டியின் கடைசி ஓவரில்தான் அந்தக் களேபரம் நடந்தது. இலங்கையின் 159 ரன்களை சேஸ் செய்த வங்கதேச அணிக்கு, கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. முஸ்டஃபிசுர், மகமதுல்லா இருவரும் களத்தில் இருக்கின்றனர். மகமதுல்லா செம ஃபார்மில் இருந்தார். உதனா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை முஸ்டஃபிசுர் எதிர்கொண்டார். ஷார்ட் பால். பெளன்ஸரும் கூட. பந்து பேட்டில் பட்டது போல தெரிந்ததால், இலங்கை ரிவ்யூ கோரியது. அவுட்டில்லை என தெரியவந்தது. இரண்டாவது பந்தை முஸ்டஃபிசுர் அடிக்கவில்லை. இருந்தாலும் எதிரில் இருந்த மகமதுல்லா ஓடி வந்துவிட்டார். ஆனால், பெளலர் எண்டில் முஸ்டஃபிசுர் ரன் அவுட். களத்தில் நிலைமை இப்படி இருக்க, களத்துக்கு வெளியே dugout-ல்  இருந்த வங்கதேச வீரர்கள் கொந்தளிப்பில் இருந்தனர். #BANvsSL

#BANvsSL Perera vs Nurul

காரணம், இரண்டாவது பந்தும் தோள்பட்டைக்கு மேலே வந்ததால், இதை பெளன்ஸர் என அம்பயர்  அறிவிக்கவில்லை என்பது அவர்கள் வாதம். ஒருவேளை அம்பயர் அதை பெளன்ஸர் என அறிவித்திருந்தால், ஒரு ஃப்ரீ ஹிட் கிடைத்திருக்கும்; ஐந்து பந்துகளில் 11 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டிருக்கும்; முஸ்டஃபிசுர் ரன் அவுட்டாகாமல் இருந்திருப்பார். நான்கு பந்துகளில் 12 ரன்கள் தேவை என்ற நெருக்கடி இல்லாமல் இருந்திருக்கும் என்பது வங்கதேச வீரர்களின் நினைப்பு. இந்தக் கடுப்பில்தான் ஷகிப் அல் ஹசன், களத்தில் இருந்த தங்கள் பேட்ஸ்மேன்களை பெவிலியன் திரும்புமாறு சைகை செய்தார். அவரை அங்கிருந்த நான்காவது அம்பயர் சாந்தப்படுத்தினார்.

இதற்கிடையே, களத்தில் இருக்கும் மகமதுல்லா, ருபெல் ஹுசைனுக்கு மெசேஜ் சொல்வதற்காக சென்ற வங்கதேச சப்ஸ்டிட்யூட் பிளேயர் நுருல் ஹசன், இலங்கை கேப்டன் திசரா பெரேராவிடம் வாக்குவாதம் செய்தார். களத்தில் இருந்த அம்பயர்கள் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்தனர். ஆட்டம் மீண்டும் தொடங்கிய பின், மகமதுல்லா மூன்றாவது பந்தில் எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரி, அடுத்த பந்தில் மிட் விக்கெட் பகுதியில் 2 ரன்கள், ஐந்தாவது பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் ஒரு சிக்ஸர் விளாச, ஒரு பந்தை மிச்சம் வைத்து, வங்கதேசம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது

#BANvsSL Mahmudullah

இந்தப் போட்டியில் மகமதுல்லாவின்  பேட்டிங் சூப்பர். வங்கதேசத்தின் த்ரில்லிங் வெற்றியும் ஓகே. ஆனால், வங்கதேச வீரர்கள் நடந்துகொண்ட விதம்தான் ரசிகர்களை முகம் சுழிக்கவைத்தது. இது தவிர, வங்கதேசத்தின் டிரெஸ்ஸிங் ரூம் கண்ணாடியும் உடைக்கப்பட்டிருந்தது. அது தொடர்பான விசாரணை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, விளையாட்டு தர்மத்தை மீறி நடந்துகொண்டதற்காக, லெவல் 1 பிரிவின் கீழ் ஷகிப் அல் ஹசனுக்கு ஒரு தகுதியிழப்புப் புள்ளியும், போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆட்டத்தின் நன்மதிப்பைக் கெடுக்கும் விதத்தில் நடந்துகொண்டதற்காக, நுருல் ஹுசைனுக்கு ஒரு demerit புள்ளியுடன் அபராதமும் விதிக்கப்பட்டது. 

``இந்த சம்பவம் ஏமாற்றமளிக்கிறது. எந்தவகையிலான கிரிக்கெட்டிலும் வீரர்கள் இதுபோல நடந்துகொள்ளக்கூடாது. அது ஃபைனலுக்கு முன்னேறுவதற்கான முக்கியமான போட்டி என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், அந்த இரண்டு வீரர்களின் செயல்கள் ஏற்கத்தக்கதல்ல. நான்காவது அம்பயர் மட்டும் ஷகிப் அல் ஹசனைத் தடுத்து நிறுத்தாமல் இருந்திருந்தாலும், நுருல் - திசரா பெரேராவை களத்தில் இருந்த அம்பயர்கள் சாந்தப்படுத்தாமல் இருந்திருந்தாலும், நிலைமை இன்னும் மோசமாகியிருக்கும்’’ என்றார் மேட்ச் ரெஃப்ரி கிறிஸ் பிராட். 

``எது நடந்ததோ அது நடந்திருக்கக் கூடாது. ஆட்டத்தின் முக்கியமான கட்டம் என்பதால் ஆர்வத்தில் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன். அடுத்த போட்டியில் என்னை அமைதிப்படுத்த முயற்சிப்பேன்’’ - என போட்டி முடிந்தபின் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சொன்னார் ஷகிப் அல் ஹசன். 


பொதுவாக ஹர்ஷா, ஐ.சி.சி-க்கு எதிராகவும், பி.சி.சி.ஐ-க்கு எதிராகவும் ஹார்ஸாக பேச மாட்டார்.  டி-20 உலகக் கோப்பையின்போது பி.சி.சி.ஐ-க்கு எதிராக அவர் சொன்ன கருத்து, கமென்ட்ரி பேனலில் இருந்து ஓராண்டு வரை அவரை தள்ளி வைத்திருந்தது. அதனால், எதையும் இலைமறை காயாகத்தான் விமர்சிப்பார். அவரே தற்போது, ஷகிப் அல் ஹசன், நுருல் ஹசன் இருவருக்கும் விதிக்கப்பட்ட அபராதத்தைப் பற்றியும், demerit புள்ளிகளைப் பற்றியும் பட்டவர்த்தனமாக விமர்சித்துள்ளார். நிச்சயம், இந்த பாரபட்சத்தைப் பற்றி விவாதிக்க வேண்டியது அவசியம். 

ஏனெனில், டர்பன் டெஸ்ட் போட்டியின்போது  டிரெஸ்ஸிங் ரூமுக்குச் செல்லும் வழியில் டி காக் - டேவிட் வார்னர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் டேவிட் வார்னர், டி காக்கை நோக்கி ஆவேசமாக பாய்ந்தார். டிம் பெய்னி உள்ளிட்ட ஆஸ்திரேலிய வீரர்கள் வார்னரைக் கட்டுப்படுத்த முயன்றனர். அப்போதும் வார்னரின் ஆவேசம் குறையவில்லை. கடைசியாக ஆஸி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், வார்னரை வம்படியாகப் பிடித்து இழுத்து அறைக்குக் கூட்டிச் சென்றார். இந்த சம்பவத்தை விசாரித்த ஐ.சி.சி, டேவிட் வார்னருக்கு மூன்று தகுதியிழப்புப் புள்ளிகள், போட்டி சம்பளத்தில் 75 சதவீதம் அபராதம் விதித்தது. டி காக்குக்கு 25 சதவீதம் அபராதத்துடன், ஒரு தகுதியிழப்புப் புள்ளி வழங்கியது. 

Rabada

அதன்பின், போர்ட் எலிசபெத் டெஸ்ட் போட்டியின்போது, முதல் இன்னிங்ஸில் ஸ்டீவ் ஸ்மித் விக்கெட்டை எடுத்த ரபாடா, ஸ்டீவ் ஸ்மித்தைக் கடந்து செல்லும்போது தோள்பட்டையில் உரசிச் சென்றார். இதற்காக ரபாடாவுக்கு மூன்று தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டது.  கடந்த ஒன்பது மாதங்களில் அவர் ஒட்டுமொத்தமாக 9 demerit புள்ளிகளைப் பெற்றுவிட்டதால் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடை குறித்து பேசிய தென்னாப்பிரிக் கேப்டன் டு பிளெஸ்ஸி, ``டேவிட் வார்னருக்கும் லெவல் 2 பிரிவின் கீழ் மூன்று புள்ளிகள் வழங்கப்பட்டது. ரபாடாவுக்கும் அதே பிரிவில் மூன்று புள்ளிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு சம்பவத்தையும் உன்னிப்பாக கவனித்தால் ஒரு விஷயம் புரியும். ரபாடா - ஸ்மித் விவகாரத்தில் கிட்டத்தட்ட சட்டை உரசிக்கொள்வது போன்ற சூழல்தான் நிலவியது.  வார்னர் - டி காக் விஷயத்தில் அப்படியல்ல. வார்னர் ஆக்ரோஷமாக இருந்தார். அப்படியிருக்க இந்த இரண்டு சம்பவங்களையும் ஒரே பிரிவில் வகைப்படுத்துவது எந்த வகையில் நியாயம்?’’ என்றார். அவர் கேட்பதும் நியாயம்தானே?

ஐ.சி.சி எதன் அடிப்படையில் இந்த தகுதியிழப்புப் புள்ளிகளை வழங்குகிறது?ஆஸ்திரேலியர்களின் ஸ்லெட்ஜிங்கை விடவா ரபாடா உணர்ச்சிவசப்பட்டது தவறு என்ற சந்தேகங்களும் கேள்விகளும் ரசிகர்கள் முன் எழுந்துள்ளன. முறைதவறி நடந்துகொண்ட வங்கதேச வீரர்களுக்கு ஐந்து தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கி, அந்த அணிக்கும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்க வேண்டும் என்பதே, இலங்கை - வங்கதேசம் போட்டியைப் பார்த்த பெரும்பாலான ரசிகர்களின் கருத்து. அத்துடன் `ரபாடா பாவம்... ஆஸ்திரேலியா இந்த டெஸ்ட் தொடரை வெல்வதற்காக, தென்னாப்பிரிக்காவின் முக்கிய பெளலர் பலிகடாவாக்கப்பட்டார்’ என்ற பரிதாபமும் எழுந்துள்ளது. ஒருவகையில் அது உண்மையும் கூட.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!